About Me

முடிந்தால் இடைக்கால அரசாங்கம் ஒன்றை கொண்டுவர முயற்சியுங்கள் மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்

மஹிந்த தரப்பினருடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க சுதந்திரக் கட்சியினர் முயற்சிப்பார்களாயின், ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு முன்னரே தனிப்பெரும் அரசாங்கம் ஒன்றை கொண்டுவரும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துஷார இந்துன்னில் அமரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான செய்திகள் தற்போது ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து நாளை ஜீ.எல். பீரிஸ் இல்லத்தில் விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முயற்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் அச்சப்படாது.

இவ்வாறான முயற்சிகள் 2015 ஆம் ஆண்டில் நாம் வெற்றிப் பெற்றதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதோடு மஹிந்தவை பிரதமராக்குதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், அரசாங்கத்தை கவிழ்ப்போம் என ஒருங்கிணைந்த எதிரணியினரால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இவையணைத்தையும் நாம் தோல்வியடைச் செய்துள்ளோம்.

ஒன்றிணைந்த எதிரணியோ மக்கள் மத்தியில் நாளாந்தம் புதிய கருத்தாடலை தோற்றுவிக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு செயற்பட்டு வருகிறது.

இவ்வாறானவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் இணைந்துகொள்வார்களாயின், அவர்கள் வெட்கமற்றவர்கள் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அத்தோடு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க இந்தத் தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்வார்களாயின், ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் ஒன்றை இலகுவாக ஸ்தாபிக்கும் என்பதையும் நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.

106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு தற்போது இருக்கிறார்கள். பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க இன்னும் ஆறு, ஏழு உறுப்பினர்களே குறைவாக உள்ளது.

இந்தநிலையில் நாம், தனி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதாயின், சுதந்திரக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களே ஆதரவு வழங்குவார்கள். அவர்கள், இப்போதும் தயராகத் தான் இருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஊழல் ஆட்சிக்கு எதிராகத் தான் நாம் அன்று ஒன்றிணைந்தோம். இதற்கெதிராகத் தான் மக்களும் அன்று வாக்களித்தார்கள்.

மீண்டும் இந்தத் தரப்பினரை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவர எவரேனும் முயற்சிப்பாராயின் அது 2015 ஆம் ஆண்டு வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் பாரிய ஒரு துரோகமாகவே கருதப்படும்.

எனவே, முடிந்தால் இடைக்கால அரசாங்கம் ஒன்றை கொண்டுவர முயற்சிகளை எடுக்குமாறு நாம் சவால் விடுக்கிறோம்.

அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்;ட தனி அரசாங்கம் ஒன்றை நாம் ஸ்தாபிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments