Saturday, June 16, 2018

இலங்கை அணி விளையாட மறுப்பு...! 5 ஓட்டங்கள் போனஸ்

இலங்கை அணி விளையாட மறுப்பு...! 5 ஓட்டங்கள் போனஸ்


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளான இன்று (சனிக்கிழமை) இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஆட்டம் சிறுது நேரம் தாமதமானது.

மேற்கிந்திய அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு நேற்று பயன்படுத்தப்பட்ட பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் முடிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அணி 3 ஆவது நாள் ஆட்டத்தை ஆரம்பிக்க மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆட்ட நடுவரிற்கும் இலங்கை அணி நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

இந்நிலையில் பந்து வீசுவதற்கு தாமதமாகியதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போனஸாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பல வாய்ப்புக்களை தவறவிட்ட மெஸ்ஸி: பறிபோன ஆஜன்டீனாவின் வெற்றி!

அடுத்தடுத்து பல வாய்ப்புக்களை தவறவிட்ட மெஸ்ஸி: பறிபோன ஆஜன்டீனாவின் வெற்றி!


2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் வாய்ப்புக்களை அடுத்தடுத்து அர்ஜென்டினா தவறவிட்டமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, பல கோல் வாய்ப்புகளை தவற விட்டார். இந்நிலையில் போட்டி ஆரம்பமாகி 17 ஆவது 21 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் கோல் வாய்ப்பு ஐஸ்லாந்து கோல் கீப்பரால் துல்லியமாக முறியடிக்கப்பட்டது.

ஆனால் 19 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேர்கோ ஆகிரோ முதல் கோலை அடித்தார். பின்னர் 23 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை ஐஸ்லாந்து வீரர் ஆல்ஃப்ரெட் ஃபின்போகன்ஸன் சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதன் பின்னர் 64 ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸியின் கோல் முயற்சி தகர்க்கப்பட்டது. இறுதியாக 95 ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பையும் அவர் தவறிவிட்டார்.

இதன் காரணமாக 2 ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகள் இவ்வித கோலும் போடவில்லை. இதன் காரணமாக இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.




பப்புவா நியூ கினியாவில் பதற்றம்! 9 மாதங்களுக்கு அவசரகால சட்டம்

பப்புவா நியூ கினியாவில் பதற்றம்! 9 மாதங்களுக்கு அவசரகால சட்டம்


பப்புவா நியூ கினியாவில் தொடரும் கலவரம் காரணமாக இன்று (சனிக்கிழமை) முதல் 9 மாதங்களுக்கு அவசரகால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சதர்ன் ஹைலேண்ட் மாகாண தேர்தலின் பின்னர் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடந்த நாடுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மென்டியில் ஒரு விமானத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததுடன் மேலும் சில கட்டிடங்களுக்கும் தீயிட்டுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த கலவரமானது எல்லை மீறிச் சென்றதால் மாகாணத்தில் அவசரகால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிகளை படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பான ஆட்டம்: 2-1 என்று ஆஸியை வீழ்த்திய பிரான்ஸ்

பரபரப்பான ஆட்டம்: 2-1 என்று ஆஸியை வீழ்த்திய பிரான்ஸ்


21 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்ரேலிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் முதல் பாதியில் துல்லியமாகத் தடுக்கப்பட்டன. 

இதில் 58 ஆவது நிமிடத்தில் க்ரீஸ்மான் அடித்த கோல் மூலம் பிரான்ஸ் அணி தனது முதலாவது கோலை பதிவு செய்தது.

பின்னர் 61 ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜெடனிக், அதை கோலாக மாற்றினார். 

இதனால் அவுஸ்ரேலிய 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.

ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் ஃபோபா அற்புதமாக செயல்பட்டு 81 ஆவது நிமிடத்தில் துல்லியமாக கோல் அடித்தார். 

இதனால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து போட்டி முடியும் வரை இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தில் பால்மா விலை!

மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தில் பால்மா விலை!


அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, 1 கிலோ கிராம் பால்மா விலையை 70 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் டீ.ஜீவானந்த குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் உலக சந்தையில் 3 ஆயிரத்து 250 டொலராக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் பால்மாவின் விலை தற்போது 3 ஆயிரத்து 450 டொலராக அதிகரித்துள்ளது.

இதனால் பால்மாவை இறக்குமதி செய்வதிலும், தமது தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பல சிக்கல் நிலைகள் தோன்றியுள்ளதால் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் இந்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் முற்பட்டால், கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் மக்களால் முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
விடுதலை புலிகளின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் இத்தாலியில் உயிருடன் இருப்பதாக தகவல்!

விடுதலை புலிகளின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் இத்தாலியில் உயிருடன் இருப்பதாக தகவல்!


விடுதலை புலிகளின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் இத்தாலியில் உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜிவ் கொலையில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் மேலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார். பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் தான் நேற்றைய தினம் முழுவதும் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. 

சுப்ரமிணியன் சுவாமி கூறுவது யாரை? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்க அதற்கு வலு சேர்க்கும் விதமாக சில முக்கிய தகவல்கள் கசிந்து வருகின்றன. 

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உளவுத்துறையின் தலைவருமான பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல்கள் மீண்டும் வெளிவர தொடங்கி உள்ளன

பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்... இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் பொட்டு அம்மானும் ஒருவர் என்றது இலங்கை ராணுவம். இறுதிப்போரின் போது அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அறிவித்த இலங்கை ராணுவம் அதற்கு சாட்சியாக அவர்களின் உடலையும் காட்டியது.

ஏன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு சாட்சியாக கூட உடல் ஒன்றின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது இலங்கை ராணுவம்... ஆனால் இன்று வரை இலங்கை அரசால் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்பதற்கான எந்த வித ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை... அதற்காக இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட "பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் விடுதலை புலிகளின் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது" என எச்சரிக்கை விடுத்து, தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்தது இண்டர்போல். ஆனால் அப்போதும் பொட்டு அம்மான் இறந்து விட்டதாகவே சாதித்தது இலங்கை அரசு...

இந்த நிலையில் இத்தாலியில் உயிரோடு இருக்கிறார் பொட்டு அம்மான் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. ஏற்கனவே பிரபாகரன் கொல்லப்படவில்லை என உறுதியாக நம்பி இருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு பொட்டு அம்மானும் கொல்லப்படவில்லை என செய்தி கசிய தொடங்கி இருப்பது, ஆதரவான விசயமாகவே பார்க்கப்படுகிறது. 

சர்வதேச போலீசார் சொல்வது உண்மை எனில், சுப்ரமணியன் சுவாமியின் ட்விட் பொட்டு அம்மானை பற்றியது எனில், இலங்கையின் ஈழ விடுதலை போர் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை என்பதே நிதர்சனம்.
பிக்பாஸ் 2 - உறுதியான 3 புதிய போட்டியாளர்கள்.....!

பிக்பாஸ் 2 - உறுதியான 3 புதிய போட்டியாளர்கள்.....!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது அடுத்த சீசனும் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த 2வது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. நடிகர் பவர் ஸ்டார், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி, எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது புதிய இரண்டு பெயர்கள் பற்றிய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தகவல் வந்துள்ளது.

இவர்களுடன் நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனும் இதில் கலந்துக்கொள்வார் என அவரே கூறியுள்ளார். மேலும், பவர்ஸ்டார் உள்ளே வருவதால் கண்டிப்பாக அடிதடி, கலாட்டா இருக்கும் என கூறிவருகின்றனர்.
என்னயா டா படுக்கைக்கு கூப்பிடுற- இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை

என்னயா டா படுக்கைக்கு கூப்பிடுற- இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை


சஞ்சனா ஆன் அப்படினு ஒரு நடிகை இயக்குனர் ஒருத்தர் கிட்ட பட வாய்ப்பு கேட்டிருக்கு. அந்த ஆளு பட வாய்ப்புக்கு பதிலா வேறொரு விஷயத்த நாசுக்கா கேட்டிருக்கிறான்.

அவன் சொன்னத முதல்ல புரிஞ்சிக்காத நடிகை பின் நண்பர்களால அத பத்தி தெரிஞ்சிக்கிட்டாங்க. ஒடனே கோபம் வந்து அந்த இயக்குனர் இடத்துக்கு போய் ஓங்கி ஒரு அடி அடிச்சிருக்காங்க. பத்தாததுக்கு அசிங்க அசிங்கமா கேட்டிருக்காங்க.

த்ரிஷா மீது வழக்கு? என்ன சொல்கிறது சென்னை உயர் நீதி மன்றம் ?

த்ரிஷா மீது வழக்கு? என்ன சொல்கிறது சென்னை உயர் நீதி மன்றம் ?


நடிகை திரிஷா மீது வருமானத்தை மறைத்ததாக கூறி ரூபாய் 1 கோடி மற்றும் 16 லட்சங்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பில் இப்போது இந்த அபராதம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2011 நிதியாண்டில் த்ரிஷா தனது வருமானத்தில் 3 கோடி 51 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வருமான வரித்துறை ஆணையர் 1 கோடி 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து வருமானவரிதுறையில் மேல்முறையீடு செய்தார் த்ரிஷா.

அதன்படி த்ரிஷா 2010-2011 ஆண்டிற்கான அட்வான்ஸ் தொகையை 2012-2013ல் திருத்தப்பட்ட வருமானவரி கணக்கில் கட்டியிருப்பதாகவும் அதற்கான கணக்குகள் கொடுத்திருப்பதாக திரிஷா கூறியிருந்தார். இதனை ஏற்று வருமான வரித்துறை தீர்ப்பாயம் அவர் மீதான அபராத தொகையை ரத்து செய்தது.

இதனையடுத்து வருமானவரி துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தரி ஆகியோர் இந்த வழக்கில் அபராத தொகை ரத்து செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தனர்.
வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?


போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர்  கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 

இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ ஸ்பெயின் அரசுக்கு முறையான வருமான வரி செலுத்தாததால் வரிஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதையறிந்த ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு செய்தார். 

அதன்படி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டு 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ($21.8-million US) ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் சம்மதித்ததாக கூறப்படுகிறது
சுதந்திரக் கட்சியின் உடனடி தீர்மானம்....! வலியுறுத்தும் மஹிந்த

சுதந்திரக் கட்சியின் உடனடி தீர்மானம்....! வலியுறுத்தும் மஹிந்த


அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தின் பின்னரே இரு தரப்பினருக்கிடையிலும் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இப்தார் நிகழ்ச்சில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.
 சம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை!

சம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் முல்லைத்தீவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமாக உள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.


மத்திய குழுக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் தேசிய அரசாங்கம் உட்பட கொழும்பு அரசியலில் நிலவும் குழப்பநிலைமைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இனப்பிரச்சினை விவகாரம், புதிய அரசியலமைப்பு என்பன குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி

நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி

சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.
இதன்போது, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் இவர் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக துமிந்த கெப்பிட்டிவலன்ன, இருந்த போது, அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, 24 தமிழ் இளைஞர்களை கைது செய்திருந்தார். அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களில் மூவர் தொடர்பாகவே, யாழ். மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் பிரதான எதிரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன குறிப்பிடப்பட்டுள்ளார். அவரது சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம், வழக்காடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன சிறிலங்கா இராணுவத்தின் காலாட் படை பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன், காலாட்படை பணிப்பாளராக உள்ள, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவும், மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவராவார்.
இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்குத் தலைமை தாங்கியிருந்த அவர், வெலிவேரியவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்.
இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இராணுவ தலைமையகத்தில் காலாட்படை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்

சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்

கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆய்வுகளில் சிறிலங்கா, மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர்.

சிறிலங்கா- நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மீன்களின் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் தற்போதைய இருப்பு தொடர்பாக மதிப்பீடுகளைச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.



கடைசியாக, சிறிலங்காவில் 1978- 1980 காலப்பகுதியில், இந்தக் கப்பல் கடல் வள ஆய்வை மேற்கொண்டிருந்தது.

இந்த ஆய்வை மேற்கொள்ளும் நோர்வே கப்பல், நோராட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

சிறையில் காவி களைய மறுக்கும் ஞானசார தேரர்

சிறையில் காவி களைய மறுக்கும் ஞானசார தேரர்


வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தியா எக்னெலிகொடவை, நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு நேற்றுமுன்தினம்,  ஆறு மாதங்கள் அனுபவிக்கும் வகையில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை ஹோமகம நீதிமன்றம்  வழங்கியது.

இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையை ஞானசார தேரர் அணியவில்லை. தொடர்ந்தும் அவர் காவி உடையுடனேயே இருந்து வருகிறார்.

அவர் சிறைக் கைதிகள் அணியும், அரைக்காற்சட்டையை அணிவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறைச்சாலையில் நேற்று ஞானசார தேரரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அவரை மருத்துவர் ஒருவர் பரிசோதித்து, பாதத்தில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்.

ஞானசார தேரருடன், 14 சிறைக்கைதிகள் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஞானசார தேரர் சிறைச்சாலையில், காவி உடையை அணிவதற்கு அனுமதி அளிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, ஹோமகம நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ஞானசார தேரரின் சட்டவாளர்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விரைவில் ஓய்வு

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விரைவில் ஓய்வு



இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே.

போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அங்கிருந்து தப்பி வந்தார்.

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளினால் இவருக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் 51 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த போது, நல்லிணக்கப்  பொறிமுறைக்கான செயலணி தொடர்பாக விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முரண்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

இதையடுத்து. மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே உடனடியாகவே, இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

வேறு உயர் பதவிகள் அளிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த இவர் விரைவில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து  ஓய்வுபெறவுள்ளார்.

இதனால், காலாட்படைகளின் தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

Friday, June 15, 2018

அதிகரிக்கும் சமூக ஊடக நெருக்கடி!

அதிகரிக்கும் சமூக ஊடக நெருக்கடி!

நல்லாட்சி அரசிற்கு தலையிடி தரும் சமூக ஊடகங்களை இலங்கையில் முடக்க அரசு திட்டமிடுவதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் சமுக வலைத்தளங்கள் தொடர்பில், இந்த ஆண்டில் மட்டும் தங்களுக்கு 1100 முறைபாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முகநூல் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதி நேரம் வரை பரபரப்பு...! அதிரடி கோலால் எகிப்தை மிரளவைத்த உருகுவே

இறுதி நேரம் வரை பரபரப்பு...! அதிரடி கோலால் எகிப்தை மிரளவைத்த உருகுவே


21 ஆவது கால்பந்து போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் இன்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு முதல் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் எகிப்து – உருகுவே அணிகள் மோதின.

இந்த போட்டியில் எகிப்து அணியின் நட்சத்திர வீரரான முகமது சாலா காயத்தால் விளையாடவில்லை.

இந்த ஆட்டத்தின் ஆரமபம் முதல் உருகுவே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.அவர்களின் ஆட்டத்திற்கு சவாலாக எகிப்து அணி ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

2 ஆவது பாதி நேரத்திலும் உருகுவே அணியில் கோல் அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை.

இன்னைலியில் ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்த நிலையில் 89ஆவது நிமிடத்தில் வலது பக்கம் கோர்னர் பகுதியில் இருந்து உருகுவே அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது.

கார்லோஸ் சான்செஸ் பந்தை தூக்கி அடிக்க, மரியா கிமேனெஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் உருகுவே 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் காயத்திற்கான நேரம் கணக்கிட்டு 5 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் எகிப்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தை குற்றம் சாட்டும் கோட்டா! ஜனாதிபதி தேத்தல் குறித்து முக்கிய கருத்து

அரசாங்கத்தை குற்றம் சாட்டும் கோட்டா! ஜனாதிபதி தேத்தல் குறித்து முக்கிய கருத்து


இந்த அரசாங்கத்தில் தற்போது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட சட்டமூலம் தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய கோட்டா, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியே முடிவு செய்வார் என்றும், அவருக்கே மக்களின் மனநிலை பற்றி தெரியும் எனவும் கூறினார். 

அதுமட்டுமன்றி தற்போதைய அரசாங்கம் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவர்கள் தண்டிக்கவே பெரும்பாலான நேரத்தை செலவு செய்கின்றனர். 

இதனால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு எனபன வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

அதுமட்டுமன்றி இவ்வாறான செயற்பாட்டையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதே அன்றி நாட்டை அபிவிருத்தி செய்வது அவர்களது நோக்கமில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவையே போட்டியிட வேண்டும் என கூட்டு எதிரணியினர் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வான்கூவர் தீ விபத்து: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பஸ்தர்

வான்கூவர் தீ விபத்து: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பஸ்தர்


கனடா வான்கூவர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்திருந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத் தலைவர் மரத்தாலான அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார்.

“மர வீடுகள் ஆபத்தானவை என்று கூறும் Delshad, நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தப்ப முடியாது, அதற்கு திங்கட்கிழமை நடந்த சம்பவமே சாட்சி” என தெரிவித்துள்ளார்.

Lynn Valley என்னுமிடத்தில் அமைந்துள்ள Mountain Village Garden அடுக்கு மாடிக் குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றியது. இதன் காரணமாக மரத்தாலான அந்த கட்டிடத்திலிருந்து 150 க்கும் மேலானோர் உடனடியாக வெளியேறும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இருப்பினும் இதனால் 16 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது ஒரு வீட்டில் குடும்பத் தலைவரின் மூத்த மகன் ட்ராம்போலினில் குதித்து தப்பி விட மனைவியையும் இளைய 8 வயது மகனும் குதிக்கவில்லை, இதனால் அவர்களை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சிகள் கைக் கூடாதமையால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தின் போது அவருக்கும் படுகாயம் ஏற்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட செய்தியை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லை காணிபிடிப்பு:மைத்திரி,ரணிலிற்கு தகவலாம்!

முல்லை காணிபிடிப்பு:மைத்திரி,ரணிலிற்கு தகவலாம்!

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணி இலங்கை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அவைத் தலைவர் தலைமையிலான மாகாண சபையினர் அண்மையில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.


இதன் பின்னர் மாகாண சபையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடக்கில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது விசேட செயலணி யொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அச் செயலணி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. இந்நிலையிலேயே முல்லைத்தீவு உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன? அமரிக்கவிடம் கோரும் சங்கரி

2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன? அமரிக்கவிடம் கோரும் சங்கரி


2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை எவ்வாறு என அறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாபிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமுகம் தாம் கண்டவற்றையும், கேள்விப்பட்டதையும் தவிர இலங்கையின் பல பகுதிகளில் நடந்தவற்றைப்பற்றி கவனம் செலுத்தவில்லை எனவும் ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளினதும் உறுதியான அபிப்பிராயம் கடந்த 2004 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்திருக்க வேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 2004 ஆம் அண்டு தொடக்கம் 2009 வரை யுத்தம் நீடித்ததமைக்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஆகவே அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பெண்களுக்கு புதிய எச்சரிக்கை!

ரஷ்ய பெண்களுக்கு புதிய எச்சரிக்கை!


உலகக் கிண்ண கால்பந்து தொடரின் போது அதை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன் உடலுறவு வைக்கக் கூடாது என ரஷ்ய பெண்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் டமாரா பிலெட்னியோவா அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் 21 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) ஆரமபமாகிய போட்டிகள் ஒரு மாத காலம் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, அந்த போட்டியை காண வந்த வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ரஷ்ய பெண்கள் பலர் உடலுறவு வைத்துக் கொண்டனர்.

இதனால் அந்த தொடர் முடிந்த சில மாதங்களில் ஆப்ரிக்கா, அமெரிக்கா, லத்வியா, ஆசிய இன கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன.

இதை முன்வைத்து ரஷ்யா எம்.பி டமாரா பிலெட்னியோவா , தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன், ரஷ்ய பெண்கள் யாரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனோகணேசனிற்கு தரகர் வேலை வேண்டாம்?

மனோகணேசனிற்கு தரகர் வேலை வேண்டாம்?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசு உருவாக்கியுள்ள அலுவலகம் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையே.இலங்கை அரசு தனது முகவர்கள் சகிதம் அலுவலகத்தை திறந்து மக்களை ஏமாற்றுகின்றதென முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.இந்த அரசு மாவட்டம் மாவட்டமாக சந்திப்புக்களை நடத்தியும் அலுவலகங்களை திறந்தாலும் சர்வதேச பங்கெடுப்புடனான நீதி விசாரணையே தீர்வைப்பெற்றுத்தருமென சுட்டிக்காட்டியுள்ளன. 


இதனிடையே இலங்கை அமைச்சர்களுள் ஒருவரான மனோகணேசன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கு நட்டஈடு வழங்க வழங்கியுள்ள ஆலோசனையினை அவை நிராகரித்துள்ளன.எங்கள் சார்பில் தரகர் வேலை பார்க்க மனோகணேசனிற்கு யார் அங்கீகாரம் வழங்கியதெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தனது கருத்தில் யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை, மீண்டும், மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இம்மக்களை, அழவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம்,கைம்பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நட்டஈட்டு தொகைகள் வழங்கப்பட வேண்டும். எந்த ஒரு நட்ட ஈட்டு தொகையும், காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. இது எவரையும் விட எனக்கு நன்கு தெரியும். ஆனால், இந்த கணிசமான நட்ட ஈட்டு கொடுப்பனவுகள், இந்த நிர்க்கதியான மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும். இந்த நட்டஈட்டு வழங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும்.

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை வெளிப்படையாக தொடர வேண்டும். அது கட்டாயம் தேவை. ஆனால், இந்த விசாரணை, கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், கைம்பெண்களுக்கும்,நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நட்டஈட்டு தொகைகளை வழங்கப்பட வேண்டும்.

தம் கணவர்மார்களை இழந்த சகோதரிகள், அவர்களது பிள்ளைகளுடன் இன்று பெருந்தொகை குடும்பங்களை தலைமை தாங்குகிறார்கள். இந்நாட்டில் வடகிழக்கில் இத்தகைய கைம்பெண்கள் சுமார் 70,000 பேருக்கு மேல் இருப்பது வரலாற்று கொடுமை. தங்கள் கணவர்மர்களை இழந்த இவர்கள், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, எந்த அளவு சவால் மிக்க வாழ்நிலைமைகளை சந்திக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர் இன்று பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கு உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம். எவ்வளவு நட்ட ஈடு வழங்கப்பட்டாலும், அது காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. அது அடிப்படை உண்மை. ஆனால், அது இந்த நிர்க்கதியாகிவிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து – கிரிக்கெட் போட்டி மூலம் இவ்வளவு வருமானமா?

உலகக்கோப்பை கால்பந்து – கிரிக்கெட் போட்டி மூலம் இவ்வளவு வருமானமா?


ஆசிய நாடுகளில் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கால்பந்து போட்டியே அதிகளவில் விரும்பிப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு கால்பந்து கிளப் போட்டித் தொடர்கள் மற்றும் உலகக் கிண்ண தொடர்கள் மிக அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் வருமானமும் விண்ணைத் தொடும் வகையில் உள்ளது.

குறிப்பாக தொலைக்காட்சி பார்வையாளர்கள் மூலம், வெற்றியாளருக்கான பரிசு, மைதானத்திற்கு வரும் சராசரி பார்வையாளர்கள், வெளிநாட்டவர் வருகை போன்றவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில்,

தொலைக்காட்சி பார்வையாளர்கள்
(கால்பந்து உ.கோ 2014) – 320 கோடி
(கிரிக்கெட் உ.கோ 2015) – 150 கோடி

வருமானம்
(கால்பந்து உ.கோ 2014) – $ 4,826 மில்லியன்
(கிரிக்கெட் உ.கோ 2015) – $ 42.8 மில்லியன்

செலவு :
(கால்பந்து உ.கோ 2014) – $ 2,224 மில்லியன்
(கிரிக்கெட் உ.கோ 2015) – $ 13.9 மில்லியன்

வெற்றியாளருக்கான பரிசு
(கால்பந்து உ.கோ 2014) – $35 மில்லியன்
(கிரிக்கெட் உ.கோ 2015) – $ 3.97 மில்லியன்

மைதானத்திற்கு வரும் சராசரி பார்வையாளர்கள்
(கால்பந்து உ.கோ 2014) – 53,592
(கிரிக்கெட் உ.கோ 2015) – 21,071

வெளிநாட்டவர் வருகை
(கால்பந்து உ.கோ 2014) – 6,00,000
(கிரிக்கெட் உ.கோ 2015) – 1,45,000
ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு...! 2 சிறுமிகள் படுகாயம்

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு...! 2 சிறுமிகள் படுகாயம்


CANADA: ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மாலை 11 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் மைதானத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெளியே காரில் வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 5 மற்றும் 9 வயது சிறுமிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளிடமும் விசாரணையை மேற்கொண்ட போது “மைதானத்தில் ஒரு முதியவர் இருந்தார். இதன் போது மைதானத்திற்கு வெளியில் காரில் இருந்து இறங்கிய நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருப்பினும் எங்கள் மீது குண்டு பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய 10 சிறு நூல்கள் வெளியீடு

அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய 10 சிறு நூல்கள் வெளியீடு

அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மாலை 03 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அருட்தந்தை ம.சக்திவேல் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜாவும் நூல் பதிப்பீட்டுரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்  ஆகியோரும் கருத்துரையினை ஆசிரியர் வே.இந்திரச்செல்வனும் மலையக நாட்டார் பாடல்கள் குறித்து கதிரவேலு விமலநாதனும் உரை நிகழ்த்தவுள்ளனர்.

குறித்த 10 நூல்களில் ஒரு நூலினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும் இரு நூல்களினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர்  கே.ரி. கணேசலிங்கமும் எழுதியுள்ளனர்.
புலிகள் புதைத்த தங்கம் ? -  தோண்டச் சென்றவர்கள் கைது !

புலிகள் புதைத்த தங்கம் ? - தோண்டச் சென்றவர்கள் கைது !



இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தடியில் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் தங்கத்தை தேடி தோண்டி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த ஸ்கேனர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு

இராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு


வடக்கு மாகாணத்தில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற முன்பள்ளிகளை வடமாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்கிறது. அதற்கமைய வடக்கு முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இராஐாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் வியைமாக வடக்கிற்கு வந்திருக்கும் கல்வி இராஐாங்க அமைச்சரிடம் இராணுவத்தினடம் இருக்கும் முன்பள்ளிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தென்பகுதி மீனவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு  - போராட்டத்துக்குத் தயாராகும் முல்லை மீனவர்கள்

தென்பகுதி மீனவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு - போராட்டத்துக்குத் தயாராகும் முல்லை மீனவர்கள்

தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் 4 ஆயிரத்து 500 மீன குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை அங்கீகரிக்க இயலாது எனத் தெரிவித்திருக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம்,  இவை தொடர்பாக பேச்சுவார்த்தை ஊடாக பேசி தீர்ப்பதற்கே நாங்களும் விரும்புகிறோம். அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். இல்லையேல் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து நாங்களும் போராட்டங்களை நடாத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகள் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே மேற்படி விடயத்தை கூறியிருப்பதாக அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை பகுதியை அண்மித்த பகுதியில் புதிதாக வாடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் தொடர்ந்தும் மௌனமாக இருந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் ம க்கள் போராட்டங்களினால் தொடர்ந்தும் கடலட்டை பிடிக்க முடியாத நிலை உருவாகியிருக்கும் நிலையில், முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முல்லைத்தீவு மாவட்ட கட ற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளும்படி  முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்தவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.


மன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்!

மன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்!

மன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானது அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.
மறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள மண்கள் பாரிய அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தூக்கி எறியப்படுகின்றது. மன்னார் மாவட்டம் முழுதும் புழுதிப் புயலின் தாக்கம் காணப்பட்டாலும் மக்கள் அதிகமாக வாழும் சில கரையோர பகுதிகளான சாந்திபுரம் சௌத்பார் தாழ்வுபாடு போன்ற பகுதிகளிலும் எமில்நகர் பனங்கட்டுகொட்டு ஜிம்ரோன்நகர் ஜீவபுரம் போன்ற பகுதிகளிலும் இப் புழுதிப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
குறிப்பாக பாடசலை மாணவர்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளும் அதிக சிரமங்களை எதிர் கொள்கின்றனர் எதிரில் வரும் வாகனம் கூட கண்ணில் புலப்படாத அளவிற்கு காற்றின் வேகத்தின் காரணமாக புழுதிப்புயல் வீசி வருகின்றது காற்றில் எடுத்து வரப்படுகின்ற புழுதி மண் தூசு சிறு கற்கள் கண்ணுள் செல்வதனால் கண் வருத்தம் கண் வீக்கம் போன்ற கண் சம்மந்தப்பட்ட பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட வாய்புகள் காணப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த காரணத்தால் குறித்த பிரதேசத்து மக்கள் வெளி பயணங்களை குறைத்து வீட்டுக்குள் முடங்கி காணப்படுகின்றனர்
குறிப்பாக மாலை நேரங்களில் புழுதி புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் வீடுகளுக்குள் தூசுக்கள் அள்ளி வீசப்படுவதன் காரணமாக வீடுகளின் கதவுகளை கூட திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்

நாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்



வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து கோருமிடத்தே தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்யிட தயாரென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்ற கருத்து தொடர்பில் வினவிய போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலிலே யார் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதென்பதில் நாங்கள் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறோம். எங்களுடைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பங்களையும் கொண்டிருக்கின்றார்கள்.

இது பற்றிய ஆய்வுகள் கருத்துக்கள் வெளிவந்தமிண்ணமிருப்பதும் யாவரும் அறிந்ததே. இது தொடர்பான விடயங்கள் இருக்கையில் பல்வேறு கருத்துக்கள் வரலாம் ஐனநாயக முறைப்படி கட்சிகள் தங்களுடைய கருத்தக்களை முன்வைக்கக் கூடும். அதற்கு நாங்கள் எதிர் அல்ல. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாகாண சபை எந்த தேர்தல் முறையில் நடாத்தப்படும். ஏந்த திகதியில் நடத்தப்படுமென்பது கூட கேள்விக்குறியாக இருக்கிறது. ஆயினும் இந்த வருடத்தில் நடாத்தப்படுமென அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆளுக்காள் மாறி அறிக்கைகளை விட்டாலும் கூட இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

அனேகமாக அடுத்த வருடத்தில் நடைபெற இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளில் மாவை சேனாதிராசாவின் பங்களிப்பு அவருடைய கடந்த கால அரசியல் வாழக்கை, மூப்பு முத்த தலைவர் என்ற வகையில் அவரை எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்திற்கு யாரும் மறுப்புத் தெரிவித்ததாகவும் இல்லை. என்றும் அவர் தெரிவித்தார்.
பேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை

பேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரது தாயாா் அற்புதம்மாள் வேதனையுடன் தொிவித்துள்ளாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா். இந்நிலையில், 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோாி தமிழக அரசு சாா்பில் அனுப்பப்பட்ட மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடா்பாக பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாளிடம் தனியாா் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவா் பதில் அளிக்கையில், பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள். தினம் தினம் சித்ரவதையை அனுபவிப்பதற்கு பதிலாக மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என்று வேதனையுடன் தொிவித்துள்ளாா்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதான நம்பகத் தன்மையை இழந்து விட்டோம். இந்த வழக்கில் தற்போது குடியரசுத் தலைவா் ஏன் வந்தாா் என்று புரியவில்லை. எங்களை குடும்பத்துடன் கருணைக் கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம் என்று அவா் தொிவித்துள்ளாா்.
ஊதுபத்தி விளைவு! எரிந்து நாசமானது பி.எம்.டபிள்யூ கார்

ஊதுபத்தி விளைவு! எரிந்து நாசமானது பி.எம்.டபிள்யூ கார்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து நாசமாகக் காட்சியளிக்கின்றது.
அமொிக்க உளவுப் விமானத் தாக்குதலில் தலிபான் இயத்தின் தலைவர் பலி!

அமொிக்க உளவுப் விமானத் தாக்குதலில் தலிபான் இயத்தின் தலைவர் பலி!

ஆப்கானிஸ்தானில் அமொிக்க வான்படையின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய தாக்குதலில் தொிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமொிக்க இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்றுப் புதன்கிழமை நடத்திய அமெரிக்க ஆளில்லா உளவு விமானம்  தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கொல்லப்பட்ட  முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நாண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளார்.
 முதலமைச்சர் குழு ஆராய்வு:ஆளுநரும் தனது குழுவுடன்!

முதலமைச்சர் குழு ஆராய்வு:ஆளுநரும் தனது குழுவுடன்!


முல்லைதீவு எல்லைக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் நிலசுவீகரிப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு தனது ஆய்வின் முதலாம் கட்டத்தை பூரணப்படுத்தியுள்ளது.நேரடியாக அப்பகுதிகளிற்கு விஜயம் செய்து அக்குழு தனது அறிக்கையினை தயாரித்துவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே கொக்கிளாயில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைக்கு தமிழ் மகனது காணியை வழங்க மிரட்டிவரும் வடக்கு ஆளுநர் மறுபுறம் மக்களது காணிகள் பிரச்சினை தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநரது முகவர்கள் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.ஒருபுறம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு ஈடாக தனித்து நிர்வாகத்தை ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடத்திவருகின்றார்.
இந்நிலையில் முதலமைச்சரின் வசமிருக்கின்ற காணி அமைச்சின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஆளுரது ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவையொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை நேற்று நடாத்தப்பட்டது.
இதில் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தயாரட்ன மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் குணபால வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கிராம சேவையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆயினும் முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் வட மாகாண காணி ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் நாடு தழுவிய ரீதியில் அரச உயர் அதிகாரிகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக நடமாடும் சேவையில் கலந்து கொள்ளவில்லையென சொல்லப்படுகின்றது.
எனினும் தற்போது ரெஜினோல்ட் கூரேயின் இணைப்பாளராக நியமனம் பெற்றுள்ள சுந்தரம் டிவகலாலாவும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.
 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை

இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை



பேர்ண் 14.06.2018

இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம்


அன்பார்ந்த மக்களே!

தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனித நேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத்தப்பட்டது. நிதிமோசடி, பயமுறுத்திப் பணம் சேகரித்தல், பணச்சுத்திகரிப்பு, தவறான ஆவணங்கள் உபயோகித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் குற்றவியல் அமைப்பாகவும் அவ் அமைப்பிற்காக செயற்பட்டமை போன்றன குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டு நடைபெற்றன. மேற்படி வழக்கானது 2018 சனவரி 8ம் நாள்முதல் நடைபெற்று 14.06.2018 வியாழக்கிழமை சுவிற்சர்லாந்து திச்சினோ மாநிலத்தின் பெலின்சோனா நகரில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பெற்றது.

தரணியெங்கும் தன்னிகரில்லாத அர்ப்பணிப்பு நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான, தமிழர்களை மிகவும் கவலையில் ஆழ்த்திய குற்றச்சாட்டான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு என்பதற்கான எவ்வித முகாந்தரமும் இல்லை என்பதை எடுத்துரைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்ட குற்றவியல் செயலில் ஈடுபட்டதிற்கான  ஆதாரங்கள் எவையும் நிரூபனம் ஆகவில்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்த மன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ் மக்களுக்கான கட்டுக்கோப்பான இராணுவக் கட்டமைப்புக்களுடன்  அனைத்துலக நாடுகள் பலவற்றுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்த  அரசியற்றுறையையும்  தன்னகத்தே கொண்டிருந்தது. தம்மை ஒரு விடுதலை இராணுவ அமைப்பாகவே வரையறுத்துக் கொண்டிருந்தனர் என்கின்ற நீதிமன்றின் செய்தியும் எமது போராட்டத்திற்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் கிளையின் மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பெற்ற பணச் சுத்திகரிப்பு,  அச்சுறுத்தி நிதி சேகரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததோடு குற்றஞ்சாட்டப்பட்ட  அனைவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிதிப் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர்களும், வங்கி முகவர்களும் இணைந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் வங்கிக்கடன் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விதிமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பெற்ற 20-24 மாதங்கள் தண்டனையும், அபராதமும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய நாளில் வழங்கப்பெற்ற இத் தீர்ப்பானது,  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பெற்று, பல்லாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்பால் கட்டியெழுப்பப்பெற்ற எமது விடுதலைப் போராட்டம்   நீதியானது என்ற உண்மையை சர்வதேச மன்றில் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்த வழக்கு தொடரப்பெற்ற நாள்முதல் எமது நியாயத்தன்மையையும், எமது மக்களினதும் எமது செயற்பாட்டாளர்களினதும் மனித நேயச்செயற்பாடுகளையும் நிலைநிறுத்த கடுமையாக உழைத்த சட்டத்தரணிகள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கடினமான சுமைகளுக்குள் நின்ற போதும், இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் சுவிஸ் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதித்து எமது தாயகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
                                                       

சுவிஸ் கிளை                                      
தமிழீழ விடுதலைப் புலிகள்


முல்லைத்தீவில் நுண்கடன் நிறுவனத்தினால் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

முல்லைத்தீவில் நுண்கடன் நிறுவனத்தினால் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்



முல்லைத்தீவு நகரில் இயங்கும்  நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த  சுதந்திர ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு  குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண்நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் வீதியில் மறித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. “எவ்வாறு நீ இப்படி செய்தி வெளியிடலாம் ??  நாம் புகைப்படம் எடுப்பதை செய்தியாக் வெளியிட உன்னால் எவ்வாறு முடியும் ?? உன்னை தூக்குவோம் என்ன செய்வோம் என்று தெரியுமா ? இருந்துபார் உனக்கு நாம் யார் என்று காட்டுகின்றோம் என குறித்த நுண் நிதி நிறுவன ஊழியர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தாக்குதல் மேற்கொள்ளவும் முற்பட்டுள்ளார்.



இதனை தொடர்ந்து குறித்த ஊடகவியாலரால் அச்சுறுத்தல் விடுத்த நுண் நிதி நிறுவன ஊழியருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியபட்டுள்ளது.

செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கே கொலை அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு நுண் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் அராஜகம்  முல்லைத்தீவில் தலை தூக்கியுள்ளதையே  இந்த செயற்பாடு புலப்படுத்துகின்றது.