Saturday, May 26, 2018

தப்பித்து ஓடிய சுவாமிநாதன்!

தப்பித்து ஓடிய சுவாமிநாதன்!

இலங்கை அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை முற்றுகையிட்டு கேபபாபுலவு மக்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இன்றுடன் 452 ஆவது நாளாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவுகிராம மக்கள், அமைச்சரை நேரில் சந்தித்து, தமது காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடடுவதற்காக கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்திற்குமுன்னால் திரண்டிருந்தனர்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலக கட்டடத்தின் வாசலிலேயே வழிமறித்து நின்ற நிலமீட்பு போராட்ட மக்கள், பல மணி நேரங்கள் அங்கேயே காத்திருந்ததுடன், நிகழ்வு முடிந்து வெளியே வந்த தமிழ்தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆ.புவனேஸ்வரன்மற்றும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை செயலகத்தை விட்டு வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சர்டி..எம்.சுவாமிநாதனையும், கேப்பாபுலவு நில மீட்புபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் நுழைவாசலில்நின்று வழிமறித்து தமது காணிப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தினர்.

எனினும் மக்களுக்கு சரியான பதில்வழங்கமுடியாத நிலையில் பொலிசார் மற்றும் அமைச்சரின் மெய் பாதுகாலர்களையும்பயன்படுத்தி மக்களை தள்ளிவிட்டு அமைச்சர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 
ஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி!

ஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி!


இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது காலணியை கழற்றி ஆலயத்தில் வழிபடமறுத்ததையடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வடமராட்சிப்பகுதிக்கு விஜயம் செய்த அவர் வரலாற்றுப்புகழ் மிக்க வல்லிபுர ஆலயத்திற்கும் வழிபாட்டிற்கு சென்றிருந்தார்.அவரே இந்து கலாச்சார அமைச்சராகவும் இருந்திருந்த நிலையினில் ஆலய நிர்வாகம் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்க காத்திருந்தது.

ஆனாலும் ஆலயத்தினுள் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் பாதணியை அணிந்தவாறு அமைச்சர் உள்நுழைய முற்பட நிர்வாகமோ பாதணியை கழற்றி உள்ளே வர அழைத்தது.


எனினும் அமைச்சர் இதற்கு மறுதலிக்க இழுபறிகளால் கோபமுற்ற அமைச்சர் ஆலயத்தினுள் வராது வெளியே பாதணியுடன் நின்று வணங்கி வெளியேறியிருந்தார்.   

இந்திய, இலங்கை கூட்டு சதி: மீண்டும் முரண்பாடு!

இந்திய, இலங்கை கூட்டு சதி: மீண்டும் முரண்பாடு!இலங்கை மற்றும் இந்திய அரசுகளது ஆசீர்வாதத்துடன் மீண்டும் தமிழ் முஸ்லீம் கலவரங்களை தூண்டிவிட சதிகள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.

தமிழர் தேசம் மத சார்பற்றதாக இருக்க வேண்டும். மத சார்பின்மை என்பது மதங்களை மதிக்காத தன்மை அல்ல. மதங்களை சமனாக மதிக்கிற தன்மை.

ஆனால் மத பாகுபாடுகள் எதுவும் அற்று நடந்து கொண்டிருக்கும் எமது தேசிய அரசியலை மத சாயம் பூசி நலிவிழக்க செய்யும் நடவடிக்கைகள் பலவழிகளில் நடக்கின்றது.

முஸ்லிம்- தமிழ் மக்களை மோத விட்டு, அங்கு தமிழர்களுக்கு துணையாக பொது பல சேனா நுழைவது , மனிதவதை நடக்கும் போது அதற்கு ஓடி ஓடி ஆதரவு கொடுத்துவிட்டு, தற்போது மிருகங்களின் மேல் அதீத பாசம் பொங்கி , மனிதாபிமானம் நிறைந்து வழிய , பௌத்த பிக்குகள் சைவ சமய சபைகளோடு கைகோர்த்து நிற்பது போன்ற ஆபத்தான அணுகுமுறைகள் எமது மண்ணில் நாசூக்காக அரங்க்கேற்றப்படுகிறது.

ஆயுதபோர் முடிவுக்கு வந்த காலம் முதல் , தமிழர்களிடையே உள்ளக பிளவுகளை தூண்டிவிடும் நடவடிக்கைகள் மிக தீவிரம் பெற்றிருந்தன.

பிரச்சினைகளை ஊதிப்பெருப்பித்து , எண்ணெய் ஊற்றி எரிய விட்டு, பூதாகாரமாக்கி, அவைதான் எம் மைய பிரச்சினை என எம்மையே நம்பவைக்கும் வழமையான “அதிகாரத்தரப்பு” அணுகுமுறைகள் மிக கனகச்சிதமாக நடைபெற்றுவருகிறது. 

இப்பிரச்சினைகளை ஊதி பெருப்பிக்க கடுமையாக பல தரப்புக்களும் இயங்கிவருகிறன.

சட்டவிரோத மாட்டிறைச்சி கொல்களத்திற்கும் சட்டத்துக்கு மீறி அதிக தொகையில் பசுக்களையும் காளைகளையும் இறைச்சிக்காக வெட்ட அனுமதி கொடுத்த சாவகச்சேரி நகரசபை ஆளும் தரப்புக்கு எதிராக எடுக்கப்ப்டவேண்டிய அதிகார துஸ்பிரயோக நடவடிக்கையாகும். இன்று இவ்விடயம் ஒரு சமயத்துக்கு மட்டுப்பட்ட பிரச்சினையாக குறுக்கப்பட்டு, அதற்குள் பிக்குமாரையும் ஆதரவுக்கு இழுத்து வந்துள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமாகிய மறவன்புலவு சச்சிதானந்ததின் தலைமையில் நடந்தேறும் இந்த அசிங்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

ஒருவர் மாட்டு இறைச்சியோ பசு இறைச்சியோ சாப்பிடுவது அவரது விருப்பம். அது நல்லது என பிரசாரம் செய்வது அவரது உரிமை. அது போல மாட்டு இறைச்சியோ பசு இறைச்சியோ சாப்பிடாமல் விடுவது இன்னொருவர் உரிமை . அதை சாப்பிட வேண்டாம் என பிரசாரம் செய்வதும் அவரது உரிமை. ஆனால் இது சைவர்களுக்கும் பௌத்தர்களுக்கும்  உரிய நாடு.இங்கு எதற்கு மாட்டிறைச்சி கடை என்று கிளம்புபவர்களுக்கு ஆரம்பத்திலேயே தடைபோடவேண்டும்.

தமிழ் மக்கள் அரசியலிலோ போராட்டத்திலோ ஒரு போதும் மதத்தை , சாதியை, இனத்தை, பிரதேசத்தை முன்னிறுத்தாததவர்கள். அப்படி முன்னிறுத்துபவர்களை நிராகரிக்கவேண்டும்.

அது போல , “பௌத்தரும் சைவர்களும் வாழும் நாட்டில் மாட்டு இறைச்சி கடை எதற்கு” என கிளம்பி இருக்கும் திட்டமிட்ட கூத்தாடிகளை அடியோடு ஒதுக்கிவைக்கவேண்டும்.

இதேபோன்று முஸ்லீம்கள் தரப்பிலும்; முஸ்லீம் அடிப்படைவாதிகள் சிலரால் நேற்று வினோத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் தமிழரால் நிர்மாணிக்கப்படும் உணவு விடுதியை தடுத்து நிறுத்துமாறும்.குறித்த முஸ்லீம் ஊரில் தமிழர் வியாபாரம் செய்யக்கூடாது என்ற கிரமமக்களின் கட்டளையை மதிக்காமல் குறித்த உணவகத்துக்கு அனுமதி வழங்கிய மாநகர சபை முதல்வருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

யாழ் சோனக தெருவில் உள்ள தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துவதுடன் தமிழரால் அங்கு சகல அனுமதியும் பெற்று நிர்மாணிக்கப்படும் உணவத்துக்கு எதிராக இனவாத கூட்டாளிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தமிழர் வட்டாரங்களில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களென தெரியவருகின்றது.

தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்! - சிவாஜிலிங்கம்

தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்! - சிவாஜிலிங்கம்


அனுமதி பெறாமல் நிகழ்வை நடத்தியமைக்காக வங்கி அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வேண்டும். அதனை விடுத்து ஹற்றன் நஷனல் வங்கியை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு வங்கியின் முகாமைத்துவம் தள்ளி விடக் கூடாது என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டித்தமை தொடர்பில், தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து, அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். முகாமைத்துவத்தின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் சிலர் தமது சேமிப்பு கணக்கை மூடியும் உள்ளனர். இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளிலே அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களிலே அஞ்சலியைச் செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர். அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்றுதான் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவத்தினர்கூட குளிர்பானங்களை வழங்கியிருந்தனர். இந்தப் பின்னணியிலே நினைவேந்தலை கடைப்பிடித்த உத்தியோகத்தர்களை ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் இடைநிறுத்தியுள்ளது. ஏனையோர் மீதும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறாயின் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதையும் இவர்கள் அவமரியாதை செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. தேசிய வீரர்கள் தினத்தில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொப்பி மலரை அணிந்திருந்தார். அதன்பின்னர் கூட மக்கள் வாக்களித்து அவரைத் தெரிவு செய்துள்ளனர். எனவே, எமது மக்களின் படுகொலையை நினைவேந்துவதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது. தமிழர்கள் பணிப்பாளர் சபையில் கொண்டிருக்க கூடிய ஹற்றன் நஷனல் வங்கி, இவ்வாறு நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. வங்கியின் இந்தச் செயற்பாட்டை அறிந்தவுடன் நூற்றுக் கணக்கானோர் தமது கணக்குகளை மூட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நல்லதொரு அறிகுறி இல்லை. இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு - கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஷனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம். மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அதனால் வங்கிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே, உத்தியோகத்தர்களின் இடைநிறுத்த உத்தரவை வங்கியின் முகாமைத்துவம் மீளப் பெறவேண்டும். இல்லையேல் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகும்” என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடப்பாடு! - அமெரிக்க தூதுவர்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடப்பாடு! - அமெரிக்க தூதுவர்


வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடப்பாடு என்று இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். “ இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்க வேண்டும், காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கக் கூடிய நல்லிணக்க முயற்சியை இலங்கையே முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என அமெரிக்கா மாத்திரமல்ல இலங்கையும் ஐ.நா செயற்பாடுகள் மூலம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கை வெற்றியடைய வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம், இலங்கையுடனான எங்கள் உறவுகள் விஸ்தரிக்கப்படுவதற்காக பெருமளவு முதலிட்டுள்ளோம். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது. அதேவேளை இன்னமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. இலங்கை யுத்தத்திற்கு பிந்திய காலத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் இந்த வேளையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கையுடையது. 2016 ம் ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த சிலரில் நானும் ஒருவன். தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்ட வேளை வளர்ந்தவர்கள் கூட கண்ணீர் விடுவதை மாத்திரம் நான் பார்க்கவில்லை, ஐம்பது வருடத்திற்கு பின்னர் அரச நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்து கண்ணீர் சிந்தப்படுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். இதுவே நல்லிணக்கத்தின் பலம்,மிக மோசமான துயரம் மற்றும் மனவேதனைகளிற்கு பின்னர் காயங்கள் ஆற்றப்படுவதன் பலம் இது. நாங்கள் சமமான வாய்ப்புகளையே கோருகின்றோம்.நாங்கள் மிக நீண்ட காலமாக இந்தோ பசுபிக்கில் நிலை கொண்டுள்ளோம். நாங்கள் வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுபிக்கினை விரும்புகின்றோம்.அனைவருக்கும் பலனளிக்க கூடிய சர்வதேச முறையை நாங்கள் விரும்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அவலத்திற்கு வடகிழக்கில் கண்டனம்!

தூத்துக்குடி அவலத்திற்கு வடகிழக்கில் கண்டனம்!


தமிழகத்தின் தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்புகப்போராட்டமும்,படுகொலையானவர்களிற்கான அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டினில் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த தமிழக காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தனர். குறிப்பாகப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் பற்றிய தகவல்கள் இல்லாதுள்ளது.இன்னும் பலர் காணாமல் போயிருப்பதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் முன்னாலும் திருமலையிலும் மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெற்ற கண்டனப் போராட்டங்களிலும் நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் நூற்றுக்கணக்கான கட்சி அங்கத்தவர்கள்,மத தலைவர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ,மதகுருமார் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை பதிவு செய்திருந்தனர்.வெளியாகியது மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா உரையாடிய ஒலிப்பதிவு

வெளியாகியது மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா உரையாடிய ஒலிப்பதிவு


தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பது போல் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்   குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்

அது போல் 2016 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு, ஜெயலலிதா தினந்தோறும் எடுத்துக்கொண்ட உணவு வகைகள் பட்டியலும் அதில் இடம்பெற்று உள்ளன. அவை ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் ஆகும்.   2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் அது

* காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார் 

* மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார்

* இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா

2016 செப்.27ஆம் தேதி ஜெயலலிதா பேசிய  பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 52 விநாடிகள் கொண்ட ஆடியோவில்  மூச்சுத்திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசி உள்ளார்.  தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று ஜெயலலிதா கேட்கிறார்; அதற்கு அப்போலோ மருத்துவர் அர்ச்சனா 140/80 இருக்கிறது என்று பதிலளிக்கிறார்.

ஜெயலலிதா இது எனக்கு நார்மல்தான் என்கிறார். ரத்தம் எடுக்க முடிய வில்லை என்றால்  விட்டுவிடுங்கள் என கூறுகிறார்

தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும்  ரசிகன் விசிலடிப்பது போல் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என ஜெயலலிதா கூறி உள்ளார்.
குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்!

குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்!


மொகமட் அலியின் குத்துச்சண்டை போன்று எமது நகர்வுகள் இருக்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட அமர்வு யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு சிறப்புரையாற்றிய அவர் எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது.

இன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு. கைபேசிகள், கணணிகள், தொலைக்காட்சிகள் போன்றவை சதா அவ்வாறான ஞானத்தைக் கொடுத்துக்கொண்டே உள்ளன.அதே போல் சுயநலமும் அவர்களுக்கு அதிகம். உலக ஞானத்தில் திளைத்தவர்கள் பொதுவாகவே சுயநலமிகளாக இருப்பார்கள் என்பது ஞானிகளின் கருத்து.


தமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது எமது கடமையாகும். இதுவரை காலமும் எமது அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனைச் செய்யவே இருக்கின்றோம். ஆனால் எமது காலத்தின் பின்னர் எமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகளே. திடீர் என்று தலைமைத்துவம் அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால் அதுநன்மை தரும் என்று நம்புகின்றோம். 

இதன் காரணத்தினால்த்தான் தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

சமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம். 

முதலில் அரசியலை எடுத்துக் கொள்வோம். எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள்என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.
இன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு. 

உலக அதி கூடிய எடைக்குரியகுத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திருக்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார். அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார். 

இதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

அதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த,நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பைஉண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்.எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து.

இன்று இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் நம்பிக்கையீனம் குடிகொண்டதால்த்தான் அவர்கள் சில தகாத வழிகளிலே செல்ல எத்தனிக்கின்றார்கள். பரீட்சைகளில் போதிய புள்ளிகள் இல்லாமை, மனதில் குறிக்கோள் இல்லாமை, குடும்பங்களுக்குள் ஏச்சுப் பேச்சுக்கள் என்று பல காரணங்களைக் கூறலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து சேர்வதால்அதனைப் பாவிக்கத் தெரியாமல் திண்டாடும் நிலைமையும் அவர்களை ஆத்திரம் அடைய வைக்கின்றது. சிலர் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்து மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றார்கள். மது அருந்துகின்றார்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றார்கள். வன் செயலிலும் ஈடுபடுகின்றார்கள். 

அவர்கள் மனதில் குறிக்கோள் இல்லாததே இதற்குக் காரணம். ஒன்றில் உயர் கல்வி ரீதியாக நான் இந்தவாறாக வருவேன் என்ற ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அல்லது விளையாட்டு ரீதியாக அவ்வாறான குறிக்கோள்கள் இருக்கலாம் அல்லது வணிக ரீதியாகக் குறிக்கோளகள்; இருக்கலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு சமயம் சார்பான குறிக்கோள்கள் கூட இருக்கலாம். குறிக்கோள்கள் அவசியம் என்பது எம் எல்லோருக்குந் தெரியும். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கனவு காணச் சொன்னார். எமது குறிக்கோள்கள் செயற்படுத்தப்படுவன என்று கனாக் காண வேண்டும். 

அரசியல் ரீதியாக ஒரு குறிக்கோளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் நாம் இளைஞர் யுவதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோமானால் அவர்களை நாம் எமது சமூகத்தின் மிக வலுவான ஒரு அலகாக மாற்றியமைக்க முடியும். ஆகவே தான் இளைஞர் கருத்தரங்கங்களை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்தமையின் காரணத்தை இப்பொழுது நீங்கள் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள். 

இவ்வாறான ஒரு எண்ணம் என்னுள் பரிணமித்தது எப்பொழுது என்று கேட்டீர்களானால் எனது விடை நகைச்சுவையாக இருக்கும். 

என்னைப் பதவியில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்பினர்கள் பல சதிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் “நாம் உங்களுடன்” என்று இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஆதரவை வெளிப்படுத்திய போது நான் ஒன்றைக் கூறினேன். அதுநன்றிப் பெருக்கில் என்னை அறியாது வெளிவந்த சொற்கள். “நானும் உங்களுடன் இருப்பேன்” என்று கூறினேன். பதவி பறி போகின்றதோ இல்லையோ “நான் உங்களுடன்” என்ற போது தான் என்னால் இளைய சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்ற கேள்வி உதித்தது. 
இளைஞர்களின் பலத்தை நன்மைக்கும் பாவிக்கலாம். தீயனவற்றிற்கும் பாவிக்கலாம். தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து குறிக்கோள்களைக் கொடுத்து மதிப்பையும் கொடுக்க முன் வந்தால் அவர்கள் சமூகத்தின் ஆர்வலர்களாக மாறிவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலும் அரசியல் கட்சிகள் இரண்டாம் மட்ட அல்லது மூன்றாம் மட்ட இளைஞர்களை யுவதிகளை தலையெடுக்க விடாது அவர்களைத் தட்டித் தட்டி வைப்பதையும் நான் கண்டுள்ளேன்.தலைவர்கள் தகைமை அற்றவர்களாக இருக்கும் போது தம்மிடத்தை மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்களோ என்று அவர்கள் சந்தேகிப்பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகைமையுடையவர்களை மேலெழும்ப விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும். இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு எம்முடன் இணைத்துக் கொள்ள முன் வர வேண்டும். முதலில் இளைஞர் அணிக்குள்ளும் காலம் செல்லச் செல்ல மத்திய குழுவிற்குள்ளும் அவர்களை ஈர்க்க வழி அமைக்க வேண்டும்.

அரசியல் குறிக்கோள்கள் கொள்கை ரீதியாக இருக்கலாம், சமூக ரீதியாகவும் இருக்கலாம். சமய ரீதியாகவும் இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவுவதில்த்தான் எமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும் என்று நாம் சமய ரீதியாக உணர்ந்து கொண்டோமானால் சமூக ரீதியாக உதவிகளைச் செய்ய எமது இளைஞர் யுவதிகள் முன்வருவார்கள். கூட்டாக இணைந்து செயற்கரியவற்றை செய்யக் கூடியவர்கள் இளைஞர் யுவதிகள். சிரமதானம் செய்வது, இரத்ததானம் செய்வது, பணம் சேர்த்து தானங்கள் பல இயற்றுவது போன்ற பலவற்றை இளைஞர் யுவதிகள் செய்யலாம். தாம் வாழும் கிராமங்களை சுத்தமுடன் சுகாதாரமுடன் இருக்க ஆவன செய்யலாம். சமூகச் சீர் திருத்தத்திலும் அவர்கள் ஈடுபடலாம். பொலிசாருக்கு ஒத்தாசையாக பொது மக்கள் குழுக்களில் கடமையாற்றிப் போதைப் பொருள் பாவனை, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம். வன் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளங்கண்டு அவர்களின் வாழ்க்கைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம்.

இவற்றிற்கெல்லாம் சரியான வழிநடத்தல் முறைகளை நாம் புரிந்து கொண்டுதான் அவர்களை ஆற்றுப்படுத்த முன்வர வேண்டும். 

என்னுடைய மனதில் உதித்த சில கருத்துக்களை நான் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தை எவ்வாறு வழி நடத்துவது என்ற விடயத்தில் சிந்தித்துப் பற்றுறுதியுடன் செயற்பட வேண்டும். நாம் வெறும் கடமைக்கு வேலை செய்பவர்களாக இருந்தால் எம்மீது இளைஞர் சமுதாயத்திற்கு சந்தேகமும், ஆத்திரமும், கோபமும் வந்து விடும். எம்முள் அன்பும் கரிசனையும் மேலெழுந்ததால்த்தான் அவர்கள் எம் வழிக்கு வருவார்கள்.

எனவே இளைஞர் யுவதிகளை வழிநடத்த தமிழ் மக்கள் பேரவை முன்வர வேண்டும்; இளைஞர்களுக்கான குறிக்கோள்களை அவர்கள் மனதில் உள்ளடக்க நாம் பாடுபட வேண்டும். கூடுமான வரையில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் நாங்கள் முன்வர வேண்டும்.உன்னத குறிக்கோள்களை இளைஞர் அணிகள் மத்தியில் விதைத்தால் பயிர்கள் செழித்து வளருவன. சமூகம் மறுமலர்ச்சி அடையும். ஆகவே இளைஞர் யுவதிகளை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த நாம் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்!

அப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்!


கிளிநொச்சியில் தனியார் வங்கியான ஹற்றன் நஸனல் வங்கியில்; மே18 முள்ளிவாய்க்கால் தினத்தன்று நினைவேந்தலை செய்ததாக கூறி அவ்வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளமை தமிழ் மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் தமிழரசுக்கட்சி நாளிதழான உதயன் அவ்வங்கியின் சப்பைக்கட்டு முழுப்பக்க கட்டண விளம்பரத்துடன் இன்று வெளிவந்துள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் குறித்த வங்கியை புறக்கணிப்பு செய்து வருவதுடன்; வடக்கு ,கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அந்த வங்கியில் உள்ள தமது கணக்குகளை முடிவரும் நிலையிலேயே  தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமான பத்திரிக்கை இன்றைய இதழில் குறித்த வங்கியின் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செயற்பாடானது ஒட்டு மொத்த தமிழனின் உணர்வுகளை குறித்த வங்கியிடம் விற்பனை செய்துள்ளதாகவே மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் யாழில் எழுக தமிழா நிகழ்வை தமிழர்கள் ஒன்றினைந்து பேரினவாத அரசுக்கு ஓர் அழுத்தத்தை கொடுக்க முற்பட்ட வேளையில் குறித்த பத்திரிக்கையில் தமது முதற் பக்கத்தில் தலைப்பு செய்தியாக சனி பகவானுக்கு எள்ளெண்ணை எரிக்கும் நாள் என தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டதை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

குறித்த விளம்பரத்தில் கொடுக்கல் வாங்கலிற்கு அப்பாற்பட்ட உறவு தமிழ் மக்களுடன் இருப்பதாக அது விளம்பரப்படுத்தியுள்ளது.


இதனிடையே இன்னொரு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரனோ குறித்த வங்கியை வடகிழக்கில் இழுத்துமூடவேண்டிவருமென நாடாளுமன்றிலேயே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை தமிழகத்தில் திணிப்பு! வேல்முருகன் கைது!

அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை தமிழகத்தில் திணிப்பு! வேல்முருகன் கைது!

அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை தமிழகத்தில் திணிப்பு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், படுகாயமுற்றோர் விவரம் மறைப்பு!

தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திக் கைது!

எந்தக் காரணமும் சொல்லாமல் நேற்று பிற்பகல் 3 மணி முதல் அங்கேயே சிறை வைத்து இன்று அதிகாலை 3 மணிக்கே "கைது" என்று சொல்லி திருக்கோவிலூர் கொண்டுவந்து நீதிமன்றக் காவலில் வைப்பு!

பழனிசாமி அரசின் திட்டமிட்டுப் பழிவாங்கும் இந்த அடாவடியை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுவிக்க வலியுறுத்துகிறது!

நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் இதுவரை 14 இறந்ததாகத் தெரியவந்தது.
65க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரியவந்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

அவரை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் சிறை வைத்தது காவல்துறை.

எந்தக் காரணமும் சொல்லாமல் நேற்று 3 மணிக்கு வேண்டுமென்றே இந்த அடாவடியில் இறங்கிய காவல்துறை இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.
அப்படிக் கைது செய்த அவரை அங்கிருந்து உளுந்தூர்பேட்டைக்குக் கொண்டுவந்து பின் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பின்னர் திருக்கோவிலூருக்குக் கொண்டுசென்று அலைக்கழித்தது காவல்துறை. 

திருக்கோவிலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்கப்பட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்.முதலில் கடலூர் சிறைச் சாலை பின்னர் வேலூர் சிறைச் சாலை என்றனர் அதன் பின்னர் சென்னை புழல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்வதாக காவல் துறையினர் அறிவித்தனர். இவ்வாறு நேற்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது முதல் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்கு காரணமாக காவல்துறை உயரதிகாரி, மாவட்ட ஆட்சி தலைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பதவியை பறிக்க வேண்டும்.

இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

மக்களை பாதுகாப்பதற்கு பதிலா கொன்று குவித்த காவல்துறை குவிப்பை தூத்துக்குடியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட 
வேண்டும்.

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் இன்னும் காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் இளைஞர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும் 

என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அறுந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வந்த அவரை தமிழக அரசும் காவல்துறையும் அலைக்கழித்து வருகின்றனர்.

நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக, ஒன்றரை மாதத்திற்கு முன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டம் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை எதிர்த்த பொதுமக்களின் போராட்டமாகும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற அந்தப் போராட்ட்த்தில் சுங்கச்சாவடி தாக்கப்பட்டதாக பொய்வழக்கு புனைந்துள்ளனர்.

அந்தப் பொய்வழக்கை மேலும் பொய்களைச் சேர்த்துப் புதுப்பித்து அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரைத் தொடர்புபடுத்தி இப்போது நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தடையில்லை. 

ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு மட்டும் அனுமதி மறுப்பதற்குக் காரணமென்ன?

இது அநியாயம், அக்கிரமம் மட்டுமல்ல; பழிவாங்கும் செயல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 14 பேர் மட்டுமே அல்ல; படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கும் மேலும் 14 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்தே தகவல் வெளியாகிறது.

அப்படிப் பார்க்கும்போது, பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அச்சமேற்படுகிறது.

பலியானோர் பற்றிய விவரம் சரியாக அறிவிக்கப்படாத ஒரு குழப்ப நிலை நீடிப்பதையே இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும், தூத்துக்குடியில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்வதும் தொடர்கிறது.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அத்தனை பேரும் கண்டித்தும் தூத்துக்குடியிலிருந்து காவல்படையை திரும்பப்பெறாமல் அங்கேயே முகமிடப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்கிற உண்மை நிலையை தமிழக அரசும்கூட தெளிவுபடுத்தத் தயாரில்லை. காரணம், அவர்களையும் மீறி காவல்துறை மோடி அரசின் கட்டளைக்கிணங்கவே செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே ஏற்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை திணிக்கப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுவதாயிருக்கிறது.

இறந்தவர்களைப் பற்றி துக்கம் விசாரிக்கவும் மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்க்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருக்குத் தடை என்பது திட்டமிட்டு அவரது செயல்பாட்டைத் தடுக்கப்பார்க்கும் சர்வாதிகார, பாசிசப் போக்கே தவிர வேறல்ல.

இப்படி அராஜக அடக்குமுறைகள் மூலம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்பாட்டைத் தடுத்துவிட முடியாது.

தூத்துக்குடிக்குச் செல்லவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துவிட்டிருக்கலாம். அதேபோல் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்குமான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பணியைத் தடை செய்துவிட முடியாது.

வழக்குகள், கைதுகள், சிறைகள் என்பவை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் புதிதில்லை; எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆற்றிடத் தவறாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைக் கைது செய்து, திட்டமிட்டுப் பழிவாங்கும் இந்த அடாவடியை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

பொய்வழக்கு புனைந்து வேண்டுமென்றே தலைவர் வேல்முருகனைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கும் பழனிசாமி அரசு தன் சட்டவிரோதப் போக்கைக் கைவிட்டு  உடனடியாக அவரை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
வடமாகாணசபைக் கொடியை எப்படிப் பறக்கவிட வேண்டும் என எங்களுக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை - முதலமைச்சர்

வடமாகாணசபைக் கொடியை எப்படிப் பறக்கவிட வேண்டும் என எங்களுக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை - முதலமைச்சர்

"வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  தெரிவித்தார்.

இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நினைவு நாளை அனுஸ்டிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம் முறை அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலில் பல்வேறுவிதமான குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக் குறைபாடுகள் தொடர்பாக நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நினைவேந்தலில் அக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பரந்துபட்ட மக்கள் குழு ஒன்றினால் அவ் நினைவேந்தலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் வடக்கு மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என்பது தொடர்பாக எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை . இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுவதானது வடக்கு மாகாணத்திடம் இருக்கும் அதிகாரங்களை தாம் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியாகும்.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மகாணத்தின் கொடியை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எங்களது விவகாரம். நாங்களே அது தொடர்பாக தீர்மானிக்கின்றோம். அதற்கு பொறுப்பானவர்களும் நாங்களே. அது தொடர்பாக மற்ற எவரேனும் எமக்கு கூறி வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே மத்திய அரசாங்கம் வடக்கு மாணகாத்திற்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்துள்ள நிலையில் தற்போது இக் கொடி விவகாரத்தில் தலையிடுவதானது எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அசராங்கம் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையோ தெரியவில்லை. எனவே இவ் விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை எமக்கே உண்டு." என்றார்.
மட்டகளப்பு, ஏறாவூரில் சுகாதரா ஊழியர்கள் போராட்டம்

மட்டகளப்பு, ஏறாவூரில் சுகாதரா ஊழியர்கள் போராட்டம்

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதாரத் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் நகரசபையின் சுகாதாரத் ஊழியர்கள் உட்பட சாரதிகள், அனைவரும் இன்று (26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்புப் போராட்டம், ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையைக் கண்டித்து, நகர சபை முன்றலில் நடத்தப்பட்டது.

இதனால் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை,   பத்து மாத காலங்களாக இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு,  தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து, இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது நகர சபையின் முதல்வர் ஐ. அப்துல் வாசித் மற்றும் உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் ஆகியோர் அவ்விடத்துக்கு வருகைதந்து, ஊழியர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். அத்துடன், மகஜர் ஒன்றையும் கையேற்றனர்.

செயலாளரது நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதமளித்ததுடன், பிரதேசத்தின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு  முதல்வர் கேட்டுக்கொண்டபோதிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடவில்லை.

இவ்விடயம் குறித்து, ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலுடன் தொடர்புகொண்டுகேட்டபோது, இக்குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்தார்.

அத்துடன், 10 மாத இடர்கடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின் தொடர் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், நகர சபையில் நிலவும் நிதிப்பற்றாக்குறையால் கொடுப்பனவுகளையும் சீருடைகளையும் உரிய காலத்தில் வழங்க முடியாதுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி படுகொலை! திருகோணமலையில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்

தூத்துக்குடி படுகொலை! திருகோணமலையில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்

தமிழ்நாடு தூத்துக்குடியில் தமிழகக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இப்படுகொலைக்குக் கண்டித்தும் கண்டனப் போராட்டம்  திருகோணமலையில் நடைபெற்றது.

இன்று (26) சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்சார நிலைய வீதி பொதுச் சந்தைக்கு முன்னால் குறித்த அஞ்சலி நிழக்வும் கண்டனப் பேராட்டமும் நடைபெற்றது. குறித்த கண்டனப் பேரணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், காலை 9 மணி தொடக்கம் 9.30 மணி வரை நடைபெற்றது. இதில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.


தூத்துக்குடியில் படுகொலை! மட்டக்களப்பில் மக்களுக்கு அஞ்சலி! அரசுக்கு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் படுகொலை! மட்டக்களப்பில் மக்களுக்கு அஞ்சலி! அரசுக்கு எதிர்ப்பு!

தமிழ்நாடு, தூத்துக்குடியில் தமிழகக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 13 தமிழ்மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் ''அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே'' , ''இந்திய அரசே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்'' போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன், படுகொலைக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

அதேநேரம் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வலிவடக்கில் காணி விடுவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

வலிவடக்கில் காணி விடுவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காணிகள் இப்பிலிப்பிலி மரங்களால் மூடப்பட்டிருந்தன. தமது வீடுகளையோ ஒழுங்கைகளையோ இனங்காண முடியவில்லை. இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர்.

ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பழை பிரதேச செயலர் தெரிவித்தார்.

தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலி.வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் பன்றிக் காய்ச்சல்! இனம் காணப்பட்டனர் 12 பேர்!

யாழில் பன்றிக் காய்ச்சல்! இனம் காணப்பட்டனர் 12 பேர்!

பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) எனப்படும் தொற்று நோய்க்கான அறிகுறிகளோடு கடந்த சில நாட்களாக 12 பேர் யாழ்ப்பாண மருத்துவமனைகளில் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் அதிகாரி மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவிக்கையில்:

கடந்த சில நாட்களாக ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறிகு­றி­கள் கொண்ட 12 பேர் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் குருதி மாதிரிகள் மேலதி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்­போ­தைய கால­நிலை இந்த நோய் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பாக இருக்கின்­றது. 2008 மற்­றும்  2009ஆம் ஆண்­டு­க­ளி­லும் இந்த நோய் தாக்­கம் இனங்­கா­ண­பட்­டது. எனி­னும் கட்­டுப்­பாட்­டுக்­குள்  கொண்­டு ­வரப்­பட்­டது என்று மருத்­து­வர் மேலும் தெரி­வித்­தார்.
யாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை.

யாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் சாவகச்சோி கச்சாய்ப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் கொடிகாமம் காவல்நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிந்துள்ளனர்.

கடந்த 21 ஆம் நாள் வீட்டிலிருந்து கொழும்பு செல்வதாகவே உதயகுமார் கூறிவிட்டுச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோண்டாவிலில் பேருந்துடன் உந்துருளியில் மோதியதில் ஒருவர் படுகாயம்!

கோண்டாவிலில் பேருந்துடன் உந்துருளியில் மோதியதில் ஒருவர் படுகாயம்!

தனியார் பேருந்துடன் உந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்று காலை நடந்ததுள்ளது.

உந்துருளியில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின் பகுதியில் சென்று மோதியது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி!

காசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசு தயாராகிவருகின்றது.இந்நிகழ்வுக்காக தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முற்றுமுழுதாக அரசியல்வாதிகள் முன்னிறுத்தப்படாது மக்களால் மக்களிற்காக என்ற கோசத்துடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இறுதி யுத்தத்தில் அரசுடன் இணைந்து அதனை வெற்றிகொள்ள வைக்க பாடுபட்டதாக கூறிக்கொண்ட புளொட் சித்தார்த்தனுடன் சி.தவராசாவும் வருகை தந்திருந்தார்.சுடரேற்றும் பகுதியில் நின்று படம் காட்ட முற்பட்ட அவர்கள் அங்கிருந்து மாணவர்களால் மக்கள் பகுதிக்கு விரட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடுமையான சீற்றத்துடன் இருக்கின்ற புளொட் சித்தார்த்தனுடன் சி.தவராசாவும் தற்போது தமது முகவர்களின் ஊடாக எதிர் பிரச்சாரங்களை மாணவர்களிற்கு எதிராக எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் வடமாகாணசபை அமர்வு எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முதலமைச்சரிற்கு தலையிடி தர தமிழரசு வேண்டுகோளில் அதன் பிரதிநிதியாக தவராசா களமிறக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 18 ஆம் திகதி அன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அந்த நிதி பெறப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த நினைவை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்ற அடிப்படையில், தன்னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த அமர்வில் இது குறித்து விவாதத்தை தோற்றுவிக்கவும் முதலமைச்சரிற்கு தலையிடியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
 மன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்!

மன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்!


அனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள கருத்து அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

நினைவேந்தல் என்பது தமிழ் மக்களிற்குள்ள உரிமை.அதனையே அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.அதற்காக மன்னிப்புக்கோருவதென்றால் அவர்கள் ஏதோ தவறினை இழைத்ததென அடையாளப்படுத்தப்பட்டுவிடுமெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஸனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்பில் அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

முகாமைத்துவத்தின் இந்த தீர்மானத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் சிலர் தமது சேமிப்பு கணக்கை மூடியும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளிலே அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களிலே அஞ்சலியைச் செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர். அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்று தான் ஹற்றன் நஸனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்னவும் முன்னாள் இராணுவத் தளபதி; சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். அவ்வாறாயின் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதையும் இவர்கள் அவமரியாதை செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.


தமிழர்களை பணிப்பாளர் சபையில் கொண்டிருக்க கூடிய ஹற்றன் நஸனல் வங்கி, இவ்வாறு நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. வங்கியின் இந்தச் செயற்பாட்டை அறிந்தவுடன் நூற்றுக் கணக்கானோர் தமது கணக்குகளை மூட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நல்லதொரு அறிகுறி  இல்லை.


இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு - கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஸனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம்.


மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அதனால் வங்கிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே உத்தியோகத்தர்களின் இடைநிறுத்த உத்தரவை வங்கியின் முகாமைத்துவம் மீளப் பெறவேண்டும். இல்லையேல் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகுமென சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்களவர்கள் தரவிடமாட்டார்கள்:மாவை குத்துக்கரணம்!

சிங்களவர்கள் தரவிடமாட்டார்கள்:மாவை குத்துக்கரணம்!

பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில், புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது. எமது கட்சிசார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நா டாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர். 

நேற்று கூட்டம் நடைபெற்றது. ஆயினும் காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்பவேண்டியிருந்ததால் நேற்றய கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை. ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும்போது பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படும் என நாங்கள் நம்புகிறோம். 

ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது. ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது  என்றார்.
 ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய ''தூத்துக்குடியில் ஒரு துளி''

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய ''தூத்துக்குடியில் ஒரு துளி''

பகல்முழுவதும் நடந்த                                                     
பொலிசாரின் அட்டகாசத்தாலும்,                                                           
அவர்களின், அடங்காத                                                    
தொடர்துப்பாக்கி வேட்டுக்களாலும்                                                   
அதிர்ந்துபோய் மிரண்டவர்களாய்..                                                     
அங்குமிங்கும் ஓடியொளித்து,                                                       
உயிர்களைக் காத்துக்கொண்ட                                                
வெகுளிமிகு மக்கள்கூட்டம்                                                 
தங்கள்தங்கள் வீடுகளுக்குள்                                              முடங்கிப்போய்க்கிடந்த                                                             
அன்றையப் பயங்கர இரவில்,                                          
மாயாண்டியின் வீட்டுக்கதவு                                             
தட்டப்படுகின்றது. பொறுமையின்றி                                             
அது, உடைக்கப்படுகின்றது.                                    
உக்கிரமான கோபத்தோடு                                                          
உள்ளேநுளைந்த ஓர்தொகை                                      
பொலிசாரில் ஒருவன்..                                    
இவன்தான் மாயாண்டி என்று                                                   
சுட்டிக்காட்டவும்.. கட்டுக்கடங்காத                                          
கோரமிகுவலுவோடு பற்றிய                                                
பலகரங்கள் ஒன்றுசேர்ந்;து                                                  
அந்தக் கிழவனைப்பிடித்து இழுத்து                                                   
அடித்து நொருக்குகின்றன.
அவனின் மனைவி கத்தினார்.                                               
மகன் முன்பாய்ந்;துவந்து தடுத்தான்.                                      
பெண்பிள்ளைகளோ பேதலித்து                                        
மிரண்டவர்களாய் ஒழிந்துநின்று                                                 
உரத்துச் சப்தமிட்டார்கள்.
மெலிந்த உடல்வாகுகொண்ட                                                     
மூதாளர் மாயாண்டி                                                 
பேயுருக்கொண்ட பொலிசாரினால்                                          
பந்தாடப்படுகின்றார். அவரது                                                  
விழிகள் இரங்கும் நிலையில்                                       
துவளவே, தலைசரிந்து தொங்க..                                      
உயிற்துடிப்பு ஓய்ந்துவிடுகின்றது.
திருவாளர். மாயாண்டி                                      
தொளிற்சங்கவாதி, எழுத்தாளர்.                                                    
பேச்சாளர்.. பேருறுதிகொண்ட                                               
மனிதநேயதின் மறுவடிவமவர்.
பனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!''

பனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!''

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமெனத் தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

இவை அனைத்துமே எதிர்பார்த்தவைதான்!

முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி தமிழ் மக்கள் நினைவேந்தல் அனுஸ்டித்த வேளையில், அடுத்து என்னவெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்தோமோ அவையெல்லாம் அச்சொட்டாக அப்படியே நடைபெறுகின்றன.

எதிர்பார்க்கப்பட்டவைகளில் முக்கியமானவையாக இரண்டினைக் குறிப்பிடலாம்.

வடமாகாணசபைத் தலைவரை குறிவைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டிவிடும் செயற்பாடுகள் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவது நன்கு தெரிகிறது.

சிங்கள பேரினவாத தரப்பிலிருந்து ஆவேசக் கண்டனங்களும் தமிழ் இனத்துவேச பரப்புரைகளும் வருமென்பது எதிர்பார்க்கப்பட்டதே.

ராஜபக்ச சகோதரர்களிடமிருந்தே காரசாரமான அறிக்கைகள் வருமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல அப்படியே நடைபெறுகின்றது.

அதேசமயம் வேறு சில சில்லறைச் சம்பவங்களும் கால தேவையை ஒட்டி இடம்பெறுகின்றன.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாய் மூடி மௌனித்திருந்த விக்னேஸ்வரன், இன்று எதற்காக இதுபற்றி அதிகம் பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்மையில் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச.

அடுத்து வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னுரையா என்ற பாணியில் இவரது கேள்வி அமைந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை வடமாகாண சபையே பொறுப்பேற்று நடத்தியது என்பதையும், முதலமைச்சரே சுடரேற்றி சிறப்புரை நிகழ்த்தினார் என்பதையும் அமைச்சர் விஜேதாச அறியவில்லைப் போலும்.

வடக்கில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றவேளையில், அங்கு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் அழைப்பில் அமைச்சர் விஜேதாச யாழ்ப்பாணம் சென்றிருந்தமையால், சுமந்திரனை மகிழ்விப்பதற்காக முதலமைச்சர் பற்றி ஏதாவது தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர் விஜேதாசவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தாயகத் தமிழர்கள் பற்றி இன்று அடிக்கடி அதிகம் பேசுபவராக அமைச்சர் மனோ கணேசன் காணப்படுகிறார்.

விடுதலைப் புலிகளின் தலைமையையும் உரசிப் பார்க்க இவர் தவறுவதில்லை.

2002 யுத்த நிறுத்த காலத்தில் வன்னிக்கு விரைந்து தமிழரின் தேசியத் தலைவருடன் கைலாகு கொடுத்துப் படமெடுத்து, அதனைச் சகல ஊடகங்களிலும் பதிவிட்டு புளகாங்கிதம் கொண்ட இவர், இப்போது நரம்பில்லாத நாக்கை நான்கு பக்கமும் சுழற்றி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நக்கல் அடிக்கிறார்.

அன்று ஓடி ஒளிந்தவர்கள் இன்று தீபமேற்றுகிறார்கள் என்று மனோ கணேசன் கூறியது, யுத்தத்தின்போது தமது உறவுகளை இழந்தவர்களையும் தொலைத்தவர்களையும் மனசு நோகடிக்கச் செய்யும் வார்த்தைப் பிரயோகம் என்பதை சிலவேளை அவரால் மாலை மயக்க வேளைகளில் உணர முடியாதிருக்கலாம்.

யுத்தத்தின்போது படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனரட்ன மீது, அவரது வம்சத்தினர் கற்களை வீச ஆரம்பித்துள்ளனர்.

யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன அமைச்சரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்ததை ராஜித சேனரட்ன பார்த்தாரா” என்பதுதான் கமல் குணரட்னவின் கேள்வி.

அமைச்சர் ராஜித சேனரட்ன நேரில் பார்த்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், இராணுவம் மக்களைக் கொலை செய்தது என்ற தனது கூற்றை இன்னமும் அவர் மீளப் பெறவில்லையென்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

போர்க்களத்தை கொலைக்களமாக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலியெடுத்த இராணுவ அதிகாரிகளில் முக்கியமானவரான கமல் குணரட்ன, தமது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்த்து அமைச்சரின் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.

சிங்களத் தரப்பில் முக்கியமான இருவரின் கருத்துகளை இங்கு பார்ப்போம். ஒருவர் முன்னாள் ஜனாதிபதி. அடுத்தவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரத்துடிப்பவர்.

1977ம் ஆண்டுக் காலகட்டத்துக்கு நாட்டின் நிலைமை தற்போது சென்றுள்ளது என்று பயமுறுத்தும் கோதபாய ராஜபக்ச, புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகளை அனுமதிப்பது தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் உருவாக்கும் என்று சுட்டியுள்ளார்.

நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைக்கு இடம்கொடுத்து, பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்க நினைவுத்தூபிகளை எழுப்பவும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று கோதபாய சிங்கள மக்களுக்கு இனவாதம் ஓதுகின்றார்.

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமென்றும் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தக் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

மகிந்த, கோதபாய உட்பட சில சிங்கள அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் மட்டுமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கையிலெடுத்து இனவாதத்தை உசுப்பிவிட முன்வந்துள்ளனரே தவிர, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அவ்வகையான உணர்வலைகள் எதுவும் இதுவரை எழவில்லை.

போரின்போது விடுதலைப் புலிகளுக்கு பயந்து பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும் அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்களாகி விட்டனர் என்ற மகிந்த ராஜபக்சவின் கூற்று இங்கே கவனம் பெறுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கோ அல்லது அதில் பங்கேற்றவர்களுக்கு இராணுவம் குளிர்பானம் வழங்கவோ அரசாங்கம் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று தெற்கிலுள்ள வானொலி நிலையமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோதபாய தெரிவித்ததன் அர்த்தம் என்ன?

உலகின் கண்களுக்கு தங்களை மனிதாபிமானிகள் என்று காட்ட இராணுவம் குளிர்பானம் வழங்கியதை கோதபாயவின் கண்கள் இனவெறியில் நோக்குவதையே இது காட்டுகிறது.

மறுபுறத்தில் வடமாகாணசபை முதலமைச்சருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்த தமிழர் தரப்பில் சிலர் முயன்று வருகின்றனர்.

ஒருதரப்பினர் பல்கலைக்கழக மாணவர்மீது குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்.

இன்னொரு தரப்பினர் வடமாகாண முதலமைச்சரை இதே குற்றச்சாட்டில் இழுத்து வீழ்த்தப் பார்க்கின்றனர்.

நினைவேந்தல் நடைபெற்ற பகுதியில் பல்கலைக்கழக மாணவர் முதல்நாள் இரவு மது அருந்திக் கும்மாளமிட்டதாக திட்டமிட்ட பொய்ப்பரப்புரை நடைபெறுகிறது.

இதற்காக அங்குள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் சிதறிக் கிடந்த மதுப்போத்தல்களின் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இவைகளை விளக்கி பல்கலைக்கழக மாணவர் வெளியிட்ட அறிக்கையை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றனர்.

உணர்வுபூர்வமாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இடம்பெற்ற நினைவேந்தல், அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் சிலருக்கு வயிற்றுளைவை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரையும் பல்கலைக்கழக மாணவர்களையும் நல்லுறவில் தொடரவிடாது பார்த்துக் கொள்வதே இவர்களின் இலக்காகவுள்ளது.

இந்தத் தீயசக்திகளையிட்டு ஒவ்வொருவரும் விழிப்போடிருக்க வேண்டும்.

தெற்கில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும், முள்ளிவாய்க்காலில் ஒளிர ஆரம்பித்திருக்கும் நினைவேந்தல் சுடரை அணையவிடாது பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரதும் தார்மிகக் கடமை.

Friday, May 25, 2018

ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை!

ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை!


ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சி இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள் அமைதியான, வன்முறை அற்ற வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டதாகவோ, சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ நாட்டில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் கிடையாது. இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது. போருக்கு பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த ஜே. வி. பியினர் ஒரு காலத்தில் புரட்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் ஆயினும் அவர்கள் முழுமையான அளவில் இயல்பான, அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சி அது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால பகுதிக்குள் பிரமாண்ட வளர்ச்சி கண்டு மக்கள் மயப்பட்ட அரசியல் அமைப்பாக பரிணமித்து வருகின்ற நிலையில் எமது கட்சியை முடக்கின்ற சதி திட்டத்தின் ஒரு அம்சமாகவே இதை எமது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள். மேலும் இது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற செயற்பாடாகவே எம்மால் மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்! - சிறிதரன் எம்.பி

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்! - சிறிதரன் எம்.பி


முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கி பணிநீக்கம் செய்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் இந்த தனியார் வங்கியை வடக்கு, கிழக்கில் பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ' யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காக கடந்த 18 ஆம் திகதி முள்ளியாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள். இந் நிகழ்வில் கிளிநொச்சி தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும், ஊழியர்களும் உயிரிழந்த தமது உறவினர்களுக்காக தீப்பந்தங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தக் காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வங்கி சிங்கள வங்கியா? தமிழர்களை ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை. உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுகளை மூடிவிடுங்கள் என்றார்.
 இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்! - ட்ரம்ப் முன்மொழிந்தார்.

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்! - ட்ரம்ப் முன்மொழிந்தார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்படவுள்ளார் அவரது பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வௌ்ளை மாளிகையில் வைத்து முன்மொழிந்துள்ளார். தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளத்துக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி வருகின்றார். அவரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பினால் முன்மொழியப்பட்ட பரிந்துரை வௌ்ளை மாளிகையின் ஊடாக அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்த பின்னர், தற்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப்பிற்கு பதிலாக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்பட உள்ளார்
செய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி!

செய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி!


இலங்கையின் தேசிய செய்திப்பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் இன்றைய தினமான வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்” மற்றும் “நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்” எனும் தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தி யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு பொய்யான செய்தியாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகையதொரு பொய்யான செய்தியை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தவர் யார் என்பது பற்றிய துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திகள் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டிவெளியிடப்பட்டதாக தெரியவருகின்றது.