Saturday, September 22, 2018

ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு விட்டேன் அமைச்சர் தங்கமணி மீது ஒருவாரத்தில் வழக்கு போடுவேன்: மு.க.ஸ்டா லின்

சென்னை: காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டு விட்டேன். அமைச்சர் தங்கமணி கூறியவாறு என் மீது வழக்கு தொடரா விட்டால் ஒரு வாரத்தில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று மு.க.ஸ்டா லின் கூறினார். 
திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

நீங்கள் தொடர்ந்து தவறான தகவல்கள் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் உங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளாரே? காற்றாலை மின்சாரத்தில் முறைகேடாக பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று நீண்ட அறிக்கை வெளியிட்டேன். அதற்கு எந்தவொரு விளக்கத்தையும் சொல்ல முன்வராமல் அபாண்டமான, அவதூறான பொய்யான குற்றச்சாட்டை என் மீது சொல்லியிருக்கிறார். என் மீது சட்டப்படி வழக்கு போடப் போகிறேன் என எச்சரிக்கும் விதத்தில் பதில் தந்திருக்கிறார்.

ஆனால் நேற்று, என் கையில் இருக்கும் இந்த முழுமையான ஆதாரத்தை வெளியிட்டு இதுகுறித்து உடனே விசாரணை நடத்த வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன். நாங்கள்தான் குட்கா ஊழல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டோம். தற்போது குட்கா ஊழல் பிரச்னை சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறதென்பது நாட்டிற்கு நன்றாக தெரியும். எனவே மின்துறை அமைச்சராக இருக்கும் தங்கமணியை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, காற்றாலை முறைகேடு தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுதாவது அவர் சொன்னபடி என்மீது வழக்கு போடவேண்டும். ஒரு வார காலம் நான் காத்திருப்பேன்.

அந்த ஒரு வார காலத்திற்குள் அவர் என்மீது வழக்குப் போடவில்லை என்று சொன்னால் நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, எப்படி குட்கா ஊழல் பிரச்னை சி.பி.ஐ வரை சென்று வழக்கு விசாரணை நடந்து கொண் டிருக்கிறதோ அதுபோல் இதையும் கொண்டு சென்று இந்த ஊழல் பிரச்னைக்கு நல்லதொரு பரிகாரத்தை நான் நிச்சயமாக காண்பேன். என் மீது வழக்கு போடுவேன் என்று சொன்ன தங்கமணி உடனடியாக வழக்கு போட தயாரா? என்ற அந்தக் கேள்வியை கேட்டு இந்த விளக்கத்தை நான் உங்கள் மூலமாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

103 வயது மூதாட்டி வாழ்த்து

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர் 103 வயதான ரங்கம்மா. திமுக மீது தீவிர பற்றுகொண்டவர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அதன்படி திமுகவினர் உதவியுடன் அவர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ஸ்டாலின் நன்றி கூறினார். 

பின்னர் ரங்கம்மா கூறும்போது, ‘எங்கள் குடும்பம் திமுக குடும்பம். கருணாநிதியை சந்திக்கும் எண்ணம் நிறைவேறவில்லை. கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. வர இருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார்’ என்றார்.

தமிழக வீரர் சத்யனுக்கு பாராட்டு டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன் இலக்காக கொண்டு இருக்கும் சத்யன் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

3,4ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி ஊழல் விளக்க பொதுக்கூட்டங்கள்

தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று சிறைச் சாலையில் டி.ஐ.ஜி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்களே?

இந்த ஆட்சியில் டி.ஜி.பி அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தலைமை செயலாளர், அமைச்சருடைய வீடுகளில் சோதனை நடந்துள்ளது. அதையெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இன்னும் வெட்கம் மானமில்லாமல் இன்னும் அந்தப் பதவிகளில் ஆட்சியாளர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.

அதனால்தான் நாங்கள் சேலத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தி எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள எல்லா நகராட்சிகளிலும் அதிமுக அரசு ஈடுபட்டிருக்கக் கூடிய கலெக்க்ஷன், கமிஷன், கரப்ஷன் பற்றி விளக்கி சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதற்கு திமுக சார்பில் முடிவெடுத்துள்ளோம்.
SHARE:

0 comments: