Saturday, October 20, 2018

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.

32 வயதான பிரவீன் குமார் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இறுதியாக அவர் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.

அதன் பின்னர் அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப், பெங்களூர், ஐதராபாத் அணிகளில் விளையாடினார்.

இந்த நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். பிரவீன்குமார் 6 டெஸ்டில் விளையாடி 27 விக்கெட்டும், 68 ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

“ஓய்வு பெறுவது பற்றி நான் வருத்தப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்ப வில்லை.

எனது விளையாட்டு காலம் முடிந்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். கடவுள் எனக்கு கொடுத்த இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்.” என கூறினார்.
SHARE:

0 comments: