Monday, August 13, 2018

மீண்டும் அரசியல் பேச்சு....! சங்கா என்ன சொல்கின்றார்...!

தான் எவ்வாறான சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்வதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

குமார் சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வைப்பது குறித்து பல தரப்பினர் வெவ்வேறு விதமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் தருணத்தில், குமார் சங்கக்கார தனது முகநூல் பகத்தில் பதிவு ஒன்றின் மூலம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு தருணத்திலும் அரசியலில் களமிறங்கி பொதுமக்களின் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்க மாட்டேன்.

அவ்வாறான ஓர் உத்தேசம் எனக்கு கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என நான் நம்புகிறேன். பொதுச்சேவையில் பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை என்பவற்றுடன் பணியாற்ற வேண்டும்.

பொது மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பொது ஊழியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கின்றேன்.

கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் எனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அறக்கட்டளை அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புகின்றேன்.

கிரிக்கட் விளையாட்டுத் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஒரு வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என்று குமார் சங்கக்கார தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.
SHARE:

0 comments: