Tuesday, December 25, 2018

Saturday, December 22, 2018

மாரி 2 - விமர்சனம்

மாரி 2 - விமர்சனம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாரி 2’ 2015ல் வெளியான ‘மாரி‘ படத்தின் இரண்டாம் பாகம். 

முதல் பாகம் கலவையான விமர்சனத்தை சந்தித்த விதத்தில் இந்தப் பாகம் எப்படி? முதல் பாகத்தில் நெருக்கடி கொடுத்த பொலிஸை கொன்றுவிட்டு மீண்டும் ஏரியாவை கைக்குள் கொண்டுவரும் மாரி (தனுஷ்) , நண்பன் கலை (கிருஷ்ணா) இருவரும் இணைந்து ரவுடீசம் பொருள் கடத்தல் என செய்துவருகிறார்கள். 

இதற்கிடையில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயலும் வக்கீல் ஒருவரை மாரி கொலை செய்ய வக்கீலின் தம்பி பீஜா (டோவினோ தாமஸ்) வெறியுடன் கிளம்பி வருகிறார். மேலும் மாரி காப்பாற்றிய பெண்ணின் தங்கை ஆனந்தி (சாய் பல்லவி) மாரியின் மீது காதல் கொள்கிறார். 

டோவினோ தாமஸ் திட்டம் என்ன ஆனது, ஆனந்தியின் காதல் கைகூடியதா, இதற்கு விடை பரபர , சவுண்டு ஸ்பெஷல் கிளைமாக்ஸ். தனுஷ் சிக்ஸ் பேக், ஜாலி ரவுடீசம் ஏரியா அட்ராசிட்டி, என மாஸ் காட்டுகிறார். 

ஒருதலைக் காதலால் விரட்டும் ஆனந்தியிடம் பம்முவது, எதிரிகளை பந்தாடுவது என கமர்சியல் நாயகனாக தனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். ‘இன்னா டார்லிங் உன்னையே சுத்தி சுத்தி வரேன்ல எதுனா பார்த்து செய்யேன்’, ‘அடச் சை.. இப்போ பார்த்தா போட வருவ’ என படம் முழுக்க சென்னை தமிழில் மலர் டீச்சரா இது என ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார். 

சாய் பல்லவி. ‘ரவுடி பேபி‘ பாடலில் பிரபுதேவாவின் நடனத்தை அப்படியே கொண்டுவந்து அப்ளாஸ் அள்ளுகிறார். எனினும் எல்லாம் ஓகே ஆனால் ஹீரோயினா சாய் பல்லவி அவ்வளவு சிறப்பா இல்லையே என மைண்ட் அலாரம் அடிக்கிறது.

‘சனிக்கிழமை‘ ரோபோ ஷங்கர், ‘அடிதாங்கி‘ வினோத் இருவரும் முந்தைய பாகம் போலவே போராடிக்காமல் படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார்கள். தம்பியை இழந்து கதறி அழுவது, நண்பனை பார்க்க முடியாமல் தலை குனிவது என கிருஷ்ணா தன் பங்கை சிறப்பாக கொடுத்திருக்கிறா. 

கலெக்டராக வரலட்சுமி பாந்தமாக நடிப்பதுதான் நெருடலாக இருக்கிறது. இந்தப்பொண்ணுக்கு இதெல்லாம் செட் ஆகாதுப்பா சும்மா பட படணு பேசி முறைத்தால்தானே வரு என தோன்றுகிறது. முந்தைய பாகத்தில் விஜய் ஏசுதாஸ், இந்தப்பாகத்தில் டோவினோ தாமஸ், தனுஷ் படங்கள் என்றாலே சமீப காலமாக ஹேண்ட்சம் நடிகர்கள் வில்லனாக வருவது டெம்ப்லேட் ரகமாகிவிட்டது. 

இதை மாற்றியே ஆகவேண்டும். எனினும் பீஜா கேரக்டரில் டாட்டூ, சடை முடி அதன் பின் பளிச் அரசியல் வாதி என டொவீனோ சாக்லேட் பாய் தோற்றத்தை சற்றே உடைத்திருக்கிறார். அவருடைய மலையாளத் தமிழ் கொஞ்சம் கேரக்டரை பூஸ்ட் பண்ணுகிறது. 

யுவனின் பின்னணி தாருமாறு , ‘ரவுடி பேபி’ ரசிகர்களுக்கு இசைவிருந்து எனில் ‘மாரி‘ஸ் ஆனந்தி’ காதுகளில் தேன். ‘தென்றல் வந்து‘ பாடலை கொஞ்சம் ஞாபகம் படுத்துவது பலம். ஆனாலும் ‘மாரி‘ என்றாலே முந்திக்கொண்டு வரும் அனிருத்தின் ‘ஏய் ஜிந்தா, ஏய் ஜிந்தா’ என்னும் மாஸ் இசைதான். இந்தப்பாகத்தில் அது மிஸ் ஆகிறது.

பாடல் காட்சிகள், தனுஷ்- டொவீனோ சண்டைக்காட்சிகள், கடத்தல் என ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கமர்சியல் கலராக தனித்துவம் பெருகிறது. ‘இப் யூ அர் எ பேட், ஐயம் யுவர் டேட்’ இதே டயலாக் அப்படியே இன்று வெளியான இன்னொரு படத்தில் இருப்பதால் மனதில் திடீர் கிலி அடிக்கிறது. மாஸாக சென்றுகொண்டிருக்கும் ‘மாரி 2’ இடைவேளைக்குப் பிறகு ‘தங்கமகன்‘ படம் ஓடுகிறதா என கேட்க வைக்கிறது. வேகம் குறைந்து கதை நகர முக்குகிறது. அதைக் குறைத்திருக்கலாம். எனினும் ‘மாரி‘ முந்தைய பாகத்தை விட சற்றே அடுத்த லெவலை எட்டிப்பிடித்து அதை விட இந்த பாகம் ஓகே என சொல்ல வைத்திருக்கிறது மாரி 2. 

‘மாரி 2‘ தனுஷ் ரசிகர்களுக்கு ரசனை
உடைப்பெடுத்தது மண் அரண் – அச்சத்தில் மக்கள்....!

உடைப்பெடுத்தது மண் அரண் – அச்சத்தில் மக்கள்....!

கிளிநொச்சி உருத்திரபுர மேற்குகில் வெள்ள இடர்களில் போது, ஊர் மக்களின் காப்பரணாக இருந்த மண் அரண் மழை காரணமாக உடைப்பெடுத்துள்ளது.

ஊர் மக்கள் மற்றும் கிராம அலுவலர் ,கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வரம்பு கட்டு அரணைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். எனினும் வெள்ளம் கட்டுப்படுத்த முடியாது, உடைப்பெடுத்து ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.

இதனால் ஊர்மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளனர்.
பிசிசிஐ-க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பிசிசிஐ-க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என பிசிசிஐ-க்கு எதிராக டெல்லியை சேர்ந்த கீதா ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மத்திய அரசு அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது என அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெரினாவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

சென்னை மெரினாவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
சென்னை மெரினாவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் செல்வம் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மெரினாவில் சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி தொழிலில் ஈடுபட்டிருந்தவர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரை வெல்லப் போவது யார்? விண்டிஸ்- பங்களாதேஷ் மோதல்!

தொடரை வெல்லப் போவது யார்? விண்டிஸ்- பங்களாதேஷ் மோதல்!

பங்களாதேஷ் மற்றும் விண்டிஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான T-20 போட்டி இரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பங்களாதேஷ் அணிக்கு சகிப் ஹல் ஹசனும், விண்டிஸ் அணிக்கு கார்லோஸ் பிரத்வெயிட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

இப்போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. ஆகவே இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை கைப்பற்றும்.

ஆகையால் இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் முழு வீச்சாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.
பிக் பஷ் T-20: சிட்னி தண்டர் அணி வெற்றி

பிக் பஷ் T-20: சிட்னி தண்டர் அணி வெற்றி

பிக் பஷ் T-20 லீக் தொடரின், மூன்றாவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கென் பெர்ரா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும், மெல்பேர்ன் ஸ்டாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ஸ்டாஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜேஸன் சங்ஹா ஆட்டமிழக்காது, 63 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் எடம் செம்பா மற்றும் சந்தீப் லெமைச்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி மெல்பேர்ன் ஸ்டாஸ் அணி, பதிலுக்கு களமிறங்க இருந்த வேளை, மழைக் குறுக்கிட்டது.

இதனால் போட்டி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 90 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்பேர்ன் ஸ்டாஸ் அணியால், 8 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் தண்டர் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் நிக் லார்க்கின் அணியின் அதிகபட்ச ஓட்டமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டேனியல் சேம்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டேனியல் சேம்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்க புதிய இடைக்கால குழு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்க புதிய இடைக்கால குழு

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை நிர்வகிப்பதற்காக இடைக்கால குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் பிற்போடப்படுமா என்பது குறித்து நிச்சயமாக தெரிவிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐசிசியும் முழு இலங்கையும் ஏற்கும் ஒருவர் இடைக்கால குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முன்னைய விளையாட்டமைச்சர் பெப்ரவரி 9 ம் திகதிக்குள் கட்டுப்பாட்டுச்சபையின் தேர்தல் இடம்பெறும் என தெரிவித்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஹரீன்பெர்ணான்டோ அடுத்த ஓரிரு நாட்களில் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபையின் பிரதிநிதிகளை சந்திக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துளளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினை ஊழல் அற்றதாக மாற்றுவதற்கு அதிக காலம் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
டிசம்பர் 29ல் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்

டிசம்பர் 29ல் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தல அஜித்துடன் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும், அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'கொலையுதிர்க்காலம்' என்ற திரைப்படமும் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அதற்கும் முன்னரே அதாவது டிசம்பர் 29ஆம் தேதி நயன்தாராவின் புதிய திரைப்படம் ஒன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

 கடந்த 2010ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த மலையாள திரைப்படம் 'எலக்ட்ரா'. நயன்தாராவுடன் பிரகாஷ்ராஜ், மனிஷா கொய்ராலா, பிஜுமேனன் உள்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஷ்யாம் பிரசாத் இயக்கியிருந்தார். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நயன்தாரா நடித்து வரும் 'ஐரா', சயிரா நரசிம்மரெட்டி ஆகிய படங்களும் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும், விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்திலும் அவர் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் நிரபராதிகள்: பிரித்தானியா

மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் நிரபராதிகள்: பிரித்தானியா

நாட்டின் இரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள றொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நிரபராதிகள் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரமி ஹண்ட் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”மியன்மாரில் ரோஹிங்கிய சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் குறித்து அறிக்கையிடச் சென்ற றொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மியன்மாரின் இச்செயற்பாடு கவலையடைச் செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டின் தரவுகளின்படி 70 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 326 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கருத்துரிமைக்கான சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
16 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் ரொறன்ரோவில் உள்ள தேவாலய போதகர் மீது குற்றச்சாட்டு!

16 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் ரொறன்ரோவில் உள்ள தேவாலய போதகர் மீது குற்றச்சாட்டு!

ரொறன்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றின் 51 வயதான போதகர் மீது பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், ஒக்டோபர் தொடக்கத்தில் மற்றும் நவம்பர் மாத இறுதியில் பாதிக்கப்பட்ட 16 வயது பெண் மூன்று தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றாரியோவை சேர்ந்த டேனியல் ஜோர்ஜ் என்ற குறித்த போதகர் மீது பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல் உட்பட மூன்று குற்றச்சாட்டுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணை விட மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனேடிய நிறுவனங்கள் இலக்கு வைத்த சீனாவின் ஹக்கர்ஸ்!

கனேடிய நிறுவனங்கள் இலக்கு வைத்த சீனாவின் ஹக்கர்ஸ்!

மதிப்புமிகுந்த தரவுகளை திருடும் சீனாவின் இணைய திருட்டு பிரசாரத்தில் கனேடிய நிறுவனங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பிரதான உளவுத்துறை சார்பில் செயற்பட்டுவரும் இணைய திருடர்களால் 12 நாடுகள் கனடா உள்ளடங்களாக பன்னிரெண்டு நாடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸு ஹுவா மற்றும் ஸங் ஷிலோங் ஆகிய இருவரும் உலக நாடுகளின் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்காக சீனாவின் பிரதான உளவுத்துறை சார்பாக செயற்பட்டு வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) குற்றம் சாட்டினர்.

இதேவேளை, கடந்த 2006 முதல் 2018ஆம் ஆண்டுவரை கனடா உள்ளிட்ட 12 நாடுகளின் 45இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணனிகன் ஊடுறுவப்பட்டுள்ளதாக தெரிவித்து நியூயோர்க் நகரின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் தொடரும் பதற்றம்!

இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் தொடரும் பதற்றம்!

இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையிலுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய பொலிஸார் அல்லது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதும் வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு கரை நகரில் அல்-பீரக் என்கிற இடத்திலுள்ள இஸ்ரேல் இராணுவ சோதனை சாவடி மீது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் காரை மோதி தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து இஸ்ரேல் இராணுவத்தினர் அந்த காரின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காரை ஓட்டி வந்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.

இதன்போது கிழக்கு ஜெருசலேமின் ராஸ் அல்-அமுவுத் பகுதியை சேர்ந்த அகமத் அப்பாசி (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் கோரா சம்பவம் - மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து 23 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கோரா சம்பவம் - மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து 23 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் டாங் மாவட்டத்திலுள்ள துல்சிபூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தின் டாங் மாவட்டம், கோராஹி பகுதியில் கிருஷ்ணா சென் இச்சுக் தொழில்நுட்ப பாடசாலை உள்ளது.

குறித்த பாடசாலை சார்பில் 37 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சல்யான் மாவட்டத்திலுள்ள தாவரவியல் பூங்காவிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை அருகிலிருந்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப் பகுதிகளில் நேற்றிரவு கடும் மழை கொட்டியது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், கிளிநொச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

அதேவேளை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக் குளம் ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில் திடீர் பெருமழையினால், அதிகளவு நீர் குளத்தில் சேர்ந்தது.

இன்று காலை நிலவரப்படி, இரணைமடுக் குளத்தின் நீர் சுமார் 40 அடியை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குளத்தின் அணைகளை மேவி நீர் பாய்வதுடன், அனைத்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

ஆனாலும், குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடுக் குளத்தில் இருந்து பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளத்தினால், கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களை பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வெள்ளத்தில் சூழ்ந்த கிராமங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகுகளில் மீட்கும் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் குமுழமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு கொட்டிய மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி நீர் வான்பாய்ந்து கொண்டிருப்பதால், வெள்ளி நிலை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதால், போக்குவரத்தும் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


இலங்கையுடன் நெருங்கிய இராஜதந்திர உறவை வலுப்படுத்த சீனா எதிர்பார்ப்பு!

இலங்கையுடன் நெருங்கிய இராஜதந்திர உறவை வலுப்படுத்த சீனா எதிர்பார்ப்பு!

சீனா இலங்கையின் சிறந்த நண்பராக விளங்கும் அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே நெருங்கிய இராஜதந்திர உறவை நிலைநிறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன தூதுவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கான இலங்கை மற்றும் சீன தூதுவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மொஸ்கோவிலுள்ள சீன தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் போதே சீன தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பொதுவான அரசியல், பொருளாதார விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர வன்முறைகளின் மூலமோ, அரசியல் செல்வாக்கின் மூலமோ நெருக்கடிகளை தீர்க்க முயலக் கூடாது என சீன தூதுவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் உலக சக்திகளின் அழுத்தம் என்பவற்றின் போது இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கியமைக்கு சீனாவிற்கு நன்றி பாராட்டினார்.
மஹிந்தவுக்கு பதவி வழங்க மறுப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஸ்ரீ.ல.சு.க

மஹிந்தவுக்கு பதவி வழங்க மறுப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஸ்ரீ.ல.சு.க

எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

“நாம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதற்கேற்றவாறு தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆகையால்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்கினோம்.

அதனைத் தொடர்ந்து நாம் எதிர்கட்சியில் அமர்ந்துள்ளோம். இதன்படி நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க் கட்சிக்குச் சென்றவர்தான் எதிர்கட்சி தலைவராக வரவேண்டும்.

ஆனால், இவ்விடயங்களை அறியாத ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன” என ரோஹண லக்ஷ்மன் பியதாச குற்றம் சுமத்தியுள்ளார்

Friday, December 21, 2018

11 வயது சிறுமியின் எதிர்காலத்தை சீரழித்த கர்ப்பமாக்கிய தாத்தா!

11 வயது சிறுமியின் எதிர்காலத்தை சீரழித்த கர்ப்பமாக்கிய தாத்தா!

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பிணியான 11 வயது சிறுமிக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 5,00,000 இந்திய ரூபாய் செலுத்த வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதார்கவுண்டர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறுமி கருவுற்று 5 மாதங்கள் கடந்தவிட்டதால் கருக்கலைப்பு செய்ய முடியாது என்றும், அப்படிச் செய்தால் சிறுமியின் உயிரிக்கே ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தமிழக உள்துறை செயலாளர் 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கர்ப்பமடைந்த சிறுமி தற்போது மதுரை ராஜாஜி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாழக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், கட்டடத் தொழிலாளியான இவரது 11 வயது மகள் விடுதியில் தங்கியபடி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பாடசாலையில் தரம் 7ஆம் வகுப்பில் கல்விகற்று வந்துள்ளார்.விடுமுறை நாட்களில் மட்டும் தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் சதீஷ் வேலை பார்க்கும் கட்டடங்களிலேயே காவலராக பணிபுரிந்த அதே பகுதியைச் சேர்ந்த மதார்கவுண்டர் என்பவர் சிறுமி வீட்டில் தனியே இருந்தபோது அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாடசாலை வகுப்பறையில் இருந்தபோது வயிற்று வலியால் துடித்த சிறுமி பலமுறை வாந்தி எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக வைத்தியர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், பெற்றோர் திண்டுக்கல் மகளிர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க குறித்த நபர்கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடைக்கால கணக்கறிக்கையில் வடக்கிற்கு 6.900 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இடைக்கால கணக்கறிக்கையில் வடக்கிற்கு 6.900 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று அமைச்சரவையில் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்காக 1,765 பில்லியன் ரூபா அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர,

2019 முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.

அமைச்சரவை பதவியேற்றதையடுத்து நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால கணக்கறிக்கை முதலாவது யோசனையாக நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வடக்கின் அபிவிருத்தி மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக 6.900 ஆயிரம் மில்லியன் ரூபாயும், ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக பொன்சேகா உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…!

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக பொன்சேகா உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளையும் வழங்க கூடாது என்ற முடிவில் ஜனாதிபதி தம்மை புறக்கணித்ததாக இன்றைய தினம்(21) சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றில் குறித்த மனுவினை தாக்கல் செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அரசாங்கமா? – அடுத்த வாரம் முடிவு

தேசிய அரசாங்கமா? – அடுத்த வாரம் முடிவு

தேசிய அரசாங்கத்தை அமைப்பதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தையே முன்னெடுடுத்துச் செல்வதா என்று அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவையில் 30 அமைச்சர்களையே நியமிக்க முடியும் என்பதால், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவியை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்தை அமைத்து, அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐ.தே.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்தவாரமே இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும், அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவா ??? சம்பந்தனா இன்று அறிவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவா ??? சம்பந்தனா இன்று அறிவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றம் சென்றமகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட அனைவரும், தொடர்ந்தும் தமது கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் ஐ.தே.க. வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

விரைவில் ஐ.தே.க. வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஐ.தே.க. உயர்மட்ட வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

அடுத்த 20 நாட்களுக்குள் இந்த விசாரணைகள் முடிவடையும் என்றும், அது முடிந்த பின்னர் கூடிய விரைவில் சட்டம் ஒழுங்கு அமைச்சு தமது கைக்கு வரும் என்றும் ஐ.தே.க. வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே சட்டம் ஒழுங்கு அமைச்சை வைத்திருந்த ரஞ்சித் மத்தும பண்டாரவிடமே மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது


அவர் தற்போது, பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் இயக்கத்தில் யோகிபாபு?

ஜெயம் ரவியின் இயக்கத்தில் யோகிபாபு?

ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலளித்தார். 

அதில் ஒரு ரசிகர் நீங்கள் இயக்குனர் ஆனால் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, 'நான் இயக்குனர் ஆனால் யோகிபாபுதான்' ஹீரோ என்று தெரிவித்தார். யோகிபாபு தற்போது காமெடி ரோலில் மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் சிம்ரன் என்றும், 'தனி ஒருவன் 2' திரைப்படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ஸ்கிரிப்ட் திருப்தியாக இருந்தால் பிற நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடிக்க தயார் என்றும், தான் நடித்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் 'பேராண்மை' என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜெயம் ரவி பதிலளித்தார்.

மேலும் தனக்கு பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு என்றும், தமிழ் திரையுலகில் தனது நெருங்கிய நண்பர்கள் சிபி, ஜீவா மற்றும் ஆர்யா என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜெயம் ரவி மேலும் பதிலளித்தார்
இலங்கையின் அரசியல் நெருக்கடி தீர்வு - அன்டோனியோ குட்ரஸ் வரவேற்பு

இலங்கையின் அரசியல் நெருக்கடி தீர்வு - அன்டோனியோ குட்ரஸ் வரவேற்பு

இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை ஐ.நா பொதுச்செயலர் பாராட்டுகிறார்.

ஜனநாயகத்தை மதிப்பது மற்றும் மக்களின் நலன்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளும், அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை நியமனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்: ஐ.தே.க

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்: ஐ.தே.க

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, இன்று (வெள்ளிக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளதாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற நீதியின் குரல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணி தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த கூட்டணியில், ஐக்கிய தேசிய கட்சியுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளன.

அதேவேளை இவ்விடயம் தவிர, இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளன.

Thursday, December 20, 2018

மிசிசாகா டன்டாஸ் ஸ்ட்ரீட் கிழக்கு பகுதியில் கத்திக்குத்து - ஒருவர் காயம்!

மிசிசாகா டன்டாஸ் ஸ்ட்ரீட் கிழக்கு பகுதியில் கத்திக்குத்து - ஒருவர் காயம்!

மிசிசாகா டன்டாஸ் ஸ்ட்ரீட் கிழக்கு மற்றும் டிக்ஸ வீதிப் பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 அளவில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாகவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு ஆண் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளானதையும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
இராமேஸ்வர மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

இராமேஸ்வர மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் கடுமையான நிபந்தனையுடன் ஊர்காவற்துறை நீதிமன்று விடுதலை செய்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி தமிழகம், இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் ஜெகாதப்பட்டனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மறுநாள் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். அதனையடுத்து நீரியல் வளத்துறையினரால் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதனையடுத்து எட்டு மீனவர்களையும் இன்றைய தினம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், இன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்திருந்தார்.

அதன்பிரகாரம் இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீனவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடற்சீற்றம் காரணமாகவே எல்லை தாண்டினார்கள் என மன்றுரைத்தார்.

அதனை அடுத்து நீதிவான் எட்டு மீனவர்களையும் கடுமையாக எச்சரித்ததுடன், மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.

அதேவேளை மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
ஸ்மித்திற்கு பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாட தடை!

ஸ்மித்திற்கு பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாட தடை!

பங்களாதேஷ் பிரிமீயர் லீக் போட்டியில் விளையாட அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பி.சி.பி. தடைவிதித்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பங்களாதேஷ்பிரிமீயர் லீக் T20 தொடரை நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சொயிப் மலிக் மலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது. இவர் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார்.

இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. இதுகுறித்து பி.சி.பி. தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில்,

"பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை.

ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
ரணிலை விட இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐ.தே.க.வில் எவரும் இல்லையா? – கேலி செய்த நாமல்

ரணிலை விட இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐ.தே.க.வில் எவரும் இல்லையா? – கேலி செய்த நாமல்

இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது.

இதில் தேசிய கொள்கை, பொருளாதார, தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த அமைச்சு பதவி தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக அமைச்சரவையை நியமிப்பதை விடுத்து தமது கட்சி உறுப்புரிமை பற்றி பேசி ஐக்கிய தேசிய கட்சியினர் கால விரயம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அபாரதம் விதித்த ஐ.சி.சி!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அபாரதம் விதித்த ஐ.சி.சி!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்தியக் கிரிக்கெட் சபை மீது, தொடர்ந்திருந்த வழக்கிற்கான செலவில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு வழங்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் சபை, 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரி, சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதனை, மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் தiலைமையிலான விசாரணைக்குழு, விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கினை கடந்த மாதம், ஒத்தி வைப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் அறிவித்தது.

ஐ.சி.சி. தகராறு தீர்ப்பாணையத்தின் இந்தத் தீர்ப்பு பிணைப்புடையது மற்றும் மேல்முறையீடு செய்ய முடியாதது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கிற்கான செலவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, வழங்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முறையிட்டது. இதையடுத்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்க வேண்டும் என்று ஐ.சி.சி. தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய கிரிக்கெட் சபைகளுக்கு இடையில், கடந்த 2014ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, கடந்த 2015 முதல் 2023ஆம் ஆண்டு வரை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 6 தொடர்கள் நடத்தப்பட வேண்டும். இவற்றில் 4 தொடர்கள் பாகிஸ்தானில் நடத்த பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதில் 14 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள், 12 ரி-20 போட்டிகள் என மொத்தமாக 56 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல், பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துதல், பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் என பல காரணங்களை முன்னிறுத்தி பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் இந்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஏற்பட்டது.

இதனால், தங்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியது.

அத்தோடு தங்களது நட்டத்தை ஈடுகட்டும் வகையில், இந்தியா, 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் பாகிஸ்தான் புகார் அளித்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பு தொழில்நுட்ப சந்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஜரட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அடக்கு முறைக்கு எதிராக தொழில்நுட்ப சந்தி தொடக்கம், இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் எதிர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக காலிமுகத்திடல் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டாரம் மூடப்பட்டுள்ள அதேவேளை, கொழும்பு புறக்கோட்டை மற்றும் தொழில்நுட்ப சந்தி பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.
வடக்கு மக்கள் புலிகள் இல்லை - அமைச்சர் வஜிர அபேவர்தன

வடக்கு மக்கள் புலிகள் இல்லை - அமைச்சர் வஜிர அபேவர்தன

வடக்கு மக்களை புலிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”30 வருடகால யுத்தம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், அனைவரையும் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக பயணிக்கவேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எனினும், சில ஊடகங்கள் இந்த கடமையை நிறைவேற்ற முன்வருவதில்லை. தற்போது நாட்டில் யுத்தம் இல்லை. அப்படியிருக்கும்போது இனியும் வடக்கு மக்களை புலிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தெற்கிலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கானவர்கள் தேவையில்லாமல் கொல்லப்பட்டனர். ஆனால், நாம் இந்த கிளர்ச்சிக்குக் காரணமானவர்கள், அதனை மேற்கொண்டவர்கள் என அனைவரையும் இன்று மன்னித்துவிட்டோம். 

கொழும்பு, விஹாரமாதேவி பூங்காவில் வைத்தே கார்த்திகை வீரர்கள் நினைவுகூரப்படுகின்றனர். அப்படியிருக்கும்போது, வடக்கை மட்டும் ஏன் நாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கவேண்டும்?

ஐக்கிய தேசியக் கட்சியானது இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான ஒரு கட்சியாகும். நாம் இனிமேல், பேதங்களைப் பாராது ஐக்கியமாகப் பயணிக்க வேண்டும்” என்றார்.
வடமராட்சியில் தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகள்

வடமராட்சியில் தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளதென குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்மித்த பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (புதன்கிழமை) மாலை ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில், ‘தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.

ஆயுத போராட்டமானது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி!

ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், குறித்த பதவிப்பரமாண நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, இரண்டு வருடங்களின் பின்னர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

எனினும், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்புகளை பேணி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Ravi Karunanayake was sworn in as the Minister of Power, Energy and Enterprise Development before President Maithripala Sirisena at the Presidential Secretariat
மனோவிற்கு இந்து விவகார அமைச்சுப் பொறுப்பு!

மனோவிற்கு இந்து விவகார அமைச்சுப் பொறுப்பு!

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சராக மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.
Mano Ganesan: Minister of National Integration, Official Languages, Social Progress and Hindu Religious Affairs
ஆறுமுகம் தொண்டமான் வசமிருந்து அமைச்சுப் பொறுப்பை மீண்டும் கைப்பற்றினார் திகாம்பரம்

ஆறுமுகம் தொண்டமான் வசமிருந்து அமைச்சுப் பொறுப்பை மீண்டும் கைப்பற்றினார் திகாம்பரம்

புதிய அரசாங்கத்தின் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக காணப்பட்ட அரசாங்கத்திலும் திகாம்பரத்திற்கு இந்த அமைச்சுப் பொறுப்பே வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உருவான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் இப்பதவி ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்பதவி திகாம்பரம் வசமாகியுள்ளது.
செயின்ட் லூயிஸில் திருடப்பட்ட வீடு மீண்டும் கண்டுபிடிப்பு!

செயின்ட் லூயிஸில் திருடப்பட்ட வீடு மீண்டும் கண்டுபிடிப்பு!

செயின்ட் லூயிஸில் திருடப்பட்ட ஒரு (tiny home) வீட்டைக் மீண்டும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பறிவாளர்களின் உதவியுடன் திருடப்பட்ட இடத்தில இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் குறித்த வீட்டை நேற்று (புதன்கிழமை) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த வீடு தனதுகனவு என்றும் அதன்படி ஆண்டுதோறும் நிறுவனம் ஒன்றில் இருந்து எடுத்துக்கொள்வதாகவும் மார்ஷாக் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த வீடு காணாமற் போனதாகவும், இதன் பின்னர் அவ்வீடு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டமையால் பெரும் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
2019 ஆண்டு பொதுத் தேர்தலிலும் தாம் வெற்றி பெறுவோம் – பிரதமர் நம்பிக்கை

2019 ஆண்டு பொதுத் தேர்தலிலும் தாம் வெற்றி பெறுவோம் – பிரதமர் நம்பிக்கை

2019 ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலிலும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பயத்தினையும், பாரபட்சங்களையும் ஏற்படுத்தும் மலினத்தனமான பரப்புரைகளை பழமைவாதக் கட்சியினர் முன்னெடுத்துவருவதாகவும், அதேவேளை தமது லிபரல் அரசாங்கம் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை நேர்மறையான, அறிவுசார் கண்ணோட்த்துடன் அணுகி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளில் காணப்படும, குடியேற்றவாதிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளோ, தேசியவாத சித்தாந்தங்களோ அண்மையில் கனடாவில் இடம்பெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் முன்னிலை பெறவிலலை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு, சுலபமான, எளிமையான தீர்வுகளை முன்வைத்துவரும் அரசியல் தலைமைத்துவத்தினை கனேடியர்கள் விரும்பு வரவேற்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படையிலேயே கனேடிய மக்கள் மீதான நம்பிக்கையினையே தனது நம்பிக்கையாகவும் கொண்டுள்ளதாகவும், அதனையே எதிர்வரும் தேர்தலிலும் முன்னிறுத்தி வெற்றிகாணவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.