Sunday, November 11, 2018

ஜனநாயக குடியரசு மாற்றம் பெற்று சர்வாதிகார ஆட்சியாகிவிட்டது: மரிக்கார் குற்றச்சாட்டு

இலங்கை ஜனநாயக குடியரசு என்ற பெயர் மாற்றமடைந்து தற்போது சர்வாதிகார ஆட்சி என்ற அடையாளத்தை பெற்றுக்கொண்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”இலங்கை ஜனநாயக குடியரசு என்ற பெயர் மாற்றமடைந்து தற்போது சர்வாதிகார ஆட்சி என்ற அடையாளத்தை பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை முற்றாக காலால் உதைத்துள்ள செயற்பாட்டையே ஜனாதிபதி இன்று செய்துள்ளார்.

நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சி முறைமைக்கு முடிவுகட்டி, சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டவும் கொள்ளையர்களை பிடிக்கவுமே மைத்திரியின் ஆட்சியை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்று அனைத்தையும் ஜனாதிபதி பொய்ப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமானத்தில் கஜு சாப்பிட்ட போதையிலேயே ஜனாதிபதி இதனை செய்துள்ளார். இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது. இதனால்தான் நாம் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.

மீண்டும் இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு நாம் இடமளிக்கக்கூடாது. மைத்திரி- மஹிந்த தரப்பினரின் அரசமைப்பு, ஜனநாயக விரோத செயற்பாடுகளால் அனைத்துத் தரப்பினரும் வெறுப்படைந்துள்ளார்கள். இதனால் எம்மீது அதிருப்தியடைந்தவர்கள்கூட இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

இதுவே, இந்தத் தரப்பினரின் தோல்வியை உறுதி செய்துள்ளது. மேலும், மஹிந்தவுக்கு 30 வீத வாக்குகள் குறைவடைந்துள்ளன. மைத்திரிக்கு முற்றிலுமாக வாக்குவீதம் இல்லாது போயுள்ளது. எனவே, எமது வெற்றி இப்போதே உறுதியாகியுள்ளது.

எனவே, நாம் தேர்தலுக்குச் செல்ல அஞ்சவில்லை. அத்தோடு, ஜனாதிபதியின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இன்னும் மொட்டுக் கட்சியினர் மீது நம்பிக்கை வரவில்லை என்றே தெரிகிறது. இதனாலும் அந்தத் தரப்பினருக்கிடையில் பிளவொன்று ஏற்பட்டுள்ளது. இதுவும் பொதுத்தேர்தலின்போது எமது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது புதிய வாக்காளர்கள் வந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் புதியதோர் அரசியல் களத்தையே எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்கு ஏற்றாப்போல் அரசியல் களத்தை நாமும் புதுப்பிக்க வேண்டும். அப்போது செய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ வரவேண்டும் என்றே நினைக்கிறார்கள். இந்தப் புதியக் களத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நோக்கமாகும்.

அதேநேரம், நாம் தேர்தலுக்கு அஞ்சுகிறோம் என்றும் சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடத்திலும் நாம் ஒரு சவாலை விடுக்கிறோம். அதாவது, முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்திக்காட்டுங்கள். மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளரான நியமித்து வெற்றிபெற்று காட்டுங்கள் என நாம் அந்தத் தரப்பினரைபார்த்து சவால் விடுக்கிறோம்.

அப்படி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால்கூட எமது தரப்பிலிருந்து வேட்பாளர் தயார் நிலையிலேயே உள்ளார்” என்றார்.
SHARE:

0 comments: