Monday, September 3, 2018

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக சரிவு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, நேற்று ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் 57வது நாளாக தடை நீடிக்கிறது.

அதேசமயம், கோத்திக்கல்மடுவு பகுதியில் இருந்து மணல்திட்டு வரை பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், முதலைப்பண்ணை மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் மட்டும் நீராட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டது.

அதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியில் இருந்து இன்று 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரும் விநாடிக்கு 20,800 கனஅடியில் இருந்து 14,800 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நீர்திறப்பு குறைப்பால், 16 கண் மதகு மூடப்பட்டது. நேற்று 120.19 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 120.18 அடியானது. நீர் இருப்பு 93.75 டிஎம்சியாக உள்ளது.

0 comments: