Saturday, October 20, 2018

விஜய் மல்லையாவின் கார்கள் லண்டனில் விற்பனைக்கு

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் மோசடி செய்த கடன் பணத்தை மீளப்பெறும் வகையில், லண்டனில் அவரது 6 அதிநவீன சொகுசு கார்கள் விற்பனைக்கு விடப்படவுள்ளன.

பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் அமுலாக்கல் அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மினி கண்ட்ரிமேன் (2016 மாதிரி), மேபாக் (2012), ஃபெராரி எஃப் 430 ஸ்பைடர்(2006), ரேஞ்ச் ரோவர் (2014), பெராரி எஃப் 512 எம் மற்றும் போர்சே கெய்னே ஆகிய அதிசொகுசு கார்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த விற்பனையை குறைந்தபட்சம் இந்திய பெறுமதியின் படி ரூ.3.86 கோடிகளுக்கு மேல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வங்கிகளில், மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.9,500 கோடி வரையில் கடன் பெறப்பட்டது. எஸ்.பி.ஐ, ஃபெடரெல் வங்கி, ஐ.டி.பி.ஐ, பரோடா வங்கி, கோர்ப்பரேசன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுகோ வங்கி உட்பட இன்னும் சில வங்கிகள் மல்லையாவுக்கு கடன் வழங்கியிருந்தன.

ஆனால், கடன் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த மல்லையா, நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.

இந்த நிலையில், மல்லையாவிடம் கடன் பணத்தை வசூலிப்பது தொடர்பாக, பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதி சாரா காக்ரில் கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது கடன் பணத்தை மீட்டெடுக்கும் வகையில், மல்லையாவின் கார்களை விற்பனை செய்ய, நீதிமன்றத்தின் அமுலாக்க அதிகாரிக்கு நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதன்படி, மல்லையாவின் கார்களை பறிமுதல் செய்து விற்பனை செய்யும் பணியை அமுலாக்கல் அதிகாரி விரைவில் ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாக, இந்திய வங்கிகளின் வழக்கை ஏற்று நடத்தும் டி.எல்.டி. சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் பெளல் கெய்ர் தெரிவித்தார்.
SHARE:

0 comments: