Thursday, June 1, 2017

சாம்பியன்ஸ் டிராபியை சிறப்பிக்கும் வகையில் டூடுளில் கிரிக்கெட் கேம்: கூகுள் அசத்தல்

சாம்பியன்ஸ் டிராபியை சிறப்பிக்கும் வகையில் டூடுளில் கிரிக்கெட் கேம்: கூகுள் அசத்தல்

புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரக்கெட் தொடர் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று முதல் தொடங்கவுள்ளதை அடுத்து கூகுள் நிறுவனம் விசேஷ டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் கிரிக்கெட் கேம் ஒன்றை கூகுள் நிறுவனம் டூடுளாக பதிவிட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதவுள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது. உலகின் முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க கூகுள் டூடுள்களை பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதுவரை டூடுள்களில் புகைப்படம், வீடியோ, ஜிஃப் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வந்த கூகுள் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை சிறப்பிக்க புதிய கிரிக்கெட் கேம் ஒன்றை பதிவிட்டுள்ளது.

அதன்படி டூடுளை கிளிக் செய்ததும் நத்தை மற்றும் பட்டுப்பூச்சுகள் கிரிக்கெட் விளையாடுவதை போன்று அந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறிய கேம் கூகுள் செய்வோரை பேட்டிங் செய்ய மட்டும் வழி செய்கிறது. மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் கேம் குழந்தைகளுக்கு மகிவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மேலும் ரன்களை குவித்து அவுட் ஆகும் பட்சத்தில் நீங்கள் குவித்த மொத்த ரன்களை பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அவுட்லுக் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

லண்டன்: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ‘கட் ஆப்’ தேதியான கடந்த 2015 செப்டம்பர் 30ம் தேதியன்று ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருந்த அணிகள் கலந்து கொள்கின்றன. அவை தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன. 12 லீக், 2 அரையிறுதி, ஒரு இறுதி போட்டி என மொத்தம் 15 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி வரும் 18ம் தேதி நடக்கிறது.

இந்த தொடருக்கான மொத்த பரிசு தொகை 29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 14 கோடியும், இறுதி போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 7 கோடியும் பரிசாக கிடைக்கும். அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா ₹3 கோடி வழங்கப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் இரு அணிகளுக்கு தலா 58 லட்சம் கிடைக்கும். கடைசி இடத்துக்கு தள்ளப்படும் இரு அணிகள் தலா ₹39 லட்சத்தை பெறும். லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கத்துக்குட்டி என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்து வரும் வங்கதேசம் முன்னணி அணிகளுக்கு பல முறை அதிர்ச்சியளித்துள்ளது.

கடந்த 2015 உலக கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்த வங்கதேசம் மீண்டும் அந்த ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ெதாடரை 2-1 என கைப்பற்றிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து களமிறங்கும். சொந்த மண் என்பது கூடுதல் பலம். இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
வின்னர் ஆகுமா விராத் & கோ?

வின்னர் ஆகுமா விராத் & கோ?




மினி உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி, பட்டையை கிளப்பி கோப்பையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கோடிக் கணக்கான ரசிகர்களின் விருப்பம்...! கனவு நிறைவேறுமா? அதற்கான வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஜூன் 4ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அடுத்து இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகளின் சவாலை சமாளிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும் கிட்டத்தட்ட ‘நாக் அவுட்’ என்பதால், ஆட்டத்தில் அனல்பறக்கும். அணியை அறிவித்தபோதே, ஐபிஎல்லில் அசத்திய பன்ட், கம்பீர், ரெய்னா போன்றவர்களை தேர்வு செய்யாதது ஏன்? அவ்வளவாக பார்மில் இல்லாத யுவராஜ், டோனியை தேர்வு செய்துதான் ஆக வேண்டுமா என்று கேள்விக் கணைகள் தேர்வாளர்களை நோக்கி பாய்ந்தன.

மினி உலக கோப்பைக்கான அணியில் தவான், ரகானே, கார்த்திக் ஆகியோர் மட்டுமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்கள். கேப்டன்களாக களமிறங்கிய கோஹ்லி, ரோகித் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. பந்து வீச்சில் புவனேஷ்வர், பூம்ரா, உமேஷ், ஷமி கூட்டணி, மிதவேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியான இங்கிலாந்தில் விக்கெட் வேட்டை நிகழ்த்தலாம். சுழலில் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி மீண்டும் தூள் கிளப்பலாம். ‘அடுத்த கபில்தேவ்’ என வர்ணிக்கப்படும் ஹர்திக் பாண்டியா, வாய்ப்பு கிடைத்தால் அசத்தக் காத்திருக்கிறார். ரோகித், விராத், ரகானே போன்றவர்கள் இங்கிலாந்து மண்ணில் பவுண்டரி, சிக்சர் மழை பொழியலாம். இவர்களோடு கேதார், யுவராஜ், டோனி என்று அதிரடிக்கு பஞ்சம் இல்லாததால், இந்திய பேட்டிங் வரிசை மிரட்டலாகவே தெரிகிறது.

பி பிரிவில் தென் ஆப்ரிக்காவை அலட்சியப்படுத்த முடியாது. டி வில்லியர்ஸ், அம்லா, டு பிளெஸ்ஸி, டுமினி என அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர். பேட்டிங்கில் அதிரடி காட்டும் இவர்களை கட்டுப்படுத்துவது இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய சவால். நாங்களும் போட்டியில் இருக்கிறோம் என்று பாகிஸ்தான், இலங்கையும் வரிந்துகட்டுகின்றன. 2 வெற்றி கட்டாயம் என்பதால், லீக் சுற்றிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. நீண்ட உள்ளூர் சீசனுக்குப் பிறகு, வெளிநாட்டு மண்ணில் இந்தியா விளையாடுகிறது. நமது அணி இங்கிலாந்தில் எப்போதுமே சிறப்பாக செயல்படும். ரசிகர்களின் சாய்ஸ் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்றாலும், களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தினால் விராத் & கோ கோப்பையை தக்கவைக்கலாம். வாழ்த்துக்கள்.
சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்: களத்தில் இந்தியா, ஆஸி. உள்ளிட்ட 8 அணிகள்

சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்: களத்தில் இந்தியா, ஆஸி. உள்ளிட்ட 8 அணிகள்


கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.


மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த முறை கோப்பையை வெல்வதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர்.
2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வாகை சூடியபோது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 9 பேர் இந்த முறையும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு பயிற்சி ஆட்டங்களிலும் அபாரமாக ஆடியுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (ஜூன் 4-ஆம் தேதி) பாகிஸ்தானை சந்திக்கிறது. ஐசிசி போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. அந்த சாதனையை இந்த முறையும் தக்கவைப்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.
கோப்பையை தக்கவைக்குமா?
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் முறையாக பெரிய போட்டியில் தலைமை வகிக்கிறார். எனவே அவருக்கு இந்தத் தொடர் முக்கியமான ஒன்றாகும். அதனால் இதில் வெல்வதற்கு அவர் தீவிரம் காட்டுவார்.
இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கவுள்ள ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி, கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம்.
இதுதவிர கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மிரட்டும் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணியும் முழு பலத்தோடு களம் காண்கிறது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கிறிஸ் லின், கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஃபிஞ்ச், மேத்யூ வேட் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்னர்.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் போன்றோரும், சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவும் பலம் சேர்க்கின்றனர். நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடும்.
அதிர்ஷ்டம் கை கொடுக்குமா?
அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஹஷிம் ஆம்லா, டேவிட் மில்லர், குயின்டன் டி காக், பெஹார்டியன், டூபிளெஸ்ஸிஸ் போன்ற பேட்ஸ்மேன்களும், ஜே.பி.டுமினி, கிறிஸ் மோரீஸ், பெலுக்வாயோ போன்ற ஆல்ரவுண்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், காகிசோ ரபாடா, பிரிட்டோரியஸ், மோரீஸ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர், கேசவ் மகாராஜ் ஆகியோரையும் நம்பியுள்ளது தென் ஆப்பிரிக்கா.
எனினும் தலைசிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த முறையாவது அந்த அணியை துரதிருஷ்டம் விட்டுவைக்குமா என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இங்கிலாந்தின் குறை தீருமா? சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
ஆல்ரவுண்டர் இடத்தில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லே போன்றோர் நம்பிக்கையளிக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், லியாம் பிளங்கெட் போன்றவர்களும், சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித்தும் பலம் சேர்க்கின்றனர். இதுவரை ஐசிசி சார்பில் நடைபெறும் 50 ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை சொந்த மண்ணில் தீர்க்குமா?
கணிக்க முடியாத பாகிஸ்தான்: நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் கேன் வில்லியம்சன், ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் போன்றவர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அமையும்.
பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. இலங்கை, வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. ஐசிசி போட்டிகளில் தவிர்க்க முடியாத அணியாகத் திகழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறவில்லை.
ரூ.29 கோடி பரிசு
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.14 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடியும் வழங்கப்படும்.
அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும், குரூப் சுற்றின் முடிவில் 3-ஆவது இடம்பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.58 லட்சமும், 4-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.39 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
இங்கிலாந்து-வங்கதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டம் லண்டனில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் களம் காணுகிறது.
வங்கதேச அணி சமீபகாலமாக கணிக்க முடியாத வகையில் ஆடி வருகிறது. எனினும் இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.
போட்டி நேரம்: பிற்பகல் 3
தமிழில் ஒளிபரப்பு
சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சமீபத்தில் தமிழிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு பிரிவுகள்
போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் ஏ, பி, என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை சாம்பியன்கள்
1998 தென் ஆப்பிரிக்கா
2000 நியூஸிலாந்து
2002 இந்தியா-இலங்கை கூட்டுச் சாம்பியன்
2004 மேற்கிந்தியத் தீவுகள்
2006 ஆஸ்திரேலியா
2009 ஆஸ்திரேலியா
2013 இந்தியா
கிறிஸ் கெயில் 791
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். 2002 முதல் 2013 வரையிலான காலங்களில் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள கெயில் 3 சதங்களுடன் 791 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை முன்னாள் கேப்டன்களான மஹேல ஜெயவர்த்தனா (742), குமார் சங்ககாரா (683) ஆகியோர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.
நாதன் ஆஸ்ட்லே 145*
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் நாதன் ஆஸ்ட்லே, ஜிம்பாப்வேயின் ஆன்டி ஃபிளவர் ஆகியோர் தலா 145 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்தபடியாக முன்னாள் இந்திய கேப்டன்களான கங்குலி, சச்சின், முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் ஆகியோர் தலா 141 ரன்கள் குவித்துள்ளனர்.
கிறிஸ் கெயில் 474
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 474 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஷிகர் தவன் 363 ரன்களுடன் 2-ஆவது இடத்திலும், செளரவ் கங்குலி 348 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த பார்ட்னர்ஷிப்
2009-இல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்-ரிக்கி பாண்டிங் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 252 ரன்கள் குவித்ததே சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.
கைல் மில்ஸ் 28
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் முதலிடத்தில் உள்ளார். 2002 முதல் 2013 வரையிலான காலங்களில் 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 2-ஆவது இடத்திலும் (24 விக்கெட்டுகள்), இலங்கையின் லசித் மலிங்கா, ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ ஆகியோர் 3-ஆவது இடத்திலும் (22 விக்கெட்டுகள்) உள்ளனர்.
ஹாட்ரிக் நாயகன்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை மேற்கிந்தியத் தீவுகளின் ஜெரோம் டெய்லரையே சேரும். அவர் 2006-இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சிறந்த பந்துவீச்சு
2006-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மெஹரூஃப் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த பந்துவீச்சாக இன்றளவும் உள்ளது.
ஆல்ரவுண்டர் காலிஸ்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய ஆல்ரவுண்டர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 653 ரன்களும், 20 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
அபார வெற்றி
2004-இல் அமெரிக்காவுக்கு எதிராக 210 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி கண்டதே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஓர் அணி பெற்ற அபார வெற்றியாகும். இதேபோல் அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி எடுத்த 347 ரன்களே, சாம்பியன்ஸ் டிராபியில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
அதிக ரன் குவிக்கப்பட்ட ஆட்டம்
2013-இல் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தின்போது 636 ரன்கள் குவிக்கப்பட்டன. இதுதான் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவிக்கப்பட்ட ஆட்டம். இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லண்டனில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்.

மூலக்கதை படிக்க
சாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

சாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து


இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.


மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஏ, பி என இருப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே இன்று லண்டனில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள வங்கதேச அணியும் வெற்றிப்பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.
தோள் கொடுக்கும் தோனி * ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்

தோள் கொடுக்கும் தோனி * ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்



லண்டன்: ‘‘கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக ‘பினிஷிங்’ செய்து தர வேண்டும் என்றால், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். தோனியின் இந்த ஆலோசனை தான் எனக்கு கைகொடுத்தது,’’ என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
இந்திய அணியின் இளம் ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, 23. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள இவர், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றார். இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்ட பாண்ட்யா, 54 பந்தில் 80 ரன்கள் குவித்தார்.
இதுகுறித்து பாண்ட்யா கூறியது:
பயிற்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததற்கு சகோதரர் தோனி தான் காரணம். போட்டியில் கடைசி வரை நின்று, சிறப்பான முறையில் ‘பினிஷிங்’ செய்து தருவது எப்படி,’ என, அவரிடம் கேட்டேன்.
இதற்கு அவர்,‘ முதலில் அணியின் ஸ்கோரைப் பார்க்க வேண்டும். அடுத்து சூழ்நிலை எப்படி உள்ளது என கணிக்க வேண்டும். தேவையற்ற முறையில் நமக்கு நாமே நெருக்கடிகளை அதிகரித்துக் கொள்ளக் கூடாது. அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்க வேண்டும்.
தவிர, தனிப்பட்ட முறையில் வேறு எந்த நினைப்பும் இல்லாமல், போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அணிக்காக என்ன செய்ய முடியும் என, முடிவு செய்து, களத்தில் சற்று நிலைத்து நின்று, பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.’ என்றார். தோனியின் இந்த மிகச்சிறந்த ஆலோசனைகள் தான் எனக்கு பெரிதும் கைகொடுக்கிறது.
‘அட்ஜஸ்ட்’ முக்கியம்:
இந்திய சூழ்நிலையை விட இங்குள்ள நிலை, முற்றிலும் வேறுபாடானது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது, வானிலை மேகமூட்டமாக இருந்ததால் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆனது. பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இருந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது, வானம் தெ ளிவாக இருந்தது. ஆடுகளமும் கைகொடுத்ததால், அதிக ரன்கள் சேர்க்க முடிந்தது.
அதாவது இங்குள்ள சூழலுக்கு ஏற்பட, விரைவில் நம்மை மாற்றிக் கொள்வதைப் பொறுத்து தான் அணிக்கு உபயோகமாக இருக்க முடியும்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தக்கவைக்கும்

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தக்கவைக்கும்




மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் வியாழக்கிழமை இங்கிலாந்தில் தொடங்கவுள்ள நிலையில் சங்ககாரா மேலும் கூறியதாவது: சாம்பியன்ஸ் டிராபியில் இந்த முறை 4 ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. ஆசியாவைப் பொறுத்தவரையில் இந்திய அணிதான் முன்னணி அணியாக திகழ்கிறது. கடந்த முறை (2013-இல்) சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வாகை சூடியது. இந்த முறையும் கோப்பையை வெல்லும் தகுதி அந்த அணிக்கு உள்ளது. இந்திய அணி வலுவான அணியாகவும், சமபலம் கொண்ட அணியாகவும் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு மிக வலுவாக உள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஐபிஎல் போட்டியில் திணறிய விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீள்வது உறுதி.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம். அதேநேரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முந்தைய காலங்களில் ஒன்றிரண்டு அணிகளே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. அதனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிக்க முடிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான அணிகள் வலுவான அணிகளாக உருவெடுத்துள்ளன. தற்போதைய நிலையில் 4 அல்லது 5 அணிகள் சமபலம் கொண்டவையாக உள்ளன. அவையனைத்துமே பெரிய போட்டிகளில் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளன என்றார்.
தோனி... பாகிஸ்தான்... சாம்பியன்ஸ் டிராபி..! விராட் கோலி என்ன சொல்கிறார்?

தோனி... பாகிஸ்தான்... சாம்பியன்ஸ் டிராபி..! விராட் கோலி என்ன சொல்கிறார்?

ஐசிசி நடத்தும் 8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர், வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கடந்த 2013-ல், இதே இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில், தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இம்முறை நடப்புச் சாம்பியனாகக் களமிறங்கும் இந்தியா உள்பட ஐசிசி ரேங்கிங்கின் அடிப்படையில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள், இரு பிரிவுகளாகக் கலந்து கொள்கின்றன. ஏ பிரிவில் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம்) அணிகளும், பி பிரிவில் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை) அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்த்து, வருகின்ற ஜூன் 4-ம் தேதி விளையாட உள்ளது. பின்பு 8-ம் தேதியன்று இலங்கை, 11-ம் தேதியில் தென் ஆப்பிரிக்கா அணிகளைச் சந்திக்கிறது. ஜூன் 1, 2017 துவங்க உள்ள இத்தொடருக்கு முன்னதாக, அனைத்து அணிகளும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்தை வீழ்த்தி இருந்தது; இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில், வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி பற்றி மனம்திறந்துள்ளார். ''கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நாங்கள் சாம்பியன்ஷிப்பைப் பெற்றோம். அப்போது நாங்கள் தோனி தலைமையில், பல இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தோம்; அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது சரியான கலவையில் அணி அமைந்திருக்கிறது என்பதுடன், மனதளவில் போதிய முதிர்ச்சியையும் அடைந்துள்ளோம். ஏனெனில் கடந்த 4 ஆண்டுகளில், நாங்கள் அதிக அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். இதனால் சிறப்பான முறையில், இந்தத் தொடரை அணுக உள்ளோம்; தனிப்பட்ட முறையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஏனேனில் அதிகப்படியான சவால்களைக் குறிப்பதாகவே இது அமைந்துள்ளது. உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தமட்டில், அதிகளவில் சுற்றுப் போட்டிகள் இருக்கும். எனவே முதல் பாதியில் நிதானமாகச் செயல்பட்டு, இரண்டாம் பாதியில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில், அனைத்தும் குறைவான குழுப் போட்டிகளாகவே உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். ஆக வெற்றிபெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம்; தோல்வியடைந்தால் தொடரில் இருந்தே வெளியேற நேரிடும்'' என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனியைப் பற்றிப் பேசும்போது, ''அணியின் நடுவரிசை பேட்டிங் சற்று பலவீனமாக இருந்ததாலேயே, கடந்த இரு வருடங்களில் தோனிக்கு அதிக சுமை ஏற்பட்டிருக்கிறது. டாப் ஆர்டரில் ஒருவர் நிலைத்து நின்று ஆடி, பலமுறை அவருடன் இணைந்து, எப்படிப்பட்ட போட்டியையும் வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தோனிக்கு பின்பு, நடுவரிசையில் வலுவான வீரர்கள் இல்லை. எனவே நான் கேப்டனான பின்பு, அதை பலப்படுத்துவதுதான் முதல் குறிக்கோளாக இருந்தது இந்த காரணத்தாலேயே தோனியால், பேட்டிங்கில் சுதந்திரமாக விளையாட முடியவில்லை. அவர் தன்னைக் களத்தில் வெளிப்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தோம். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவின் வருகைக்குப் பிறகு, தற்போது நாங்கள் சமபலம் அடைந்துள்ளோம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் வென்றதற்கு இதுதான் காரணம். ஒருவர் உலகின் ஆகச்சிறந்த அணியாக இருக்கலாம்; ஆனால் களத்தில் அவர் சிறப்பாகச் செயல்படாவிட்டால், அத்தகைய திறமைக்கு எவ்வித மதிப்பும் இல்லை. இதுபோன்ற முக்கியமான தொடர்களில், போட்டி நடைபெறும் நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான், அனைத்தும் அடங்கி இருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

அணி பற்றியும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகளைப் பற்றியும், விராட் கோலி கூறியதாவது, ''இந்தியாவைப் பொறுத்தவரை, அணி சமபலத்துடன் உள்ளது; எனவே சாம்பியன்ஸ் டிராபியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பேட்டிங்கில் போதுமான ஆழம் உள்ளது; பந்து வீச்சில் நல்ல வேகப்பந்து வீச்சைக் கொண்டுள்ளோம். முதலில் நாங்கள் நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே எங்களுக்கான முதல் சவாலாகப் பார்க்கிறேன். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி போட்டிக்கு செல்லும்போது ஓர் இளம் அணியாக ஒற்றுமையுடன் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அத்தொடரின் முடிவில், சிறப்பாக ஆடி வெற்றி பெற்று, ஓர் திறமையான அணியை உருவாக்கினோம்; கிட்டத்தட்ட அதே அணிதான் தற்போதும் உள்ளது. ஆனால் அதில் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, எப்போதுமே ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். அவர்களுக்கு இது வேறுபட்டதாக இருக்கும்.எங்களைப் பொறுத்தவரை அது மற்ற அணிகளுடனான போட்டியைப் போன்றதுதான். ரசிகர்கள் தங்களது சொந்த மனநிலையுடன் போட்டிக்கு வருவார்கள். அனைவரையும் மதிப்பது அவசியம்தான்.

ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக, எதிர்முனையில் இருக்கும் நமது பங்குதாரர் குறித்து அதிகம் நினைக்க முடியாது. இது விளையாட்டில் மட்டுமே! எங்களது தலைகளில், எவ்வித மாற்றமும் ஏற்படாது. அது அப்படியேதான் இருக்கும். ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக, நாங்கள் முதல்முறையாக ஒன்றும் விளையாடப் போவதில்லை. இதனால் கூடுதல் ஊக்கம் தேவை இருக்காது” எனப் பேசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை, 3 முறை மோதியிருக்கின்றன. இதில் பாகிஸ்தான் இரு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் வெற்றியானது, கடந்த 2013-ம் ஆண்டில், தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தொடரில் கிடைத்தது கவனிக்கத்தக்கது.