Monday, July 2, 2018

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஏமாற்றினர் ; நெய்மர் சாதிப்பாரா ; மெக்சிகோவை சந்திக்கிறது பிரேசில்!

21வது FIFA உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பிரேசில், மெக்சிகோ சந்திக்கின்றன. மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற நட்சத்திர வீரர்ரகள் ஏமாற்றிய நிலையில், நெய்மர் சிறப்பாக விளையாடி பிரேசில் அணியை காலிறுதிக்கு அழைத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காலிறுதிக்கு முன்னேறின அணிகளுக்கு  நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா. மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. 

இந்த உலகக் கோப்பையில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரேசில் 3ல் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் 1-1 என டிரா செய்தது, கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. எப் பிரிவில் இடம்பெற்றிருந்த மெக்சிகோ 3ல் 2ல் வென்றது, ஒன்றில் தோல்வியடைந்தது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0, தென்கொரியாவை 2-1 என வென்றது. ஸ்வீடனிடம் 3-0 என தோல்வியடைந்தது. 

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பைகளிலும் பங்கேற்றுள்ள ஒரே அணி பிரேசில். மேலும் 5 முறை கோப்பையை வென்று அதிக முறை வென்ற அணியாக உள்ளது. 2வது இடம், 3வது இடம், நான்காவது இடத்தை தலா 2 முறை பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் மிகவும் வலுவான அணியாக பிரேசில் திகழ்கிறது. மெக்சிகோ இதுவரை 15 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளது. கடைசியாக 1986ல் காலிறுதி நுழைந்தது. 1994 முதல் தொடர்ந்து 6 முறை நாக் அவுட் சுற்றில் வெளியேறியுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி நுழையும் முயற்சியில் உள்ளது. 

இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தியின் சலா ஆகியோர் ஏமாற்றினர். அந்த அணிகள் வெளியேறின. கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்கள் அடித்தார். ஆனாலும், போர்ச்சுகல் நாக் அவுட்டில் வெளியேறியது. கடந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்த பிரேசிலின் நெய்மர் இந்த உலகக் கோப்பையில் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடினால், 6வது முறையாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரேசிலுக்கு அதிகம் உள்ளது.

SHARE:

0 comments: