Friday, October 19, 2018

பொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் வகையில் வட கொரியா முறைகேடான வகையில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளையும் மீறும் வகையில் அந்த நாடு செயற்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடகொரியாவின் அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

நிலக்கரி, எரிபொருள் போன்ற முக்கிய மூலவளங்களை கொள்வனவு செய்வதற்காக, வடகொரியா அரசாங்கம் இத்தகைய மாற்று வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. குறிப்பாக சர்வதேச கடல் எல்லையில் வைத்து சட்டபூர்வமற்ற பல வர்த்தகங்கள் இடம்பெறுகின்றன.

வௌிநாட்டு எரிபொருள் கப்பல்கள் மற்றும் வடகொரிய கப்பல்களுக்கு இடையில் சட்டவிரோதமாக பண்டங்கள் பரிமாற்றப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் நிலக்கரி பரிமாற்றங்களில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச தடைகள் காரணமாக தடைப்பட்டுள்ள இந்த மூலவளங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த மாற்று வழிமுறைகள் வடகொரியாவுக்கு பெரிதும் உதவுகின்றன.

இந்தநிலையில், எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 20 க்கும் மேற்பட்ட வடகொரிய கப்பல்கள் ஐ.நா.வின் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், உண்மையான அடையாளத்தை மறைத்தும் இந்த முறைகேடான வர்த்தகம் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இந்த தடைகளை மீறி செயற்படும் நிறுவனங்களை அம்பலப்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அத்துடன், இவ்வாறான தடைகள் காரணமாக வடகொரியாவின் 2017 ஆம் ஆண்டுக்கான வருமானத்தில் ஒரு பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.

இருந்த போதும் சட்டபூர்வமற்ற வர்த்தகம் காரணமாக அந்த நாடு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அமெரிக்கா மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த தடைகள் எதிர்காலத்தில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஈடாக வடகொரிய அணுவாயுத செயற்பாட்டை கைவிடுவதற்கான ஒப்பந்தத்திற்கு இசைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான தடைகள் இருக்கின்ற தருணத்திலும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகளை வட கொரியா கண்டறிந்து வைத்துள்ளமை உலக நாடுகளை மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்துள்ளது.
SHARE:

0 comments: