About Me

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆசிய கிண்ண 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 144 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்காளாதேஷ் தேசிய அணியை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது.

பங்காளாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி அந்த அணியின் யாஷவி ஜெய்ஸ்வால் 85 ஓட்டங்களையும், அனுஜ் ராவத் 57 ஓட்டங்களையும் பெற்ற சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தினர். அதன்பின் அணித் தலைவர் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி ஆகியோர் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதன்படி, ஓட்ட வேகம் சடுதியாக அதிகரித்த நிலையில், இருவரும் அரைச் சதம் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 305 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி இந்தியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சகல விக்கட்டுகளையும் இழந்தது.

ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Post a Comment

0 Comments