Saturday, June 24, 2017

Friday, June 23, 2017

Thursday, June 22, 2017

Wednesday, June 21, 2017

Tuesday, June 20, 2017

Monday, June 19, 2017

Sunday, June 18, 2017

ஃபேவரைட் இந்தியா... கணிக்கமுடியாத பாகிஸ்தான்.. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது எப்படி?

ஃபேவரைட் இந்தியா... கணிக்கமுடியாத பாகிஸ்தான்.. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது எப்படி?

Cinque Terre

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கணிக்கமுடியாத பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கியது. தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் தொடரில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிகரமாக தொடரைத் தொடங்கியது. ஆனால், அடுத்த போட்டியில் இலங்கை அணி  இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தும், வெற்றிபெற முடியவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை 191 ரன்களில் சுருட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அரையிறுதி இடத்தை உறுதி செய்தது இந்திய அணி. அரையிறுதியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் வங்கதேசத்தை எளிதாக எண்ணக் கூடாது என்று கவனமாகவே வார்த்தைகளை உதிர்த்தார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. அதேநேரம் நெருக்கடி என்பது எங்களுக்கில்லை, இந்திய அணிக்குத்தான் என்று வங்கதேச கேப்டன் மொர்டாசா கூறினார். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. முதலில் பேட் செய்த வங்கதேசம் 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எளிதாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகம்தான் என்ற நிலையில் தொடரில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதற்கேற்றார்போல் முதல் போட்டியில் இந்திய அணியிடன் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்தது பாகிஸ்தான். ஆனால், அந்த போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் திடீர் எழுச்சி அந்நாட்டு ரசிகர்களே எதிர்பார்க்காதது. முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, கடும் நெருக்கடிக்கு இடையில் தனது 2ஆவது போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 220 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் வீறுநடை நடை போட்டது. 27 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் பாகிஸ்தான் குவித்திருந்தபோது, மழை குறுக்கிடவே, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியை வீழ்த்தி புது உற்சாகத்துடன் இருந்த இலங்கை அணியை பாகிஸ்தான் அடுத்ததாக எதிர்கொண்டது. பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றுதான் கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நடப்பு தொடரில் அதுவரை தோல்வியே சந்திக்காத பலமான இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டிய நிலை  சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இறுதியில் அந்த சோதனையிலும் சர்ஃப்ராஸே வென்றார். சொந்த மண்ணில் கெத்து காட்டிய இங்கிலாந்து அணியை அநாயசமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக பாகிஸ்தான் முதல் அணியாகத் தகுதிபெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி கோப்பையுடன் விமானம் ஏற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறது.
இந்தியாவை பழிதீர்க்க இதுவே சரியான தருணம்: பாக். முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்

இந்தியாவை பழிதீர்க்க இதுவே சரியான தருணம்: பாக். முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்

Cinque Terre

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியாவை பழிதீர்க்க இறுதிப் போட்டியை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முதல் போட்டியில் இழந்த பெருமையை மீட்க நமக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த போட்டியில் அடைந்த தோல்வி மனவலியைத் தந்தது. டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணியே முதலில் பேட் செய்ய வேண்டும். இந்திய அணிக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது. இந்திய அணி சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால், மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். மற்ற அணிகளுக்கு எதிராக சேசிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் வியூகம் கைகொடுத்திருக்கலாம், ஆனால் அந்த வியூகம் இந்திய அணிக்கு எதிராக எடுபடாமல் போகலாம் என்பதே எனது கணிப்பு என்று அவர் கூறியுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: வரலாறு யார் பக்கம்?

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: வரலாறு யார் பக்கம்?

Cinque Terre

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் உலக அளவில் அதிகம் பேர் பார்ப்பார்கள். கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இது. ஆனால் களத்தில் உண்மையான போட்டி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையேதான் இருக்கப் போகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பெரும்பாலான ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்பட போதுமான களம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் நாளைய போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக கவனம் பெறுவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். 
ஐசிசியால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி 2 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒருமுறை டி20 உலகக் கோப்பை மற்றும் 2 முறை சாம்பியன்ஸ் கோப்பை உள்பட 5 முறை வென்றுள்ளது. சமீபகாலங்களில் குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பாக பாகிஸ்தானின் கையே ஓங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 128 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 72 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 4 முறை மோதியுள்ளன. அதில் 3 முறை இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை இந்திய அணி விளையாடியுள்ள 14 போட்டிகளில் 5ல் வென்றுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை விட இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவே இருக்கிறது.
 
சர்வதேச ஒருநாள் தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில், இந்திய அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.  ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 18 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். 
பாகிஸ்தானில் இந்திய அணி ஒருபோதும் விளையாடாது.....அமித்ஷா

பாகிஸ்தானில் இந்திய அணி ஒருபோதும் விளையாடாது.....அமித்ஷா

Cinque Terre

இந்திய அணி பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் அணி இந்தியாவிலோ ஒரு போதும் விளையாடாது என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான நாளை கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்வது சாதாரண ஒன்று தான் என்றும், இதுகுறித்து சொல்வதற்கு ஏதுமில்லை என்றார். ஆனால் வெளிநாட்டு மண்ணில் தான் இந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்த விளையாட முடியும். பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணியோ இந்தியாவிற்கு வந்து பாகிஸ்தான் அணியோ ஒருபோதும் விளையாடாது என அமித்ஷா கூறியுள்ளார். இரு நாட்டிற்கு இடையேயான உறவுமுறை சீராக இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இரு நாட்டிற்கு இடையேயான போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
ஃபைனலுக்கு வருவோம்னு அப்பவே தெரியும்: அசார் முகமது

ஃபைனலுக்கு வருவோம்னு அப்பவே தெரியும்: அசார் முகமது

Cinque Terre
பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று முன்பே நம்பிக்கை இருந்தது என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் முகமது கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் பந்து வீச்சு பயிற்சியாளருமான அசார் முகமது கூறும்போது, ‘இந்தியாவை பலமுறை பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பலமாக இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்போது சூழ்நிலை மாறியிருக்கிறது. இது எங்களுக்கான நேரம். இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் நேரம் இது. தர வரிசையில் பாகிஸ்தான் அணி 8-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பைனலுக்கு யார் வருவார்கள் என்று கேட்டபோது, நான் பாகிஸ்தான் என்றேன். பாகிஸ்தான் வீரர்களும் அதை நம்பினார்கள். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. இந்தப் போட்டி ஆஷஸ் தொடரை விட பெரியது’ என்றார்.
இந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்!

இந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்!

Cinque Terre
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக ’ரோலண்ட் லேண்டர்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் ஒரு தோனி: மிஸ்பா கப்சா

பாகிஸ்தானிலும் ஒரு தோனி: மிஸ்பா கப்சா

Cinque Terre
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவிடம், தோனியின் சாயல் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், இந்திய அணி வீரரான தோனியின் சாயல், சர்ப்ராஸ் அகமதுவிடம் உள்ளது என கூறியுள்ளார். சாயலில் மட்டுமின்றி ஆட்டத்தின் போது பல திட்டங்களை வகுத்து தோனியை போல் சிறப்பாகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தோற்றத்திலும் ஆட்டத்திலும் பாகிஸ்தானிலும் ஒரு தோனி உள்ளார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ’தோனி தனித்தன்மையானவர். அவரைப் போல பாகிஸ்தான் கேப்டனால் நிச்சயம் செயல்பட முடியாது. இது மிஸ்பாவின் கப்சா’ என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை ஈசியா நினைக்கக் கூடாது: பும்ரா

பாகிஸ்தானை ஈசியா நினைக்கக் கூடாது: பும்ரா

Cinque Terre

பாகிஸ்தான் அணியை ஈசியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இந்தப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி.
பாகிஸ்தான் அணி திடீரென்று ஆக்ரோஷமாக கிளம்பியிருப்பது பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் கேட்டபோது, ’ கிரிக்கெட் ஜாலியான விளையாட்டு. இங்கு எதுவும் நடக்கும். இது இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. பாகிஸ்தான் அணி எப்போதுமே சிறந்த அணிதான். அவர்களுக்கான நேரம் வரும்போது எந்த அணியையும் அவர்கள் வெல்வார்கள். அதனால் எந்த அணியையும் ஈசியானதாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக பாகிஸ்தான் அணியை’ என்றார்.