About Me

3ஆவது ஆண்டாகவும் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து விராட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்துள்ள விராட் கோஹ்லிக்கு தற்போது பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்கோட்டில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 139 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் தனது 24ஆவது சதத்தை எட்டிய கோஹ்லி பல்வேறு சாதனைகளையும் தற்போது தன்வசப்படுத்தியுள்ளார். அந்தவகையில், இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைச்சதங்கள் உட்பட 1,018 ஓட்டங்களை அவர் சேர்த்துள்ளார்.

இதனால், இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 719 ஓட்டங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மேலும், விராட் கோஹ்லி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் 1,215 ஓட்டங்களையும், 2017ஆம் ஆண்டில் 1,059 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6 ஆவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

அவுஸ்ரேலியாவின் மேத்யூ ஹைடன், ஸ்டீவன் சுமித், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments