• Latest News

    Tuesday, July 3, 2018

    ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் - மஹிந்தவுக்கு நிவ்யோர்க் டைம்ஸ் கோரிக்கை


    தம்மால் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், தமது சிரேஷ்ட செய்தி ஆசிரியர்களை தொடர்புக் கொள்ளுமாறு நிவ்யோர்க் டைம்ஸ் கோரியுள்ளது.

    அதைவிடுத்து, தமக்கு செய்திகளை வழங்கிய ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நிவ்யோர்க் டைம்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

    நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் மைக்கல் ஸ்லக்மன் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றினால், நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில், தமக்கு செய்தி வழங்கிய இரண்டு ஊடகவியலாளர்கள் மீது பொது வெளியில் விமர்சனங்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கடந்த மாதம் 26ஆம் திகதி தமது பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரையானது, மிகவும் துல்லியமான தரவுகளை தாங்கியிருப்பதாகவும் மைக்கல் ஸ்லக்மன் குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் செம்மையான மற்றும் மிகவும் பாதுகாப்பான தகவல் வழங்கும் முறையினாலேயே இந்த கட்டுரை வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஊடகவியலாளர்கள் இவ்வாறான முறையில் அச்சுறுத்தப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் மைக்கல் ஸ்லக்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

    இவ்வகையான செயற்பாடுகள் விமர்சனங்களை மௌனிக்கச் செய்ய முனைவதாகவும், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அத்துடன், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இந்த செயற்பாடானது இலங்கையர்களுக்கான தகவலறியும் உரிமையை முற்று முழுதாக பறித்தெடுப்பதாகவும் மைக்கல் ஸ்லக்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதேவேளை, தமது கட்டுரைக்கான தகவல்களை வழங்கிய குறித்த ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அதிகாரத் தரப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என நிவ்யோர்க் டைம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    அத்துடன், தம்முடைய ஊடகவியலாளர்கள் மாத்திரமல்லாது, எந்தவொரு ஊடக அமைப்பினதும் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என அந்த பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் - மஹிந்தவுக்கு நிவ்யோர்க் டைம்ஸ் கோரிக்கை Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top