Monday, October 29, 2018

ரணிலை ஏமாற்றிய வடிவேல் சுரேஷ், வசந்தவிற்கு புதிய அரசில் அமைச்சு பதவி!

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மீண்டும் ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்த வசந்த சேனநா­யக்கவிற்கு அமைச்சு பதவியும், வடிவேல் சுரேஷிற்கு ராஜாங்க அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும், பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தனர்.

வெளிநாட்டில் இருந்து மகிந்தவுக்கு ஆதரவளித்த வசந்த சேனநாயக்க நேற்று நாடு திரும்பியதும், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

அதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஸ் நேற்று மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று காலை அலரி மாளிகைக்குச் சென்ற வடிவேல் சுரேஸ், தாம் மரியாதை நிமித்தமாக வாழ்த்துக் கூறவே மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததாகவும், ரணில் விக்ரமசிங்கவையே தான் ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்றது. இதில் மாற்றுக்கருத்துக்களை கூறி வந்த இருவருக்கும் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.
SHARE:

0 comments: