Monday, June 4, 2018

நீட் தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் பாதிக்கு பாதி பேர் தேர்ச்சி பெறவில்லை!

SHARE:

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 2 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு தேசிய தகுதி காண நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மட்டும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு சித்தா, யுனானி உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டியிருந்ததால் அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த வகையில் நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2,255 தேர்வு மையங்களில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில், 1,07,288 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையத்தில் சென்றும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தேசிய அளவில் 720 மதிப்பெண்ணுக்கு 691 மதிப்பெண்கள் பெற்று பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித் பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-வது இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் தேர்ச்சி விகிதம் 53.85 ஆக உள்ளது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,14,563 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தகுதி மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவினர் 119 கட் -ஆஃப் மதிப்பெண்ணையும், மற்ற பிரிவினர் 96 கட்-ஆஃப் மதிப்பெண்ணை பெற்றிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
SHARE:

0 comments: