Sunday, November 4, 2018

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! – நாமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாற்றும் செயற்பாடு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய அரசாங்கம் தகுந்த முடிவை அறிவிக்கும் என்றும் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நாமல் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாற்றும் செயல்.

தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன், அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: