• Latest News

  Wednesday, June 6, 2018

  'என் மகள் தோற்கவில்லை; கல்விதான் தோற்றுவிட்டது' - பிரதீபாவின் தந்தை கண்ணீர்


  `என் மகள் தோற்கவில்லை; கல்விதான் தோற்றுவிட்டது' என்று நீட் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம்-அமுதா தம்பதி. இவர்களுக்கு பிரதீபாவை சேர்த்து இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். கடைக்குட்டியான பிரதீபாதான் படிப்பிலும் கெட்டிக்காரத்திலும் படுசுட்டி என்பதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவள்தான் செல்லம். 

  சண்முகம் கட்டடத் தொழிலாளியாகப் பணி புரிந்தாலும் தன் மூன்று பிள்ளைகளின் படிப்பிலும் நன்கு கவனம் செலுத்தியிருக்கிறார். பெருவளூர் அரசுப் பள்ளியில் படித்த பிரதீபா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் எடுத்து அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். 

  இவரின் மதிப்பெண்ணையும் திறமையையும் பார்த்த அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத், பிரதீபாவை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்தார். அங்கு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படித்த பிரதீபா 2016-17 பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண் எடுத்தார்.

  “என் அக்கா பொண்ணுதான் அவள். போன வருஷம் நடந்த நீட் பரீட்சையில 155 மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டா. ஆனால், அதுக்கு சித்தா டாக்டர் படிப்புதான் கிடைச்சது. ஆனால், அவ அதைப் படிக்கல. `சின்ன வயசுலயிருந்தே டாக்டராகணும்னுதான் என் கனவு. தனியார் காலேஜ்ல பணம் கட்டி படிக்க வைக்கற அளவுக்கு அப்பாவால முடியாது. 

  அதனால ஒரு வருஷம் காத்திருந்து அடுத்த வருஷம் நீட் பரீட்சையில நிறைய மார்க் வாங்கி, அரசுச் செலவுல டாக்டருக்குப் படிப்பேன். நம்மள மாதிரி அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்யணும்னு எனக்கு ஆசை’ அப்படினு சொல்லிட்டா. 

  கண்டிப்பா இந்த வருஷம் நான் பாஸ் ஆயிடுவேன்னு நம்பிக்கையா சொன்னா. நாங்களும் அவ ஆசைப்படறது போலவே செய்யட்டும்னு விட்டுட்டோம். நீட் கோச்சிங்க்கு அனுப்ப பணம் இல்லாததால அதுக்கான புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொடுத்தோம். எப்படியும் எங்க புள்ள டாக்டராயிடும்னு கனவு கண்டுக்கிட்டிருந்தோம். ஆனால், இப்படி அநியாயமா செத்துப்போவானு நாங்க நினைக்கல” என்று கலங்குகிறார் பிரதீபாவின் சித்தி.

  "நீட் தேர்வுக்கு என் மகளே கடைசிப் பலியாக இருக்க வேண்டும். நீட் தேர்வும் தற்போதைய பாடத் திட்ட முறைகளும்தான் என் மகளின் உயிரைக் காவு வாங்கிவிட்டது. 

  பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும் ப்ளஸ் டூ தேர்வில் 1,125 மதிப்பெண்ணும் எடுத்த என் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்திருக்கிறாள் என்றால், அதற்கு யார் காரணம்? கண்டிப்பாக என் மகள் தோல்வியடைவில்லை. இந்திய அரசும் கல்வி முறையும்தான் தோல்வியடைந்திருக்கிறது” என்று கதறுகிறார் பிரதீபாவின் தந்தை சண்முகம்.

  -------------------Vikatan News--------------
  • Facebook Comments
  • Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: 'என் மகள் தோற்கவில்லை; கல்விதான் தோற்றுவிட்டது' - பிரதீபாவின் தந்தை கண்ணீர் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
  Scroll to Top