சீரற்ற காலநிலை, மழை தொடரும்.....!

தற்போது நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான நிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல் மாகாணத்தின் உள்ளகப் பகுதிகளிலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மண்சரிவு எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளும், அதனைச் சூழவுள்ள பகுதிகளும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள, மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்யுமாயின் மண்சரிவு, பாறைகள் வீழ்தல், நில இறக்கம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

எனவே, பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments