Sunday, October 28, 2018

அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில், யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர் சுட்டதில் 11பேர் உயிரிழந்தனர்.

காவல்துறை அதிகாரிகள் உட்பட 6பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பர்க் நகரில் யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ராபர்ட் போவர்ஸ் என்பவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.

கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 11பேர் உயிரிழந்தனர். காவல்துறையினர் 4பேர் உட்பட 6பேர் காயமடைந்தனர். 

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் அறிந்ததும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த காவல்துறையினர் கொலையாளி ராபர்ட் போவர்சைக் கை கால்களில் சுட்டு வீழ்த்தி உயிருடன் பிடித்தனர்.

குண்டுக்காயமடைந்த ராபர்ட் போவர்சுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யூதர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் எனக் கூறிக்கொண்டே ராபர்ட் போவர்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

வந்தேறிகள் நம்மவரைக் கொல்வதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனச் சமூக வலைத்தளத்தில் போவர்ஸ் பதிவிட்டுள்ளான்.
SHARE:

0 comments: