Wednesday, April 20, 2011

ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?

ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உயிருடன் சமாதி ஆகப் போவதாக தகவல் பரவியதால் பக்தர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை, பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என பிரசாந்தி நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீசத்ய சாய்பாபா. ஆன்மீக குருவாகத் திகழும் இவர், பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.

புட்டபர்த்தி என்ற வறண்ட குக்கிராமத்தை, இன்று உலகம் முழுக்க தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாய்பாபாவுக்கே உண்டு. அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றை ஒன்றுமில்லாமல் செய்தது, அவர் ஆற்றிவரும் சமூகப் பணிகள்.

சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது. அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார்.

சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார்.

இந்த நிலையில், சாய்பாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்ட பர்த்தியில் உள்ள சத்யசாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருக்கு சீறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம்தாந் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாய்பாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே சாய்பாபா ஜீவசமாதி (உயிருடன் மண்ணில் புதைத்தல்) அடையப் போவதாக தகவல் பரவியது. சாய் சேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக் காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாய்பாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும், இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

பக்தர்கள் கண்ணீர்...

இது புட்டபர்த்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாய்பாபா சீடர்களும், ஏராளமான பக்தர்களும் ஆஸ்பத்திரி முன் திரண்டனர். தெருக்களில் சாய்பாபா படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாய்பாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்து வேறுபாடு

இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாய்பாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.

சாய்பாபா ஜீவ சமாதி அடையப் போவதாக வெளியான செய்திகூட, ரத்னாகர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 19, 2011

தினசெய்தி:ஜேம்ஸ்பாண்டு  கார்கள்  இந்தியாவில் அறிமுகம்

தினசெய்தி:ஜேம்ஸ்பாண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகம்ஜேம்ஸ்பாண்டு படங்களில் புயல்வேகத்தில் பறக்கும் அஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


பிரிட்டனை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன் ஸ்போர்ட்ஸ் கார்கள் ஜேம்ஸ்பாண்டு படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் ஸ்போரட்ஸ் கார் மார்க்கெட் வளர்ச்சியை கண்டு, அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் நடந்த விழாவில் வி8 வென்டேஜ் மற்றும் ராபிட் உள்ளிட்ட அனைத்து கார் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ள அஸ்டன் மார்ட்டின், பெர்பார்மன்ஸ் கார்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக நியமித்துள்ளது.

இதுகுறித்து பெர்பார்மன்ஸ் கார்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," மும்பையை தொடர்ந்து, அடுத்த மாதம் இறுதியில் டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறக்க உள்ளோம். அஸ்டன் மார்ட்டின் கார்களை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ரூ.1.35 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான விலையில், அஸ்டன் மார்ட்டின் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது," என்றார்.

Monday, April 18, 2011

எடையை குறைப்பது மூளைக்கு நல்லது

எடையை குறைப்பது மூளைக்கு நல்லதுஉடல் எடையைக் குறைப்பது உடல் ஆராக்கியத்துக்கும், தோற்றத்துக்கும் மட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடையைக் கணிசமான அளவு குறைப்பது என்பது ஞாபக சக்தி மற்றும் ஒரு விடயத்தில் தீவிரக் கவனம் செலுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கென 150 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோரும் 21 கல்(ஒரு கல்=11 இறாத்தால்) எடைக்கு மேல் கொண்டவர்கள். ஆரோக்கியமான மக்களோடு இவர்கள் ஒப்பிடப்பட்டனர். இதில் எடை கூடியவர்களுள் கால்வாசிப் பேர் ஞாபக சக்தி சோதனையில் மிகக் குறைவான புள்ளிகளையே பெற்றனர்.
கற்றல், ஆற்றல் குறைவானவர்களை ஒத்ததாகவே இவர்களின் ஞாபக சக்தி ஆற்றல் அமைந்திருந்தது. இவர்களுள் பலருக்கு மேலதிக சுகாதாரப் பிரச்சினையும் காணப்பட்டது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உறக்கமின்மை என்பன இந்த சுகாதாரப் பிரச்சினைகளுள் சிலவாகும். ஆரம்பக் கட்ட சோதனைகளின் பின் ஆய்வில் பங்கேற்றவர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் வாயுக் கோளாறுக்கான சத்திர சிகிச்சை செய்து கொண்டு தமது தொப்பையின் அளவைக் குறைத்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் கணிசமான அளவு எடையையும் குறைத்துக் கொண்டனர். 12 வாரங்களின் பின் இவர்கள் ஞாபக சக்தி உட்பட இன்னும் பல ஆற்றலில் முன்னரிலும் பார்க்க சிறந்து காணப்பட்டனர்.
ஆனால் இந்த ஆய்வில் கலந்து கொண்ட பின்னரும் எடை குறைப்பில் எந்த ஆர்வமும் காட்டாதவர்களின் நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 17, 2011

முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் பறவை

முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் பறவை


‘புளோவர்’ என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது.

முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது. இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும்.

முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வதில்லை. தன் பற்களை பறவை சுத்தம் செய்வதற்காக பொறுமை யாகக் காத்திருக்கிறது. அதே நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு கிடைத்து விடுகிறது.

இதேபோல் கடல் மீன்களைச் சுத்தப்படுத்தும் ஒருவகை மீன் உள்ளது. அவை ஒரு கோஷ்டியாக இருக்கும். மீன்கள் தம் உடலைச் சுத்தப்படுத்த இவற்றிடம் வருகின்றன. அவற்றின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள், காளான், பாக்டீரியா போன்றவற்றை சுத்தப்படுத்தும் மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துகின்றன. இவற்றின் வேலை முடியும் வரை பெரிய மீன்கள் பொறுமையாக ஒத்துழைக்கின்றன. சுறாமீன்கள் கூட இவ்வாறு தமது உடலைச் சுத்தம் செய்துகொள்கின்றன.
பெண் குழந்தை வேண்டுமர?

பெண் குழந்தை வேண்டுமர?பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டென்மார்க் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


பெண்கள் கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை உண்டால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் சில பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் பச்சைக் காய்கறி உண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதே சமயம் பொட்டாஷியம், சோடியம் அதிகமுள்ள வாழைப்பழம், உருளை அதிக அளவில் உண்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

சரியான உணவு உட்கொண்டால் விரும்பும் குழந்தையை பெறலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் கருத்தரிக்கும் நேரத்தில் நடக்கும் பிற விஷயங்களைப் பற்றி அவர்களால் நிச்சயமாக கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் 172 தம்பதிகளை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு கருத்தரிக்கும் முன் 9 வாரத்திற்கு கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பழம், காய்கறிகள், மாத்திரை கொடுத்தனர். அவர்கள் கருவுற்ற பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வில் இறுதி வரை கலந்து கொண்ட 32 தம்பதிகளில் 26 பெண்களுக்கு பெண்ணும், 6 பேருக்கு ஆண் குழந்தைகளும் பிறந்தன.

ஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பத்து மாசம்தான், பெத்தா எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாசம்தான். இதைப் புரிந்து கொண்டாலே போதும். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள்...

கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள்...கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம்.
மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகாது.
இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை டைப் செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் Answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்.
மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு. கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.
அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும். ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும்.