Thursday, October 25, 2018

டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மகத்தான கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

35வயதான டுவைன் பிராவோ, தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ’14 வருடங்களுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக களமிறங்கினேன். அந்த தருணம் இன்றும் என் நினைவில் இருக்கின்றது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். அப்போது மெரூன் தொப்பியை பெற்றேன். அப்போது உற்சாகத்தையும், பேரார்வத்தையும் பெற்றேன். அதனை என் வாழ்கை முழுவதில் வைத்திருக்கின்றேன்.

எனினும், நான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக எதிர்வரும் நாட்களை நகர்த்தவுள்ளேன். எனது வாழ்க்கையை கொண்டு செல்ல அதனை ஏற்க வேண்டும்.

மற்றவர்கள் செய்ததைப் போல நான் செய்ய வேண்டும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு சர்வதேச அரங்கை விட்டு விலகுகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வரலாற்றில் முத்திரை பதித்த சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

அறிமுகமான காலப்பகுதியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு துணை நின்ற டுவைன் பிராவோ, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளங்கியவர் ஆவார். அத்தோடு துடுப்பாட்டம், பந்து வீச்சு களத்தடுப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்கிய வீரராவார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டையும் தாண்டி தொழில்முறை கிரிக்கெட் தொடர்களிலும் அவர் உள்வாங்கப்பட்டார். அந்த தொடர்களிலும் அவர் சாதித்ததால் அவருக்கு பணம், புகழ் என அனைத்தும் பின்தொடர்ந்தன.

ஆடுகளத்தையும் தாண்டி வீரர்கள், இரசிகர்கள் என அனைத்து தரப்பினருடனும் வெகுளியாகவும், நட்புறவுடனும் பழகுவதினால் அவருக்கு பல நாடுகளிலும் இரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.

கிரிக்கெட் உலகில், ஒரு வீரருக்கு கிடைக்கும் அனைத்து அங்கீகாரங்களையும் பெற்ற வீரர் என்ற பட்டியலில் பிராவோவும் உள்ளார் என்பது அவரது கிரிக்கெட் சாதனையாளர் என்ற கௌரவத்தின் சான்றாகும். இது தவிர அவர் இசைத்துறையிலும் கைத்தேர்ந்தவர் ஆவார்.

எனினும், கடந்த காலங்கில் கிரிக்கெட் சபையுடனான முறுகல் நிலை காரணமாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்தாலும், அவர் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப எண்ணமில்லாத பிராவோ, அனைத்து வித சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார்.

பிராவோ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இறுதியாக விளையாடினார். இறுதியாக 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் விளையாடினார்.

எதுஎவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகள் அணி, அதிசிறந்த சகலதுறை வீரரை இழந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ள நிலையில் பிராவோவின் இழப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.

பிராவோ, 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 66 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலகம் போற்றும் மகத்தான இந்த வீரரின் ஓய்வு அறிவிப்பானது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென இரசிர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களின் வாழ்த்தோடு வெற்றிக்கிண்ணமும் இணைகின்றது.
SHARE:

0 comments: