Sunday, November 4, 2018

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் ஜோகோவிச்!

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டை பிரேக் வரை நீடித்த முதலாவது செட்டை ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

பின்னர் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் காட்டிய ரோஜர் பெடரர் 7-5 என செட்டை கைப்பற்ற, வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட், பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் இரு வீரர்களும் தமது திறமையை வெளிக்காட்டியிருந்த நிலையில் 3 ஆவது செட், டை பிரேக் வரை நீடித்தது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச் அந்த செட்டை 7-6 என கைப்பற்றினார்.

இதனால் இப்போட்டியில் 7-6, 5-7, 7-6 என செட்டை கைப்பற்றி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
SHARE:

0 comments: