Friday, May 11, 2018

சிங்கப்பூரில் சந்திக்கவுள்ள ட்ரம்ப் - கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் திகதி நடக்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில் ஈடுபட்டு வந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக நடந்த நேர்மறையான நிகழ்வுகள், மற்றும் ராஜீய முயற்சிகளின் விளைவாக தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள்.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி முதல் முறையாக, கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை ஏற்று உலகை அதிர வைத்தார் ட்ரம்ப்.
சமீப வாரங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ புதன்கிழமை வடகொரியா சென்று திரும்பினார். அவரது பயணத்தின் போது வடகொரியாவின் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்களை அந்நாடு நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தது. அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பினர். அப்போது டுவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், கிம்- பாம்பியோ இடையே நடந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாகவும், உச்சி மாநாட்டுக்கான திகதியும், இடமும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



SHARE:

0 comments: