Tuesday, September 25, 2018

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிற்கு இன்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசேட சலுகை காட்டி விடுவிக்க முடியாது என ஊடகங்களில் வெளியான உங்கள் அறிக்கையே, என்னை இந்த வேண்டுகோளை விடத் தூண்டியது.

சிறைச்சாலைக்குள் தமது விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் இருப்போரின் துயரம் யாதெனில், நீண்ட காலமாக தாம் எதுவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையேயாகும்.

அதிகாரிகளின் குறிப்பாக நீதி அமைச்சர் என்ற வகையில் உங்களது அதி கவனத்திற்கு எடுக்க வேண்டிய விடயம் யாதெனில், கடந்த காலத்தில் கடும் குற்றச் செயலில் ஈடுபட்டு குற்றவாளியாக இனம் கண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களினால் அவர்களின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகளில் விடுதலையாவது சகஜம்.

அது மட்டுமல்லாமல் ஒழுக்கமாக செயற்பட்டமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் போன்றவற்றால் இத்தண்டனை ஆண்டுகள் மேலும் குறைக்கப்பட்டு, விடுதலையாவது வழமையாக இருந்து வந்துள்ளது.

நான் நீதி அமைச்சராகிய உங்களை வினயமாக கேட்டுக்கொள்வது, மேலும் தாமதிக்காது தடுப்பில் உள்ளவர்களின் உறவுகளுக்குரிய அனுதாபத்துடன் இப்பிரச்சினையை அணுகுமாறு வேண்டுகிறேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டவர்களைக் கூட விடுதலை செய்ய முடியும் என்பதை உலகம் முழுவதும் அறியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தடுப்பில் உள்ளவர்களின் மனைவி, மக்கள் பல வருடங்களாக எத்தனை துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவிக்கின்றனர் என்பதை ஓர் தாயாக நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எனது விண்ணப்பம் யாதெனில், மனிதாபிமான அடிப்படையில் பயங்கரவாத சட்டத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த விடயம் இயற்கையான நீதிக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்பதேயாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE:

0 comments: