Tuesday, May 15, 2018

கர்நாடக சட்டபேரவை தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்


கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களில் வென்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால், 38 இடங்களில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க 78 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வென்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் 104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.

இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது- இந்த நிலையில் பெங்களூரில் கூடி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜு கார்கே, அசோக் கெலாட் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்பதை தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

சோனியா காந்தி வழங்கிய ஆதரவை - தேவகவுடா ஏற்றுக் கொண்டதால் இன்று மாலை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். தற்போது 78 தொகுதிகளில் காங்கிரசும், 38 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வென்றுள்ளதால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்கள் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு கிடைத்துள்ளன.

இதனிடையே ஆட்சி அமைப்பதற்காக தங்கள் கட்சிக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி சந்திப்பதற்கு இன்று மாலை ஐந்தரை மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கித் தருமாறும் குமாரசாமி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
SHARE:

0 comments: