Monday, October 29, 2018

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மற்றும் வெடிப்பதற்கும் தடையில்லை என்று தீர்ப்பளித்தது. 

எனினும் இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. குறிப்பாக தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அதாவது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட இடத்தில மட்டுமே வெடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவில், தீபாவளியன்று காலையில் பட்டாசு வெடிப்பது தமிழநாட்டின் கலாச்சாரம் என்றும், இதனால் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் பட்டாசுகளை வெடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்த ஒரு திருத்தத்தை மட்டும் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரான வினோத் கண்ணா தாக்கல் செய்துள்ளார். மேலும் மனு தொடர்பான விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை.
SHARE:

0 comments: