Sunday, October 28, 2018

ஜமால் கஷோக்கி கொலை தொடர்பில் தௌிவான விசாரணை அவசியம் – ஜிம் மெட்டிஸ் வலியுறுத்து

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக தௌிவான மற்றும் நடுநிலைமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் ​போது தாம் இந்த வலியுறுத்தலை விடுத்ததாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரான ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டமை உலகின் பிரதான எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் அடெல் அல்-ஜூபைருடன் பஹ்ரேனில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போது கொலை தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) விரிவாக கலந்துரையாடியதாக பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் கூறினார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமக்கு அடிப்படை விடயங்கள் அறியத்தரப்பட வேண்டும் என்றும், தெஹ்ரான் மற்றும் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான ஒரு நட்பு நாடாக ரியாத் நிர்வாகத்தின் பங்களிப்பும், அவசியம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், சவூதி அரேபியாவின் பொது வழக்கறிஞர், கஷோக்கியின் படுகொலை திட்டமிடப்பட்டது என்று கூறியுள்ளமையும், இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் ஒரு தருணத்தில் தற்செயலாக நடந்த சம்பவம் என்று முன்னைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டதும் முரணான கருத்தாக உள்ளது.

இதனிடையே, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டது சவுதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

சவுதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க – சவுதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சவுதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார மையத்தின் மூத்த உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கஷோக்கி எந்த சூழலில் கொலை செய்யப்பட்டார், அவரது உடல் எங்கே, முக்கியமாக இந்த கொலையை செய்ய உத்தரவிட்டது யார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் பெறவேண்டியுள்ளது.
SHARE:

0 comments: