Saturday, September 22, 2018

அரசியல் தீர்வு விடயம்: சுமந்திரனின் கணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது...! கட்டுரை

அரசியல் தீர்வு விடயத்தில் அவருடையதை விட மாற்றுவழி இல்லை என்ற சுமந்திரனின் கணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அரசியல் தீர்வு விடயத்தில், அதாவது எம் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடயத்தில், தமிழரின் தலைவிதி சுமந்திரனினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் கையில் இருக்கும் நிலையில், சொற் பிரோயகம் முக்கியம்; உண்மைத்தன்மை முக்கியம்; வெளிப்படைத்தன்மை முக்கியம். 

சுமந்திரன் அண்மையில் ஆற்றிய உரைகளை பார்த்தால் பழைய கதையை திரும்ப திரும்ப சுற்றி வளைத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது ஒற்றை ஆட்சி முறையில் சமஷ்டியின் குணாதிசயங்கள் இருக்கின்றன என்பது. 

பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் சமஷ்டியின் குணாதிசயங்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார் சுமந்திரன் - ஆனால் என் பார்வையில் பிரித்தானிய யாப்பு எழுதப்படாத யாப்பு.

பாராளுமன்றம் மட்டுமே சட்டம் உருவாக்கும் இயல்பு கொண்டது (parliament is supreme); யாப்பில்லாத பட்சத்தில் பாராளுமன்றமே மேலானது; தனி நாடு கேட்கேலாது என்று சட்டமில்லை; மரபுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஸ்காட்லாந்து மக்களுக்காக ஒரு பொது சன வாக்கெடுப்பு நடந்தேறியது; திரும்பவும் நடக்க வாய்ப்புண்டு. 

சனத்தொகையில் குறைவென்றாலும், ஸ்காட்லாந்துக்கு - பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் அதிகம் - இதை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன். ஒரு சர்வாதிகாரம் வந்து எல்லாவற்றையும் குழப்பி அடிக்காது. 

பிரித்தானியா கொடுத்த உரிமைகளை மீள பெறாது என்று அவரே சொல்லுகிறார்

அவரிடமிருந்து எத்தனை தரம் தான் இதை கேட்டிருக்கிறோம் – அதாவது ஒற்றை ஆட்சி முறையில் சமஷ்டியின் குணாதிசயங்கள் இருக்கின்றன என்று.. கேட்டு புளிச்சு போயிட்டுது. திட்ட வட்டமாக சமஷ்டி தான் வேண்டுமென்று சொன்னால் என்ன? கேட்கிறேன்?

அவருடைய ஆதங்கத்தை அதாவது பெயர் முக்கியமில்லை என்ற வாதத்தை (கொட்டாவி) கேட்டு விட்டொம் - சுற்றி சுற்றி சுப்பண்ட கொள்ளைக்குள் திரிகிறார் சுமந்திரன், பேச்சில் சில சில மாற்றங்களுடன். “எல்லா சமஷ்டி முறைகளிலும் ஒற்றை ஆட்சி முறைகள் காணப்படுகின்றன என்கிறார். 

ஒற்றையாட்சியிலும் சமஷ்டியின் குணாதிசயங்கள் வியாபித்திருக்கின்றன,” என்கிறார். 

முழுமையான சமஷ்டியிலும்கூட ஒற்றை ஆட்சி குணாதிசயங்கள் இருக்கத் தான் செய்யும் .என்கிறார் இருக்காவிட்டால் அது ஒரு நாடாக இருக்க முடியாது என்கிறார். ஆகவே இந்த விளக்கங்கள் அத்திய அவசியமானது என்கிறார். 

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக நாங்கள் அரசியல் விடிவென்று சொல்வது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும்... வெறும் பேச்சாக, கோஷங்களாக இருக்க முடியாது என்கிறார். 

பேச்சும் அவசியம். கோஷங்களும் அவசியம். சமஷ்டி என்று எழுதவேண்டுமென்று கேட்போம் என்று மெல்ல சொல்லுகிறார். அதுவேறு விஷயம் என்கிறார்.

ஆனால் முக்கியமான விடயமென்னவென்றால் உள்ளடக்கத்தில் அது எங்களுக்கு சுய ஆட்சியை கொடுக்கிறதா? சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்களில் சில விடயங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டால் அவை பூரணமான அதிகாரமாக கொடுக்கப்பட்டதா என்று பார்க்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்.
தமிழருக்கு அந்தப் பாணியில் கதைப்பதும், சிங்கள பேரினவாதிகளான புத்த குருமார்களும் அரசியல் வாதிகளும் கேட்க அவர்களை சமாதானப்படுத்துவதற்கு13 ஆம் திருத்த சட்டத்தில் சிறு மாற்றங்களை கொண்டுவந்தால் போதும் என்று கதைப்பதும் சுமந்திரனின் அரசியல் சாமர்த்தியம் என்பதா இரு பாலாரையும் ஏமாற்றும் வஞ்சனை என்பதா! இந்த அணுகுமுறை தமிழருக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது என்றிங்கு வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன். 

தான் தான் தமிழரசு கட்சியினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் உத்தியோக பூர்வமான பேச்சாலென்று காட்டிக்கொண்டு தெற்கு பக்கம் சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவதிலும் பார்க்க, அதைவிட மோசம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிழையாக விவரிப்பதிலும் பார்க்க, சர்வதேசமும் சிங்களமும் செவிமடுக்க வேண்டியவை பல உண்டு.

உண்மையில் 6ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதிலும், வடகிழக்கிற்கும் புலம்பெயர் ஈழத் தமிழருக்குமான பொது சன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டுமென்ற விண்ணப்பத்தை முன் வைப்பதிலும், அதற்கான கேள்வியை தமிழ் மக்கள் தீர்மானித்தல் வேண்டும் என்றதில் உறுதியாய் இருப்பதிலும் அவர் அவரது கவனத்தை செலுத்த வேண்டும்.

சுமந்திரன், மாவீரன் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் - அகிம்சைவாதி, மனசாட்சிக்கெதிராய், ஆயினும் வன்முறைக்கெதிராய் சொந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினால் ஆயுதம் தாங்கிய, உண்ணா விரதம் இருந்து உயிரை மாய்த்த - திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், தானாற்றிய பேச்சின் காணொளியை அவருடைய முகநூலில் பதிவிட்ட சுமந்திரன் திலீபனை பற்றி ஒரு வசனம் மாத்திரம் தான் கதைத்ததை கேட்டோம். ஒருவேளை நிகழ்வில் கதைத்திருந்தாலும் காணொளியில் அந்த பாகத்தை வெட்டி தான் பதிவிட்டார். 

அந்த காணொளியில் நாம் கேட்ட அந்த ஒரு வசனம் திலீபனின் அற்பணிப்பு பலனளிக்கவில்லை போலிருந்தது. பெயர் சொல்லாமல் கையால் காட்டி நீர் அகாரம் உணவாகரம் இல்லாமல் உயிர் துறந்தார் - அப்படியாக செய்து வெல்லலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டது திலீபனின் தியாகத்தை கொச்சை படுத்திய மாதிரி தோன்றியது - அது எனக்கு பிடிக்கவேயில்லை. தியாக தீபம் திலீபனை அவமதித்த சுமந்திரனின் கேவலமான இந்தப் பேச்சு ஒவ்வொரு மானமுள்ள தமிழனாலும் கண்டிக்கபடவேண்டியது!

விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்திலும் பார்க்க சிறப்பான ஆயுதப் போராட்டத்தை நடத்தப் போகிறீர்களா, அதுவா உங்கள் மாற்று வழி என்று யாரை நோக்கி கேட்டாரோ தெரியவில்லை, அப்படி கேட்டதும் எனக்கு பிடிக்கவில்லை. மாவீரரை இங்கே அவசியமில்லாமல் இழுப்பது சுமந்திரனின் போக்கிரித்தனம், இறுமாப்பை காட்டுகிறது. உரிமைப்போராட்டம் மடியவில்லை, அறவழியில் திளைக்கிறது, மாவீரரின் ஆசியுடன்!

சுமந்திரன், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இவ்வாறு பேசியது, அரசியல் தீர்வு விடயத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் மாற்று வழி ஒன்றை வைத்திருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி, அவர்களுக்கு மாற்று வழியில்லை என்று முடிவு கட்டி வேடிக்கை பண்ணத்தான். அதாவது அவர்கள் பேச்சில் வல்லுனரானால் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்கள் மாற்று வழியை ஏன் முன் வைப்பதில்லை என்று கேட்டார் சுமந்திரன். 

சுமந்திரனின் கணிப்பில் அவருடையதை விட மாற்று வழி இல்லை என்பதே. தாங்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றவேண்டும் என்றும் சொன்னார் - ஏனென்றால் இந்த ஆட்சியின் காலம் முடிவடைய போகுது என்றார். நாங்கள் அதை மாற்றுவோம் என்றார். அது தான் என்ன என்பதை அவர் கூறவில்லை. 

அவர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மேலும் பேசுகையில், "எங்களுக்கான தீர்வை பெறுவதற்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து இணங்கவேண்டும்; அவர்களை இணங்கவைக்க வேண்டும். நாங்கள் கோருவதொன்றும் நியாயமற்ற கோரிக்கை அல்ல என்று அவர்களை விளங்க வைக்க வேண்டும். நாங்கள் கேட்கும் கோரிக்கை நியாயம் அற்றவை இல்லையே.

உலகெங்கும் இருக்கும் மக்கள் கோருவதை தான் நாங்கள் கோருகிறோம். நியாயமற்ற கோரிக்கை அல்ல, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிற வகையிலே செயற்படவேண்டும்.

எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்தல்ல. எங்கள் உரிமைகளை நிலைநாட்டி, ஆனால் அது உங்களுடைய உரிமை தான் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையிலே நாங்கள் பேச வேண்டும்.

அவர்களிடையே நாங்கள் அதை பேச வேண்டும்; திரும்பவும் குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கிது என்றும் தெரியாது,” என்றார்
.
மேலும், “அதிலே எதையாவது செய்கிறீர்களா; அல்லது மாறாக அவர்களுடைய சந்தேகங்கள் வலுக்கிற வகையிலே செயற்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா. அவர்கள் சந்தேகங்கள் வலுக்கிற வகையிலே செயற்பட்டால் நாங்கள் எமது இலக்கை அடைவது கஷ்டம்; அதனால் அவர்களுக்கு பொய் சொல்ல முடியாது.

எங்களுடைய உரித்து எங்களுடைய உரித்து. ஆனால் சொல்லுகிற முறை, சொல்லுகிற தோரணை, சொல்லுகிற வடிவம், சொல்லுகிற மொழி, எல்லாம் முக்கியமானவை," என்றார் சுமந்திரன்.

மாற்று வழிகளை நோக்குகையில் - தமிழ் மக்கள் பேரவை, அரசியல் தீர்வை நோக்கி, புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டிய அனைத்தயும் கொண்ட வரைவொன்றை முன்வைத்ததை சுமந்திரன் மறந்து விட்டார் போலும். 

அண்மையிலும் கூட வட மாகாண சபை, சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறும், இலங்கைத்தீவில் தமிழினச் சிக்கலுக்கு நிலையான தீர்வு காண ஐநா ஏற்பாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியதை அவருக்கு தெரியவில்லை போலும். 

புதிய அரசியல் யாப்பொன்று வ்ருவதாய் இல்லை. சுமந்திரன் கேட்பது சிங்களவரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா? சுமந்திரன் என்ன தான் கேட்கிறார்? அதை முதல் சொல்ல முடியுமா? சிங்களவருக்கு ஒன்றுமாய் தமிழருக்கு ஒன்றுமாய் கதைப்பது பிழையான அணுகுமுறை. இடைக்கால அறிக்கையில் கூட சொற்பிரயோகம் குழப்பத்தை உண்டுபண்ணியதை கவனித்தோம்.

தமிழர் தலைவிதி தமிழர் கையில் இருக்கவேண்டும். அதன் அடிப்படிடையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொதுசனவாக்கெடுப்பை வலியுறுத்தி பயணிக்கிறது.

சுமந்திரன் தமிழரின் பேச்சாளராய் இருந்து கொண்டு, சிங்களவரின் மத்தியில் அவருடைய அந்தஸ்தை, நல்ல பெயரை வளர்ப்பது, நடுத்தரமான ஆள் என்று தன்னை காட்டிக் கொண்டு, 13 ஆம் திருத்தச் சட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தால் போதும் என்று சிங்களவருக்கு சொல்வது, சரிப்பட்டு வராது. தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் கோரிக்கைகளை தயங்காமல் முன் வைக்க வேண்டும்! 

தமிழ் அரசியல் வாதிகள் ஒட்டுமொத்த தமிழரின் நலனுக்காக தமிழரின் உரிமைகளுக்காக அற்பணிப்புடனும், துணிவுடனும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

கட்டுரை ஆசிரியர் - Usha Sriskandarajah
SHARE:

0 comments: