Friday, October 19, 2018

வாக்கெடுப்பு ஒத்திவைப்பு : பலம்மிக்க பொலிஸ் தலைவரின் கொலை காரணம்?

ஆப்கானிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கந்தஹார் மாகாணத்திற்கான வாக்கெடுப்புகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கந்தஹார் மாகாணத்தின் பலம்மிக்க உள்ளூர் பொலிஸ் தலைமை அலுவலரான ஜெனரல் அப்துல் ராஸிக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் வௌியிடப்பட்டுள்ளது. அவரது மெய்ப்பாதுகாப்பாளரால் அவர் நேற்று (வியாழக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டார்.

உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை அடுத்து தலிபான்களே இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலின் போது, அமெரிக்க பாதுகாப்பு படைத்தளபதி ஜெனரல் ஸ்கொட் மில்லர் மயிரிழையில் தப்பித்துள்ளார்.

அத்துடன், உள்ளூர் புலனாய்வுத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஆளுனர் கடுமையாக காயமடைந்துள்ளார். அவர்களுடன் இருந்த மூன்று அமெரிக்கர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மக்களின் வேண்டுகோளுக்கு அமைய கந்தஹார் மாகாணத்திற்கான தேர்தல் வாக்கெடுப்புகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நாளை நாடளாவிய ரீதியாக பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ளனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் தேர்தல் தினத்தில் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொடூரமான பொலிஸ் தலைவர்’ என்று தலிபான்களால் வர்ணிக்கப்படும் ஜெனரல் ராஸிக், தேர்தலை மக்கள் புறக்கணிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
SHARE:

0 comments: