Sunday, May 29, 2011

கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்ள எதிர்ப்பு

கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்ள எதிர்ப்பு

இலங்கை நடத்தும் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சேலத்தில் மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் அடுத்த மாதம் சிறப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் தமிழக வீரர்கள் திணேஷ் கார்த்திக் மற்றும் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை நடத்தும் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வழக்கறிஞர் மாணவர் கூட்டமைப்பு தலைவர் பார்த்திபன், இலங்கையில் நடைபெறும் போட்டியில் தமிழக வீரர்கள் பங்கேற்கக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
கோர்ட்டில் பெண் வக்கீல் சுடப்பட்டார்

கோர்ட்டில் பெண் வக்கீல் சுடப்பட்டார்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோர்ட்டில் ஆஷா ராணி சர்மா (வயது 42) என்ற பெண் வக்கீல், துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் சில கோப்புகளை வாங்குவதற்காக, மற்றொரு வக்கீலின் அறைக்கு சென்ற போது, 7 மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்தனர். முதலில், பெண் வக்கீலை கத்தியால் குத்தினர். பிறகு, தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டனர்.


படுகாயம் அடைந்த பெண் வக்கீல், பரிதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, வக்கீலின் மகன் பவன், போலீசில் புகார் செய்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கோவில் தொடர்பான தகராறில் இத்தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடிக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று வக்கீல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலத் தேர்தல் ஆணையாளராக சோ. அய்யர் நியமனம்

மாநிலத் தேர்தல் ஆணையாளராக சோ. அய்யர் நியமனம்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சனிக்கிழமை வெளியிட்டார்.
மே 27-ம் தேதி அன்றும், அது முதற்கொண்டும் நடைமுறைக்கு வருமாறு இரண்டு ஆண்டு கால அளவிற்கு சோ. அய்யர் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக இருக்கும் வகையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆணை பிறப்பித்துள்ளார் என சாரங்கி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசில் மாநிலத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சையத் முனீர் ஹோடா, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சோ. அய்யர் மதுரை, கரூர் மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறையில் இவர் இயக்குநராக இருந்தபோது, கிராமப்புறங்களுக்கான மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழக அரசுக்கு 2 ஆண்டுகள் மத்திய அரசு விருது கிடைத்தது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் இணை இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
மதுக் கடைகளுக்கான உரிமத்துக்கு ஏலம் விடும் நடைமுறையில், கடைக்காரர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு குறைவான தொகைக்கே ஏலம் எடுப்பதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, கடைகளை அரசே ஏற்று நடத்தும் திட்டம் 2003-ல் அமலுக்கு வந்தது. இதை அரசு செய்ய முடியாது என்று பேசப்பட்ட சூழ்நிலையில், டாஸ்மாக் மூலமாக இக் கடைகள் நிர்வகிக்கப்பட்டன. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த சோ. அய்யர், கடைகளையும், பார்களையும் முறைப்படுத்தி சுமுகமான சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் இந்த ஆணையத்தின் பொறுப்பை சோ. அய்யர் ஏற்றுள்ளார்.