Sunday, October 28, 2018

மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறலாம்....! மனித உரிமைகள் கண்காணிப்பகம் அச்சம்...!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதிவியேற்றுள்ளதால் கடந்த காலத்தைப் போன்று மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் அழுத்தங்கள் இன்றி செயற்பட்டுவந்த ஊடக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மீண்டும் அச்சம் நிலவும் காலத்தினை எதிர்கொள்ளவேண்டிய நிலை குறித்தும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்

ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கோ அமைச்சரவைக்கோ அறிவிக்காமல் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் யுத்த குற்றங்களை அனுபவித்தவர்களுக்கு நீதி வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளமை காரணமாக கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்ஷவின் நியமனத்தை ரணில் விக்கிரமசிங்க எதிர்த்துள்ளதை அரச ஊடகங்கள் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கண்காணிப்பகம், ராஜபக்ஷ பிரதமரான பின்னர் அவரது ஆதரவாளர்கள் அரச ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சிறிசேன அரசாங்கத்தின் கீழ் அரச ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட்டன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் அதிகளவிற்கு மனித உரிமைகளை மதிக்கும் ஆட்சி நிலவுவதை உறுதி செய்வதில் பங்களிப்பு வழங்கிய நாடுகள் கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட நன்மைகள் இழக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
SHARE:

0 comments: