Sunday, October 28, 2018

ஜனாதிபதி மைத்திரியின் திடீர் மாற்றத்திற்கான அதிரடி காரணம் வெளியானது!

சுமூகமாக சென்றுகொண்டிருந்த நல்லாட்சியில் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அரசியல் பிரளயத்திற்கான காரணம் என்னவென்பதே பலரது கேள்வியாக உள்ளது.

இதற்கான காரணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான பின்னர், அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய அக்கறை தொடர்பாக ஜனாதிபதிக்கு பிரச்சினை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதிக்கு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் நிமல் சிறிபால கூறினார். அதன் பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டதாக கடந்த ஒருமாத காலமாக அரசாங்கத்திற்குள் பாரிய சர்ச்சைகள் நீடித்து வந்தன. இச்சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் தெரியுமென குறிப்பிடப்பட்ட நிலையில், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று முன்தினம் கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதியை கொலைசெய்ய திட்டம் தீட்டியதில் பொலிஸ் தரப்பு உரிய முறையில் செயற்படவில்லையென தெரிவித்து நாடாளுமன்றில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் கடந்த அமர்வுகளில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபரை பதவிநீக்கவேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்திய போதும், ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு மறுப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: