Tuesday, July 10, 2018

பிரான்ஸ் vs பெல்ஜியம் இன்று அரை இறுதியில் மோதுகின்றன!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான பிரான்ஸ்க்கு, இந்த உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று செம கெத்தாக உள்ள பெல்ஜியம் கடும் சவால் விடுக்கும் என எதிர்பார்க்கலாம். 

21வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. 

தற்போது பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்துள்ளன. 1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாட உள்ளன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 

2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன. பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லத் தயாராக உள்ளன. 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன. நாளை இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா மோத உள்ளன.

இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. 6வது முறையாக உலகக் கோப்பை அரை இறுதியில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. ஜி பிரிவில் பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரேசிலை 2-1 என வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது.

இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்றபோதும், மிகவும் வலுவான அணியாக பெல்ஜியம் உள்ளது. பிரான்ஸ் அணிக்கு இந்த அரை இறுதி மிகவும் போராட்டமாகவே இருக்கும். கால் இறுதியில் மிகவும் வலுவான, கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட பிரேசிலை வென்று அசத்தியது பெல்ஜியம். கடைசியாக விளையாடிய 24 ஆட்டங்களில் பெல்ஜியம் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. 19ல் வென்றுள்ளது, 5ல் டிரா செய்துள்ளது. கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

பெல்ஜியத்தின் ருமேலு லுகாகு முழு பார்மில் உள்ளார். கடைசியாக விளையாடிய 13 ஆட்டங்களில் 17 கோல்களும், 3 முறை கோலடிக்கவும் அவர் உதவியுள்ளார். இதுவரை இரண்டு அணிகளும் 73 முறை மோதியுள்ளன. அதில் பெல்ஜியம் 30ல் வென்றுள்ளது, பிரான்ஸ் 24ல் வென்றுள்ளது, 19 டிராவில் முடிந்தது. மிகச் சிறந்த தடுப்பாட்டத்துடன், அதிரடி ஆட்டத்திலும் பெல்ஜியம் வலுவாக உள்ளது. அதை சமாளித்து மீண்டும் கோப்பையை வெல்வது என்பது பிரான்ஸ் அணிக்கு சுலபமான விஷயமில்லை.
SHARE:

0 comments: