Tuesday, December 4, 2018

முக்கிய பொருளாதார ஆதரவாளருடன் சந்திப்பிற்கு தயாராகும் வடகொரியா!

வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றி யொங் ஹோ, நாட்டின் முக்கிய பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவாளராக விளங்கும் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடகொரிய அமைச்சரின் சீன விஜயம் இவ்வாரத்திற்குள் இடம்பெறும் என, சீன வெளியுறவுத்துறை அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

சீனாவுடனான சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தின் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகொரிய அமைச்சரின் விஜயம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடுகையில், ”வடகொரிய அமைச்சர் தனது சீன விஜயத்தின்போது சீன தலைவர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என நம்புகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து சீனா வடகொரியா மீது அதிருப்தி கொண்டுள்ள போதிலும், வடகொரியாவின் முக்கிய பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவாளராக சீனா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: