Thursday, October 25, 2018

27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி!

ஆம் ஆத்மி கட்சியின் 27 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தள்ளுபடி செய்துள்ளார்.

புதுடெல்லியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலான தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவையே ஜனாதிபதி விலக்கியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லியில் உள்ள நகரில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து ரோகி கல்யாண் சமிதிகள் (நோயாளிகள் நல குழு) செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி ஆளும் அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு, சுகாதார வசதிகள் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட வசதிகளை வழங்கும் ரோகி கல்யாண் சமிதிகள் அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மனுத் தாக்கலும் செய்யப்பட்டது.

அவர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அனுப்பினார். அவர்கள் இந்த மனு மீது அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி அதனைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்.
SHARE:

0 comments: