Saturday, May 12, 2018

மரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்!

மரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்!



தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு தாயக இளைஞர்களால் உருவாக்கம் பெற்று ''மரணம் முடிவல்ல'' இது மூங்கில் காற்றின் இசை எனும் இறுவட்டு வெளிவருகிறது. அதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.
யாழில் வர்த்தகர் கடத்தல்!

யாழில் வர்த்தகர் கடத்தல்!


யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.

வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றது.குறிப்பாக தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இக்கடத்தல் நடந்திருந்ததாவென்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

வடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு!

வடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளது மூத்த போராளிகள் மூவர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

முத்துக்குமார் மனோகர் ( பசீர் -காக்கா யாழ்ப்பாணம்), பாலிப்போடி சின்னத்துரை ( யோகன் - பாதர் மட்டக்களப்பு ) ஆத்மலிங்கம் ரவீந்திரா ( ரூபன் திருமலை) ஆகியோர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களிற்கான பொது ஏற்பாட்டுக்குழுக்களை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை அவர்கள் முதலமைச்சருடன் உரையாடியதாக தெரியவருகின்றது.

முன்னதாக முதலமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்த திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்திருந்த எழிலனது மனைவியும் அமைச்சருமான அனந்தியை அவர்கள் அணுகியதாக தெரியவருகின்றது.

எனினும் அதனை அனந்தி கண்டுகொள்ளாதிருந்த நிலையில் யாழ்.ஊடக அமையத்திற்கு இவ்விடயத்தை சிலதரப்புக்கள் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தன.இதனையடுத்து முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடுகள் செய்துவழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அவர்கள் அண்மையில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகங்களின் முன்னர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியப்பு!

அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியப்பு!


அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன. 

வடக்கு அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட சர்வதேச வான் எல்லைக்குள் ரஷிய விமானப்படைக்கு சொந்தமான இரு Tu-95 "Bear" ரக விமானங்கள் நேற்று காலை அத்துமீறி நுழைந்ததாகவும், அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்ததாகவும் வட அமெரிக்கா பகுதிக்கான விமானப்படை தளபதி மேஜர் ஆன்டுரு ஹென்னஸி இன்று குறிப்பிட்டுள்ளார்.
 கோத்தாவிடம் ஓடிய வடமாகாண அமைச்சர் அனந்தி!

கோத்தாவிடம் ஓடிய வடமாகாண அமைச்சர் அனந்தி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையும் யாழ்பல்கலைக்கழக மாணவ சமூகம் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்தவேண்டுமென அறிக்கைவிடுத்த வடமாகாண அமைச்சர் அனந்தி அது பற்றி விளக்கமளிக்க இனப்படுகொலையாளி கோத்தபாயவின் தொலைக்காட்சிக்கு ஓடோடி சென்றுள்ளார்.அதுவும் முக்கிய சந்திப்பொன்றின் போது இடைநடுவில் புறப்பட்டு அவர் சென்றுமிருந்தார்.இது மாணவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தரப்பில் கடும் சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்திருந்ததுடன் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பிற்கும் கோரிக்கைவிடுத்திருந்தது. அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகளும் மதத்தலைவர்கள்,மூத்த போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பேச்சுக்களின் ஆரம்பம் முதல் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நிகழ்வின் ஏகபோக ஒப்பந்தகாரர் தானேயென்ற பாணியில் இயங்க முற்பட்டிருந்தார்.மாணவர்களுடனான பேச்சில் முதலமைச்சர் நெகிழ்வு தன்மையினை கடைசி வரை காட்டிவர தமிழரசுக்கட்சியின் ரவிகரனோ கடைசிவரை முரண்பட்டவாறேயிருந்தார்.

ஒரு கட்டத்தில் கூட்டத்திலிருந்து வெளியேறவும் முற்பட்டிருந்தார்.

இவ்வாறு முறுகலாக நெருக்கடியுடன் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது தனக்கு இனப்படுகொலையாளி கோத்தபாயவின் பினாமி தெலைக்காட்சியான உள்ளுர் தொலைக்காட்சியில் விசேட செவ்வியிருப்பதாக புறப்பட்டு செல்லமுற்பட்டிருந்தார்.

இது அங்கு பிரசன்னமாகியிருந்த மூத்த போராளிகள் மற்றும் மாணவ பிரதிநிதிகளிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.நேற்று  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையும் யாழ்பல்கலைக்கழக மாணவ சமூகம் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்தவேண்டுமென பக்கம் பக்கமாக அறிக்கை விடுத்த வடமாகாண அமைச்சர் அனந்தி நாடகமாடுகின்றாராவென கேள்வியை எழுப்பியிருந்தனர்.

முன்னதாக வடமாகாணசபை தேர்தல் வாக்களிப்பன்று அனந்தி அரசுடன் இணைந்துவிட்டதாக கடும் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக குறித்த கோத்தபாயவின் தொலைக்காட்சியே அரங்கேற்றியுமிருந்தது.

அதற்கெதிராக தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று அனந்தி போராடியுமிருந்தார்.தற்போது தனது கணவர் உள்ளிட்ட இலட்சக்கணக்கானவர்களது காணாமல் போதலிற்கும் இன அழிப்பிற்கும் காரணமான கோத்தபாயவின் தொலைக்காட்சியின் முக்கிய முகவரான அனந்தி செயற்படுவது தெரிந்ததே.
நுண்கடன் திட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் திட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் திட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரி, மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இன்று (12) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

வந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, அம்பலத்தடி, நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, சந்தை வரை சென்று, மீண்டும் நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனைத் திப்பிச் செலுத்த முடியாமை காரணமாக 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனைத் தவிர குடும்பகளில் விரிசல், சமூக சீர்கேடுகள், நுண்கடன் பெற்ற பலர் மன உளைச்சாலுக்கு உள்ளான சம்பவங்களும் பல காணப்படுகின்றன” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், “நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே, கடன்களை வழங்க வேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறைக் குழியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

கழிப்பறைக் குழியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

அச்சுவேலிப் பகுதியில் கழிப்பறைக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கழிப்பறைக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழினப் படுகொலை நாள் வெளியீடாக வெளிவருகிறது ''வலியின் மொழி'' எனும் இறுவட்டு

தமிழினப் படுகொலை நாள் வெளியீடாக வெளிவருகிறது ''வலியின் மொழி'' எனும் இறுவட்டு

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவினரின் வெளியீடாக வெளிவருகிறது வலியின் மொழிகள் எனும் இறுவட்டு பாடல்கள் தாங்கி வருகிறது. குறித்த இறுவட்டை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நாடாத்தபடும் தமிழின இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றாகவே! முதலமைச்சர் மாணவர்கள் சந்திப்பில் முடிவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றாகவே! முதலமைச்சர் மாணவர்கள் சந்திப்பில் முடிவு!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தரப்புக்களும் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்திருந்ததுடன் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பிற்கும் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகளும் மதத்தலைவர்கள்,மூத்த போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களிடையே மாணவ பிரதிநிதிகள் பேசியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை இணைந்து முன்னெடுப்பது தொடர்பாக உரையாடப்பட்டு எந்தவித ஆட்சேபனையும் இன்றி ஒரே நிகழ்வாக அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதனை கூட்டாக உணர்வுபூர்வமாக நடத்தவும்,பொதுச்சுடரை உத்தியோகபூர்வமாக முதலமைச்சர் கையளிக்க பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பிரதிநிதியொருவர் ஏற்றுவார் என்பதும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை முதலமைச்சரே ஆற்றவேண்டுமென மாணவ பிரதிநிதிகள் கோரிக்கையினை முன்வைத்திருந்த நிலையில் அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். இதனிடையே மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் பத்து அம்சக்கோரிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்த நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணசபை ஏற்கனவே முன்னேற்பாடுகள் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களிடமும் வேலைகளை ஒதுக்கியிருப்பதால் அவற்றை மீளாய்வு செய்து மாணவர் பிரதிநிதிகளையும் பொது அமைப்புக்களினையும் இணைத்துக்கொள்வது தொடர்பான கூட்டம் நாளை முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பினரை பங்கெடுக்க அழைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ள தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்!

மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ள தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்!


தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி  சிலையருகே மே 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் மெழுகுவத்தி  ஏந்தி    நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இந்த நினைவேந்தல் நிகழ்வின் கோரிக்கை மற்றும் நிகழ்ச்சியினைப்  பற்றிய  விளக்கங்களை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டபல்வேறு கட்சி இயக்க தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் தாங்களும் கலந்துகொண்டு வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த இந்நினைவேந்தல் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க உதவுமாறு வேண்டுகிறோம்.


Place: Madras Reporters Guild, Chennai.
Date : 13-05-2018, Sunday ,Morning 11 AM

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.
சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை

சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை


சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருகோணமலை- சிறிமாபுர சந்தியில் நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தனது வீட்டின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அமர்ந்திருந்த தெல் குமார என அழைக்கப்படும், ஹெந்தவிதாரண செலின் குமார என்ற இந்த வணிகரை, கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர்.

கொல்லப்பட்ட தெல் குமார, 2005 ஒக்ரோபர் 20ஆம் நாள் கொழும்பு கிரிபத்கொடவில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான துவான் றிஸ்லி மீடின், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.

மேற்படி கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட, ஐஸ் மஞ்சுவுடன் தெல்குமார மிக நெருக்கமானவர்.

ஐஸ் மஞ்சு, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொழும்புக்கு கடத்திச் செல்வதற்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐஸ் மஞ்சு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் அவரது நண்பரான தெல் குமார நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அணு ஆயுதங்களைத் திருப்பித் தந்தால்! தேவையான பொருளாதார உதவிகளைச் செய்யோம் - அமொிக்கா

அணு ஆயுதங்களைத் திருப்பித் தந்தால்! தேவையான பொருளாதார உதவிகளைச் செய்யோம் - அமொிக்கா

வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மைக் பாம்ப்யோ கூறுகையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வரவேண்டும். 

அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

இக்கருத்துக்கிடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
17வருடங்களின் பின்னர் தண்டனை?

17வருடங்களின் பின்னர் தண்டனை?

கிண்ணியா, ஆலங்கேணியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் முதலாவது எதிரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர்.
2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி கிண்ணியா, ஆலங்கேணி பொலிஸ் காவலரணுக்கு அருகில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கொன்றமை தொடர்பில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவரும், புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட முதலாம் எதிரி குற்றவாளி என்று இனங்காணப்பட்டு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சாவகச்சோியில் விபத்து! இருவர் படுகாயம்!

சாவகச்சோியில் விபத்து! இருவர் படுகாயம்!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உந்துருளியும் ஈறுருளியும் மகிழுந்தும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் வடமாகானசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் , சதீஸ் ,கிசோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் ''எழுதிய விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?''

ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் ''எழுதிய விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?''

மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். 

இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 

முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்கினேஸ்வரன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும், கஜேந்திரகுமாரின் கூட்டமைப்பு எதிர்பார்க்காத வளர்ச்சியுமே காரணம்.

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. 

இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும்  குழம்பிப்போய் உள்ளனர். விக்கினேஸ்வரன் தனிக்கட்சி அமைப்பாரா? அக்கட்சி யாருடன் கூட்டுச்சேரும் என்பதெல்லாம் மர்மமாக இருக்கின்றது. அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்பது மட்டும் உறுதி. இந்தியாவில் பல நாட்கள் தங்கியிருந்ததினால் இந்தியா என்ன விடயங்களை அவருக்கு போதித்திருக்கும் என்பதும் மர்மமாக உள்ளது.

இந்தியாவிற்கு இரண்டு பிரச்சனைகள் ஒன்று தமிழ் மக்களின் மாற்று அரசியல் தலைமை என்பது கஜேந்திரகுமாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதாகும். கஜேந்திரகுமாரைக் கையாளமுடியாத நபர் என்றே இந்தியா பார்க்கின்றது. நரேந்திரமோடி நேரடியாக வந்தாலும் கூட இந்தியா தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகச் சென்றால் கஜேந்திரகுமார் முகத்திற்கு நேரே எதிர்த்துப் பேசுவார். இவ்வளவிற்கும் அவர் இந்திய நலன்களுக்கு எதிரானவர் அல்லர்.

ஆனால் இந்திய நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை விலையாகக் கேட்டால் அவர் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். சம்மந்தனைப் போல ஒரு எடுபிடியாக என்றைக்கும் அவர் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவிற்கு நல்ல நண்பராக இருக்கக் கூடியவர். துரதிஸ்டம் இந்தியா நண்பர்களை விரும்புவதில்லை. எடுபிடிகளைத்தான் விரும்புகின்றது. இந்தியாவின் இந்த நிலைப்பட்டினால் தான் நேபாளம், பூட்டான் மட்டுமல்ல சின்னஞ்சிறிய நாடான மாலைதீவு கூட இந்தியாவை விட்டுத் தூர விலகிச் செல்கின்றது.

மைத்திரி -     ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சிப்போக்கு ஆட்சி மாற்றத்தின் மூலகர்த்தாக்களாக இருந்த இந்தியாவையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இலங்கை தொடர்பான தமது நிகழ்ச்சி நிரல்கள் கண்ணுக்கு முன்னாலேயே உதிர்ந்து போவதை அவற்றினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெரும் தேசியவாதத்தையும், தமிழ் தேசியவாதத்தையும் மேலோட்டமாக கணிப்பிட்ட தவறுதான் இதற்குக் காரணம். இவை இரண்டும் இலங்கைத் தீவில் ஆழமாக வேரூன்றிய மரங்கள் என்பதை அவர்கள் கணிப்பிடத் தவறிவிட்டனர். இந்த மரங்களைப் பிடுங்க நினைத்தவர்கள் தலைகுப்புற விழுந்தது தான் வரலாறு. இன்று ரணிலும், சம்;;பந்தனும் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கின்றனர்.

கஜேந்திரகுமார் தலைமை மீது இந்தியாவிற்குள்ள மற்றோர் பயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேல்நிலைக்கு வந்தால் புவிசார் அரசியலில் தமிழர்களும் பங்காளிகளாகி விடுவர் என்பது தான். புலிகள் இருக்கும் போது புவிசார் அரசியலில் தமிழர்களும் பங்காளிகளாகியிருந்தனர். தமிழ் மக்கள் விவகாரத்தை விட்டு விட்டு ஒரு சிறிய விடயத்தைக் கூட கையாள முடியாத நிலையில் வல்லரசுகள் இருந்தன. புலிகளை வல்லரசுகள் சேர்ந்து அழித்தமைக்கு பிரதான காரணம் இதுதான். சம்பந்தன் தலைமை புலிகளின் கோரிக்கைக்கு குறைவான கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இருந்தமை இரண்டாவது காரணம்.

உண்மையில் புவிசார் அரசியலில் தமிழர்களின் கேந்திரப்பலம் சிங்கள தேசத்தை விட அதிகமானது. தமிழகமும் கேந்திர இடத்தில் இருப்பதால் தமிழர்களின் கேந்திரப்பலம் இரட்டிப்பானது. இந்த உண்மை இந்தியாவிற்கும் நன்கு தெரியும். அமெரிக்கா தலைiயிலான மேற்குலகத்திற்கும் நன்கு தெரியும். தற்போது சம்பந்தன் தலைமையை பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை புவிசார் அரசியல் மைதானத்திற்கு வெளியே துரத்தியுள்ளது. இதனால் தங்களின் நலன்களை மட்டும் பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்திலும்; இந்தப் பலத்தினை சம்பந்தன் பிரயோகிக்காததிற்கு காரணம் இந்த வல்லரசுகளின் பொக்கற்றுக்குள் இருந்தமைதான்.
இந்தியா விக்கினேஸ்வரனையும் கையாள முடியாத நபர் என்றே பார்க்கின்றது ஆனாலும் கஜேந்திரகுமாரை விட கையாளலாம் என நினைக்கின்றது. விக்கினேஸ்வரனா? கஜேந்திரகுமாரா? ஏன்ற தெரிவில் விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர மாற்றுத்தெரிவு இந்தியாவிற்கு இல்லை. உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஆனந்த சங்கரியை முன்னிலைப்படுத்த முனைந்து இந்தியா படுதோல்வி அடைந்திருக்கிறது. தோல்வி மட்டுமல்ல தனது விசுவாசியான சுரேஸ் பிறேமச்சந்திரனையும் அனாதையாக்கியுள்ளது.

2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த காலம் தொடக்கம் மாற்றினை  இறுக்கமாக அடையாளப்படுத்தி வந்தவர் கஜேந்திரகுமார் தான். எனவே மாற்று வாக்குகள் அவரது கட்சிக்குள் செல்லும் என்ற அரிச்சுவடி உண்மைகளைக் கூட இந்தியா ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா மட்டுமல்ல சுரேஸ் பிறேமச்சந்திரனும் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா மட்டுமல்ல சுரேஸ் பிறேமச்சந்திரனும் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு கோடி ஊழல் பற்றி சிவசக்தி ஆனந்தன் சிரமம் எடுத்து பிரச்சாரம் செய்த போதும் இதன் அறுவடையைப் பெற்றுக் கொண்டவர் கஜேந்திரகுமார்தான்.

இந்தியாவிற்குள்ள இரண்டாவது பிரச்சனை தனது விசுவாசிகளான சுரேஸ் பிறேமச்சந்திரன், ஜங்கரநேசன் போன்றவர்களுக்கு பாதுகாப்பான அரசியல் களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பது தான். இருவரும் விக்கினேஸ்வரனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடக்கின்றனர். விக்கினேஸ்வரனின் தாழ்வாரத்தில் ஒதுங்குவதைத்தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. கூட்டமைப்பு இணக்க அரசியலை எப்போது தேர்ந்தெடுத்ததோ அன்றே வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று விட்டது. தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளின் அடையாளங்களை தம் மீது பூச முற்பட்டாலும் வீழ்ச்சிப் போக்குத் தவிர்க்க முடியாதது. இதே வீழ்ச்சிப் போக்கு 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்த போதும் தமிழரசுக் கட்சி கண்டது. அந்த வீழ்ச்சிப் போக்கு அசைக்க முடியாத தளபதி எனக் கருதப்பட்ட அமிர்தலிங்கத்தைக் கூட 1970 தேர்தலில் வீழ்த்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி தமிழீழக் கோரிக்கையை எடுத்திருக்காவிட்டால் 70 களின் ஆரம்பத்திலேயே தமிழரசுக்கட்சி மடிந்திருக்கும். 1983 வரை அது உயிருடன் இருந்திருக்காது.

விக்கினேஸ்வரனைப் பொறுத்த வரை தனது இருப்பைப் பாதுகாப்பதற்கும், தனக்கு சார்பாகவுள்ள அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் என்போரின் இருப்பைப் பாதுகாப்பதற்கும் தனிக்கட்சி உருவாகுவது தவிர்க்க முடியாதது. அவர் பின்னர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேரலாம். இரண்டு தோணியில் கால் வைத்திருக்கும் சித்தார்த்தன் விக்கினேஸ்வரன் கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்க முடியாது. சிவகரனின் ஜனநாயகத் தமிழரசு கட்சியும் இக் கூட்டணியில் இணைய முற்படலாம்.
விக்கினேஸ்வரனுக்கு சவாலாக இருக்கப் போவது கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னிணியுடன் கூட்டணி அமைப்பதுதான். 2009 தொடக்கம் மாற்று என அடையாளப்படுத்தி தற்போது சற்றுப் பலமாக இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டுவிட்டு விக்கினேஸ்வரனால் பிரகாசிக்க முடியாது.

கஜேந்திரகுமார் அணியுடன் இணையாவிட்டால் இன்று விக்கினேஸ்வரனுடன் இருக்கும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த பலர் கூட அவருடன் இருக்க மாட்டார்கள். தமிழ் சிவில் சமூக அமையம் போன்ற கல்வியாளர்களின் அமைப்புக் கூட ஆதரவாக இருக்க மாட்டார். ஒப்பீட்டு ரீதியில் வலுவான இளைஞர் அணியைக் கொண்டிருப்பது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியே! அதில் பெரும்பான்மையோர் கொள்கைக்காக முன்னணியில் சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஆவர். 'எழுக தமிழ்' வெற்றியில் இவ் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்திலும் அதிகமாகச் செயற்பட்டவர்கள் இவர்களே! தற்போது உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து வலுவான உள்ளூர் தலைமைத்துவமும் முன்னணிக்குக் கிடைத்துவிட்டது. புலம் பெயர் நாடுகளிலும் வலுவான ஆதரவுத்தளம் முன்னணிக்கு உண்டு.

கஜேந்திரகுமார் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவாகவே கூறிவிட்டார். விக்கினேஸ்வரன் தங்களது கட்சியில் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அவர் தனிக்கட்சி அமைத்தாலும் கூட்டுச் சேர தயாராக உள்ளோம் என்றும் கூறியிருக்கின்றார் ஆனால் கொள்கை உறுதிப்பாடு உள்ளவர்களை மட்டும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கின்றார். இதன் நேரடியான பொருள் விக்கினேஸ்வரன் அணியுடன் மட்டும் நாம் கூட்டுச்சேர தயாராக இருக்கின்றோம் என்பதே! சுரேஸ் பிறேமச்சந்திரனோடு, சித்தார்த்தனோடு கூட்டுச் சேர்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதே! பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்து கொள்வது கஜேந்திரகுமாருக்கு முரண்பாடாக இல்லை.

சித்தார்த்தனைத் தவிர்த்துவிட்டாலும் சுரேஸ் பிறேமச்சந்திரனோடு கூட்டுச் சேர்வது விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாதது.  இந்தியாவைத் திருப்திப்படுத்தல் என்பதற்கப்பால் தன்னைச் சுற்றிச் சுற்றியே வரும் ஒருவரை புறம் தள்ள அவரால் முடியாது. இதைவிட புதுக்கட்சியை உடனடியாக பதிவு செய்ய முடியாது. ஆனால் இரு கட்சிகளின் கூட்டணியை பதிவு செய்யலாம். இந்த விடயத்திலும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவருக்குத் தேவையாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் கூட்டணி ஒன்று அமைப்பதானால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் சேர்ந்து மட்டுமே அமைக்கலாம். விக்கினேஸ்வரன் அக்கூட்டணிக்கு தலைமை தாங்கலாம். சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி போல முக்கூட்டுத்தலைமையை விரும்பக் கூடும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்கினேஸ்வரனுடன் மட்டும் தான்  ஓர் உடன்படிக்கைக்குச் செல்லும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் உடன்படிக்கைக்குப் போகாது. இந்த நெருக்கடியான சூழலில் விக்கினேஸ்வரன் தனது அணியுடன் சுரேஸை இணைத்துக் கொண்டு தானும், கஜேந்திரகுமாரும் மட்டும் உடன்படிக்கைக்குச் செல்லலாம். ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படலாம். கஜேந்திரகுமாருக்கு பலர் கூறும் ஆலோசனை விக்கினேஸ்வரன் அணியில் யாரும் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் அவருடன் மட்டும் உடன்படிக்கைக்குச் செல்லுங்கள் என்பதே!
மறுபக்கத்தில் சம்பந்தன் தலைமையும் விக்கினேஸ்வரனுடன் சமரசத்திற்கு செல்லலாம். இச்சமரசம் முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதாக அமையாது. தேசியப் பட்டியல் மூலமோ அல்லது நேரடி வேட்பாளர் மூலமோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுப்பதாக அமையும். சர்வதேச விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு தரலாம் என ஆசைகாட்டப்படலாம். முதலமைச்சர் பதவியைக் கொடுப்பது இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரலைக் குழப்பி விடும் என சம்பந்தன் தலைமை அஞ்சுகின்றது. வெறும் அபிவிருத்தியை மட்டும் பேசும் அமைப்பாக வடமாகாண சபை இருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. என்னதான் எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் வடமாகாண சபை ஒரு அரசியலில் மேடையாக இருப்பதை எவராலும் தடுக்க முடியாது. வடமாகாண சபை அதிகாரங்களைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமானது ஆனால் அரசியலைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய-அமெரிக்க சக்திகளுக்குள்ள கவலை முன்னரே கூறியது போல தமது கண்ணுக்கு முன்னால் தமது நிகழ்ச்சி நிரல் சிதைந்து போவது தான். பெருந்தேசிய வாதம் தான் இந்தச் சிதைவுக்கு காரணம். அரை குறை அரசியல் தீர்விற்கு கூட தயாரில்லாத நிலையிலேயே பெரும் தேசிய வாதம் உள்ளது. இதன் விளைவை இலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பார்க்க முடிந்தது. அங்கு உலகத் தலைவர்களினால் மைத்திரிக்கு கொடுக்கப்பட்ட முன்னைய கௌரவம் கொடுக்கப்படவில்லை. மைத்திரி விரும்பியபடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடாத்தமுடியவில்லை. அரசாங்கத்தை இந்தியாவும், அமெரிக்காவும் சேலைன் கொடுத்தே காப்பாற்றி வருகிறது. சேலைன் குழாய்களை எடுத்து விட்டால் அன்றே அரசாங்கம் மரணித்துவிடும்.

இந்த இடியப்ப சிக்கல் சூழலில் விக்கினேஸ்வரன் என்ன செய்யப்போகின்றார்? இது தான் தமிழ் அரசியலில் இன்று எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி? 
இன்டர்பேர் பட்டியலில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கம்!

இன்டர்பேர் பட்டியலில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்தப் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய தேவைக்காக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டது என குறித்த கேள்வி எழுப்பியுள்ளது அப்பத்திரிகை.

தற்பொழுது இன்டர்போல் பட்டியலில் எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

37 புலிகளின் தலைவர்கள் முன்னதாக இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த புலி உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எவரும் உயிரிழக்கவில்லை. இந்த நிலையில் யாரின் தேவைக்கு அமைய இந்தப் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்களை இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட முடியும் என இன்டர்போல் தமது ஊடகத்திற்கு அறிவித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன.

இன்டர்போல் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் காலத்திற்கு காலம் வெவ்வேறு விதத்தில் தெற்கின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியானது!

மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியானது!


2017ம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி! - தற்காலிக முனையம் அமைக்க நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி! - தற்காலிக முனையம் அமைக்க நடவடிக்கை


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக முனையமொன்று அமைக்கப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். 

இந்த முனையத்தை அமைப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை ஜூன் மாதத்துடன் முடிவடைவதுடன், கட்டுமானப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்றும் கூறினார். 

இது மாத்திரமன்றி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலையான இரண்டாவது முனையத்தை அமைப்பதற்கு புதிதாக கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

இதற்காக ஏற்கனவே கோரப்பட்ட கேள்விப்பத்திரத்துக்கு அமைய ஜய்க்கா நிறுவனம் வழங்கிய ஒப்பந்தக் கட்டணம், பொறியியல் ரீதியான மதிப்பீட்டைவிட 45 வீதம் அதிகமானது. எனவே இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு புதிய கேள்விப்பத்திரம் கோரப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் சரக்குக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இங்கு இரண்டாவது ஓடுதளமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார். 

அத்துடன், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பயணிகளுக்கு நட்புறவான சேவையை வழங்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவுஸ்ரேலியாவில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”

அவுஸ்ரேலியாவில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் சனிக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில்  நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரகளையும் / களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும். 

மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும். 



நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!
எதிர்வரும் 17 ஆம் திகதி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்- GMOA

எதிர்வரும் 17 ஆம் திகதி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்- GMOA


சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது
விமானநிலையத்தில் பிரவேசிக்கும் தரகர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

விமானநிலையத்தில் பிரவேசிக்கும் தரகர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை


விமான நிலையங்களில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது 10 மாத சிறைத்தண்டனை வழங்கும் விதத்தில் விமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

சிலபோது இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமுல்படுத்தும் விதத்திலும் இத்திருத்தச் சட்டம் அமையப்பெற்றுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

நேற்று பாராளுமன்றத்தில் இத்திருத்தச் சட்ட மூலத்தை முன்வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார். இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பல்வேறு விதமான தரகர்கள் விமானப் பயணிகளின் உறவினர்கள் எனத் தெரிவித்து விமானநிலையத்துக்குள் காணப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒருவகையில் கூறுவதானால், விமானநிலையத்தை ஆக்கிரமித்துள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இவர்களது நடவடிக்கைகள் விமானநிலைய நிருவாகத்துக்கு பெரும் பாதிப்பாகவுள்ளது. சில தரகர்கள் விமான நிலையத்தில் குற்றச்செயல்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு


மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் லஹிரு வீரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் சைட்டம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சைட்டம் மாணவர்கள் இந்த விடயம் குறித்து நியாயமான தீர்வொன்றை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும் எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்
ஹோமகம – தியகம பகுதியில் விவசாய தொழிநுட்ப பிரிவொன்றை மூடுவதற்கான தீர்மானம்?

ஹோமகம – தியகம பகுதியில் விவசாய தொழிநுட்ப பிரிவொன்றை மூடுவதற்கான தீர்மானம்?


ஹோமகம – தியகம பகுதியில் விவசாய தொழிநுட்ப பிரிவொன்றை மூடுவதற்கான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய ஆலோசனையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவர் ஏ.என் உதயசிறி இதனை தெரிவித்துள்ளார்.

வேதனம் உரிய முறையில் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையொன்றை முன் நிறுத்தி விவசாய திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஹோமகம – தியகம பகுதியில் உள்ள குறித்த விவசாய ஆய்வகத்தை மூடுவதற்கான எந்த தீர்மானமும் இல்லையென பிரதி விவசாய அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிப்பு

பொருட்களின் விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிப்பு


பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் மூலம் மக்களின் அன்றாட செயற்பாடுகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளதாக என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரகம விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்
மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு

மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக மேல் , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அம்பாறை , மட்டக்களப்பு , குருணாகலை போன்ற மாவட்டங்களில் சுமார் 100 மில்லி மீற்றர ்அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும ்என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது
பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை

பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை


பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. 

தற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 42 நாட்கள் விடுமுறையை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். 

முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம், 84 நாட்கள் பிரசவ விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இரண்டு திருத்தச் சட்ட பிரேரணைகளின் படி, உயிருடன் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குமாக, 84 நாட்களை பிரசவ விடுமுறையாக, எடுத்துக் கொள்ளலாம். 

இந்த 12 வார விடுமுறையில், இரண்டு வாரங்கள் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக் கொள்ளலாம். பிரவசத்துக்கு முந்திய இரண்டு வாரங்களும் அவர் பணியாற்றியிருந்தால், பிரசவத்துக்குப் பிந்திய 10 வாரங்களுக்கு பின்னர் அந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். 

பிரசவத்தின் பின்னர் குழந்தை உயிருடன் இல்லாத சந்தர்ப்பத்தில், 42 நாட்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். இந்த பிரசவ விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும். விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய ஆண்டு விடுமுறைகளுக்கு மேலதிகமாக இது வழங்கப்படும்
மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்

மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்


காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது. 

இதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. 

காணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. 

இந்தக் கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட 7 ஆணையாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள்

அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள்


அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார். 

இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்!

அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்!


இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களும அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் முன்வைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'வயம்ப ரண அபிமன்' இராணுவ நினைவுத் தூபியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரைகளையும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதையும் தற்போதைய அரசாங்கம் நிறுத்தியது.

இராணுவத்தில் இருந்த சிலர் வேறு சில நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டனர்.

எனினும், அது இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடல்ல.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட இடமளிக்காத அதேவேளை, அவர்களுக்கான உயரிய கௌரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்
தமிழின இனப்படுகொலைக்கு நீதி கோரி ஜேர்மனியில் தொடரும்  கவனயீர்ப்பு!

தமிழின இனப்படுகொலைக்கு நீதி கோரி ஜேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு!

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பன்னாட்டு சமூகத்தை கவனயீர்க்க பேர்லின் நகரத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட  கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம் காலை ஹம்பூர்க் நகர மத்தியிலும் மாலை கண்ணோவர் நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது . "பேசப்படாத உண்மைகள் " எனும் கண்காட்சி ஈழத்தமிழர்களின் வரலாற்று பதிவுகளையும் , ஈழத்தமிழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறும்  இனவழிப்பு விபரங்களையும் ஆதாரபூர்வமாக உள்ளடக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியை வேற்றின மக்கள் பார்வையிட்டத்தோடு தமது கரிசனையையும் ,அதே நேரத்தில்  ஐநாவின் பாராமுகத்தை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்தனர் . இக் கண்காட்சியில் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் , யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். 

நாளையை தினம் காலை 10 மணிமுதல் மதியம் 14 மணிவரை இக் கவனயீர்ப்பு கண்காட்சி Osnabrück தலைமை தொடரூந்து வெளி வளாகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.